
இதைத் தொடர்ந்து வெள்ளி யானை வாகனத்தில் தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமானை முருக பக்தர்களும், சீர்பாதத்தினரும் தங்களது உள்ளங்கைகளில் தூக்கினார்கள். மேலும் அவர்கள் தலைக்கு மேலாக முருகப் பெருமானை தூக்கி உள்ளங்கைகளில் சுமந்தபடி மேல ரத வீதியில் இருந்து கோவில் வாசல் வரை ஓட்டமும் நடையுமாக சென்றனர். அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
பொதுவாக, இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தள்ளுவண்டியில் வைத்து நகர் வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை பங்குனிப் பெருவிழாவின் 5-ம் நாள் மட்டும் முருகப் பெருமானை பக்தர்கள் தங்களது உள்ளங்கைகளில் கைப்பாரமாக சுமப்பது விசேஷமாகும். அதுவும் பங்குனி பெருவிழாவின் 5-வது நாள் நிகழ்ச்சியானது கிராம திருவிழாவாக கொண்டாடப்படுவது விசேஷத்திலும் விசேஷமாகும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 28-ந்தேதி பங்குனி உத்திரமும், 29-ந்தேதி சூரசம்ஹாரமும், 30-ந்தேதி பட்டாபிஷேகமும் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 31-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளுகின்றனர்.
திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற ஏப்ரல் 1-ந்தேதி மலையைச் சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கின்றனர்.