search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆற்றுக்காலில் பொங்கல் விழா நிறைவு நிகழ்ச்சியாக யானை மீது அம்மன் பவனி நடந்த போது எடுத்த படம்.
    X
    ஆற்றுக்காலில் பொங்கல் விழா நிறைவு நிகழ்ச்சியாக யானை மீது அம்மன் பவனி நடந்த போது எடுத்த படம்.

    ஆற்றுக்காலில் பொங்கல் விழா யானை மீது பகவதி அம்மன் பவனி

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவின் நிறைவாக அம்மன் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட யானையில் பவனியாக கொண்டுவரப்பட்ட அம்மனை பக்தர்கள் வழிநெடுக மலர் தூவி வரவேற்றனர்.
    திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 12- ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பெண்கள் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.

    தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அம்மன் பவனி ஆற்றுக்கால் கோவிலில் இருந்து மணக்காடு அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டது. அய்யப்பன் கோவிலில் இரவு ஓய்வுக்கு பிறகு மீண்டும் அம்மன் பவனி நேற்று காலை 8 மணிக்கு அய்யப்பன் கோவிலில் இருந்து புறப்பட்டது.

    அலங்கரிக்கப்பட்ட யானையில் அம்மன் ஊர்வலமாக ஆற்றுக்கால் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டார். வழிநெடுகே பக்தர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். வீடுகளின் முற்றத்தில் தேங்காய் பழத்தட்டுடன், குத்துவிளக்கு ஏற்றி ஆண்களும் பெண்களும் பக்தி பரவசத்துடன் அம்மன் பவனிக்கு வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் மலர் தூவி வரவேற்றனர். மதியம் 12 மணிக்கு பவனி கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து உச்ச பூஜை, தீபாராதனை, உச்ச ஸ்ரீபலி ஆகியன நடந்தது.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். குத்தியோட்ட சிறுவர்கள், தாலப்பொலி நேர்ச்சை சிறுமிகள் இறுதி நேர்ச்சைக்காக கோவிலுக்குள் அழைத்து வரப்பட்டனர். இரவு 9.15 மணிக்கு அம்மனுக்கு காப்பு அவிழ்ப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு 12.15 மணிக்கு நடைபெற்ற குருதி தர்ப்பணத்துடன் பொங்கல் விழா நிறைவடைந்தது.
    Next Story
    ×