என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆருத்ராவிழா தேரோட்டம்
    X
    ஆருத்ராவிழா தேரோட்டம்

    சிதம்பரம் நடராஜர்கோவில் ஆருத்ராவிழா தேரோட்டம் தொடங்கியது

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்திபெற்ற நடராஜர் கோவில் ஆருத்ராவிழா தேரோட்டம் தாமதத்துக்கு பின் இன்று காலை தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்திபெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனவிழா தேரோட்டம் நடந்துவருகிறது.

    இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரசு விதிகளின்படி ஆருத்ரா தரிசனவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்றும் (29-ந் தேதி), நாளையும் (30-ந் தேதி) ஆருத்ரா தரிசனவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    தேரோட்டத்தை எந்திரம் மூலம் இழுத்து நடத்தலாமா என மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. ஆனால் இதற்கு கோவில் தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கொரோனா விதிகளின்படி உள்ளூர் பக்தர்களுக்கு தேர் இழுக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் வெளியூர் பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சில நிபந்தனைகளுடன் வெளியூர் பக்தர்கள் ஆருத்ரா தரிசனவிழாவில் பங்கேற்கலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆருத்ரா தரிசனவிழாவில் பங்கேற்பவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி சீட்டு பெறவேண்டும் என மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார். ஒரு அனுமதி சீட்டுக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்திருந்தார்.

    ஆருத்ரா தரிசனவிழாவில் ஆன்லைன் பதிவு கட்டாயம் என்ற மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை கண்டித்து கோவில் தீட்சிதர்கள், பக்தர்கள், இந்து அமைப்பினர் சிதம்பரம் நடராஜர்கோவில் முன்பு மறியல் செய்தனர். இதனால் தேரோட்டவிழா நடைபெறுமா? நடைபெறாதா? என்று பக்தர்களிடையே சோகம் ஏற்பட்டது. நேரம் அதிகரிக்க அதிகரிக்க ஏராளமான பக்தர்கள் குவியத்தொடங்கினர்.

    தகவல் அறிந்த ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விடிய விடிய இந்த மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அபிநவ், சப்-கலெக்டர் மதுபாலன் ஆகியோர் பேச்சு நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

    இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் கடந்த ஆனிமாதம் நடைபெற்றதைபோல கோவில் வாளாகத்திலேயே நடராஜர் சுவாமி உள் புறப்பாடு நடைபெறும். ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமியை எழுந்தருள செய்து அபிஷேகம், ஆராதானை நடத்தப்படும். அதிகாலைக்குள் மாவட்ட நிர்வாகம் ஆன்லைன் அனுமதி முறையை முழுமையாக ரத்து செய்தால் மட்டுமே 4 ரத வீதிகளில் தேரோட்டம் வழக்கம்போல் நடைபெறும். இல்லாத பட்சத்தில் கோவிலுக்கு உள்ளேயே சுவாமி தேரோட்டம், ஆருத்ரா தரிசனவிழா நடைபெறும் என்று தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    விடியவிடிய நடந்த போராட்டத்துக்கு பின்பு தேரோட்டத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கலாம் என்று பொது தீட்சிதர்கள் முடிவு செய்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து 4 ரத வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    வழக்கமாக தேரோட்டம் நடைபெறும் நேரத்தில் அதிகாலை 5 மணி அளவில் சித்சபையில் வீற்றுள்ள மூலவரான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், உச்சவமூர்த்திகளான ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியன், ஸ்ரீசண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருள செய்வார்கள்.

    ஆனால் இன்று காலை தாமதமாக நடராஜர் கோவில் சித்சபையில் இருந்து மூலவரான நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், உச்சவமூர்த்திகளான ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியன், ஸ்ரீசண்டிகேசுவரர் மேளதாளம் முழங்க பக்தர்கள் சிவகோ‌ஷத்துடன் சுவாமிகள் எடுத்துவரப்பட்டனர்.

    பின்னர் நடன பந்தலில் இருந்து தேர்நிலையான கீழரதவீதிக்கு சுவாமிகள் வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் சுவாமிகள் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் சிவகோ‌ஷத்துடன் தேர்களை வடம்பிடித்து இழுத்தனர். தேர்கள் தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி வழியாக இன்று மாலை 6 மணி அளவில் தேர் நிலையை வந்தடையும். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.

    அதன்பின்னர் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு இரவு முழுவதும் லட்சார்சனை, சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    நாளை (30-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு மேல் மகாஅபிஷேகம், சொர்ணாபிசேகம், திருஆபரண காட்சி, புஷ்பாஞ்சலி நடக்கிறது. மதியத்துக்கு மேல் பஞ்சமூர்த்தி வீதிஉலாவுக்கு பின்னர் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முகப்பு நடனபந்தலில் 3 முறை வளம் வந்து முன்னும் பின்னும் நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ராதரிசன காட்சி தருவார்கள்.

    அதனைத் தொடர்ந்து சுவாமிகள் புறப்பாடும், சித்சசபை ரகசிய பிரவேசமும் நடைபெறும்.

    நாளை மறுநாள் (31-ந் தேதி) முத்துபல்லக்குடன் விழா முடிவடைகிறது.
    Next Story
    ×