search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி கோவில்
    X
    பழனி கோவில்

    பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று தொடங்குகிறது

    பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
    தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் சரவணப்பொய்கையில் ஆறு செந்தாமரை மலர்களில் 6 குழந்தையாய் தவழ்ந்தபோது கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். அதனால் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமானின் அவதார சிறப்பை விளக்கும் வகையில் கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து முருகன் கோவில்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா இன்று(புதன்கிழமை) காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா 7 நாட்கள் நடக்கிறது. திருவிழாவையொட்டி 6 நாட்கள் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகருக்கு தீபாராதனை, 6.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு, இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 7.30 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 6-ம்நாளான 9-ந் தேதி யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    7-ம் நாளான 10-ந்தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, விஸ்வரூப தரிசனம் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. தொடர்ந்து 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதலும், மாலை 6 மணிக்கு மேல் மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ம் நாளான திருக்கார்த்திகை அன்று மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×