search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேட்டுக்குப்பத்தில் திருஅறை உள்ள சித்தி வளாக திருமாளிகையில் திருஅறை தரிசனம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    மேட்டுக்குப்பத்தில் திருஅறை உள்ள சித்தி வளாக திருமாளிகையில் திருஅறை தரிசனம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    வள்ளலார் சித்தி பெற்ற இடத்தில் திருஅறை தரிசனம்

    வடலூர் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற இடத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. ஆண்டு தோறும் இங்கு தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி கடந்த 20-ந்தேதி சத்திய ஞானசபையில் சன்மார்க்க கொடியேற்றம் நடந்தது.

    இதேபோல் வள்ளலார் அவதரித்த இடமான மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கெரித்த கருங்குழி இல்லம், வடலூர் தர்ம சாலை, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் கொடியேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து 21-ந்தேதி (திங்கட்கிழமை) சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதியை தரிசனம் செய்தனர்.

    ஜோதி தரிசனம் முடிந்த பின்னர், மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக திருமாளிகையில் திருஅறை தரிசனம் நடைபெறுவது வழக்கம். இங்குள்ள ஒரு அறையின் உள்ளே சென்ற வள்ளலார் அங்கு உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டு, சித்தி பெற்றார். அந்த அறைக்கு தீபம் காண்பிக்கப்படுவதே திருஅறை தரிசனம் என்பதாகும். அதன்படி மேட்டுக்குப்பத்தில் நேற்று திருஅறை தரிசனம் நடைபெற்றது. முன்னதாக, சத்தியஞானசபையில் வள்ளலார் பயன்படுத்திய பொருட் கள் அடங்கிய (பேழை) பெட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.

    காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அந்த பெட்டி பல்லக்கில் வைத்து மேளதாளங்கள் முழங்க வடலூர் சத்தியஞானசபையில் இருந்து மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமாளிகைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பல்லக்கை கருங்குழியை சேர்ந்த மீனவர் சமூகத்தினர் தங்களது தோளில் சுமந்து சென்றனர்.

    கருங்குழியில் வள்ளலார் வழிபட்ட பிள்ளையார் கோவில், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி ரெட்டியார் இல்லம், வள்ளலார் வழிபட்ட பெருமாள் கோவில், அவர் நீராடிய தீஞ்சுவை நீரோடை வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது கருங்குழி செம்புலிங்கம் குடும்பத்தினர் சீர்வரிசை பொருட்கள் வைத்து வரவேற்று, வழிபட்டனர்.

    11.30 மணிக்கு மேட்டுக்குப்பத்தில் திருஅறை உள்ள சித்திவளாக திருமாளிகைக்கு ஊர்வலம் வந்தடைந்தது. அப்போது அங்கு கிராம மக்கள் பழம், சீர்வரிசை பொருட்களுடன் வரவேற்று, வழிபட்டனர். இதைத் தொடர்ந்து திருஅறை தரிசனம் நடைபெற் றது. சித்தி வளாக திருமாளிகையில் வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையில், 12 மணிக்கு ஞானசபை பூசகர் தீபம் காண்பிக்க, திருஅறை தரிசனம் தொடங்கியது.

    அப்போது அந்த அறையின் முன்பாக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்கிற மகா மந்திரத்தை உச்சரித்தனர். இதையடுத்து பக்தர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக சென்று, திருஅறையை தரிசனம் செய்தார்கள். மாலை 5 மணி வரையில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருஅறை தரிசனத்தை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர்.
    Next Story
    ×