search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நரசிம்மர்
    X
    நரசிம்மர்

    கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: நாமக்கல் நரசிம்மசாமி கோவில் நடை அடைக்கப்பட்டது

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல் நரசிம்மசாமி கோவில் மற்றும் அரங்கநாதர் கோவிலின் நடைகள் அடைக்கப்பட்டன.
    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 506 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோல் முககவசம் அணியாமல் சாலைகளில் நடமாடுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருந்து கடைகள், நகைக்கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அரசின் கொரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனிடையே மத்திய அரசு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை அடுத்த மாதம் 15-ந் தேதி வரை அடைக்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நேற்று நாமக்கல்லில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நரசிம்மசாமி கோவில் மற்றும் அரங்கநாதர் கோவிலின் நடைகள் அடைக்கப்பட்டன. மேலும் நாமக்கல் மலைக்கோட்டைக்கு செல்லவும் மே மாதம் 15-ந் தேதி வரையிலோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையிலோ சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக நுழைவுவாயிலில் உள்ள கேட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

    கோவில்களில் வழக்கம்போல் தினசரி பூஜைகள் நடைபெறும் என்றும். ஆனால் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை எனவும் அதிகாரிகள் கூறினர். இதனிடையே கோவில்களின் நடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றதை காண முடிந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதேபோல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக நாமக்கல் நரசிம்மசாமி கோவில் மற்றும் அரங்கநாதர் கோவிலின் நடைகள் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×