search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில்
    X
    மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில்

    மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்

    கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
    நாமக்கல் மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனாவை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    மேலும் தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாமக்கல் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

    நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலாவில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் தீமிதி விழா நடத்தப்படுவது வழக்கம். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து, ஆஞ்சநேயரை வழிபட்டு செல்வார்கள்.

    கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த கோவிலில் தீமிதி விழா ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, ஆஞ்சநேயர் கோவில் தீமிதி விழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் கடந்த ஆண்டு நிறைவேற்ற முடியாத நேர்த்திக்கடனை, இந்த ஆண்டு நிறைவேற்றலாம் என்று காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்தும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×