
இதற்கிடையில் மேலும் கூடுதல் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு கடந்த 3-ந்தேதி முதல் அனைத்து அர்ச்சனைகளும் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 11-ந்தேதி முதல் கோவிலுக்குள் தங்கத் தேர் உலா நடைபெற்றது. ஆனால் நகர் வீதிகளில் சுவாமி புறப்பாடு இல்லாத நிலை இருந்து வந்தது. கோவிலுக்குள் இருந்து சுவாமி மேள தாளங்கள் முழங்க நகர் வீதிகளில் வலம் வரும் நாளை பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் கடந்த 335 நாட்களுக்கு பிறகு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமியுடன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், மகா தீப, தூப ஆராதனையும் நடந்தது. அதன்பின் மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் அமர்ந்து நகர் உலா வந்தார். சன்னதி தெரு கீழ ரத வீதி, மேல ரத வீதி மற்றும் பெரிய ரத வீதிகளில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 335 நாட்களுக்கு பிறகு சுவாமி எழுந்தருளியதால் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.