
தை அமாவாசையையொட்டி நாளை அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்தொடர் கடற்கரையில் முன்னோர்களை நினைத்து புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேதமந்திர ஓதுவார்களிடம் இருந்து பலிகர்ம பொருட்களை பெற்று தர்ப்பணம் கொடுப்பார்கள். பின்னர் கடலில் புனித நீராடி ஈரத்துணியுடன் வந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள்.
இதையொட்டி கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நிகழ்ச்சியும், தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.