search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூத வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் அங்காளம்மன் சித்தூர் நீவா நதிக்கரைக்கு சென்ற காட்சி.
    X
    பூத வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் அங்காளம்மன் சித்தூர் நீவா நதிக்கரைக்கு சென்ற காட்சி.

    சித்தூரில் மயானக்கொள்ளை விழா கோலாகலம்

    சித்தூரில் மயானக் கொள்ளை விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் சித்தூர் மற்றும் தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    சித்தூர் பெஸ்த வீதி தெருவில் அகிலாண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்யா ஸ்வரூபியாய் எழுந்தருளியிருக்கும் சுயம்பு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி மறுநாள் மயானக் கொள்ளை விழா நடப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான மயானக் கொள்ளை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இக்கோவிலில் அம்பாளை வழிபட்டால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குடும்ப கஷ்டத்துடன் வாழ்பவர்களின் கஷ்டம் நீங்கும். நோயால் அவதிப்படுவோர் பூரண குணமடைவர். கோவிலின் தீர்த்தத்தை பருகினால் நோய் நொடி வராது, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    மயானக்கொள்ளை விழாவையொட்டி நேற்று காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் சக்தி கரகம், தீர்த்தம், பூஜை, மூலவருக்கு மஞ்சள் அலங்காரம் நடந்தது.

    மதியம் 12 மணியளவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளான பஜார் தெரு, காந்தி ரோடு, சந்தப்பேட்டை ரோடு வழியாக மேள தாளத்துடன் ஊர்வலமாக நீவா நதி கரைக்கு கொண்டு சென்றனர். அங்கு அமைக்கப்பட்ட தட்சன் உருவப்பொம்மையை வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. விழாவில் சித்தூர் மற்றும் தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மோர், குடிநீர், பிரசாதம் மற்றும் அன்னதானம் ஆகியவைகள் வழங்கப்பட்டது. அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×