என் மலர்

  ஆன்மிகம்

  வடலூரில் ஜோதி தரிசனம்
  X

  வடலூரில் ஜோதி தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.
  “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி”

  தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவுநாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது.

  இந்த ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன வழிபாடு வருகிற 21, 22-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5.30, 10, மதியம் 1 மணி, இரவு 7,10 மணிக்கு திரை விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும். மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த தைப்பூச ஜோதி தரிசன வழிபாடு எப்படி தோன்றியது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், அதை தோற்றுவித்த வள்ளலார் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  கடலூருக்கு அருகே உள்ள மருதூர் எனும் சிற்றூரில் இராமையா, சின்னம்மை இணையருக்கு 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஐந்தாவது ஆண் குழந்தையாக இராமலிங்கம் பிறந்தார். தந்தை காலமான பின்பு அவரது தாய் தனது குழந்தைகளோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் இராமலிங்கம் கல்வி பயிலத் தொடங்கினார். அடிக்கடி இராமலிங்கம் கந்தகோட்டத்துக் கந்தசாமி கோயிலுக்குச் செல்வார். இளம் அகவையிலேயே இறைவன் மீது மிகுதியான பாடல்களை இவர் பாடியுள்ளார்.

  பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோவிலே கதி என்றிருந்த இராமலிங்கத்தை அவரது அண்ணன் கண்டித்துத் தனது மனைவியிடம் இராமலிங்கத்துக்கு சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கி இராமலிங்கம் வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.

  அவர்களது வீட்டில் இராமலிங்கத்துக்கு மாடியறை ஒதுக்கப்பட்டது. சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் முனைப்பாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் திருத்தணி முருகன் தனக்குக் காட்சியளித்ததாகப் பேரின்பமுற்றுப் பாடல்கள் பாடினார்.

  அவரது பன்னிரண்டாம் வயதில் நாள்தோறும் ஏழுகிணறு பகுதியிலிருந்து நடந்தே திருவொற்றியூர் சென்று வழிபட்டு வரத் தொடங்கினார் இராமலிங்கம், பலரது வற்புறுத்தலுக்கு இணங்கத் தன் இருபத்தேழாவது அகவையில், அவரது தமக்கையின் மகள் தனக்கோடியைத் திருமணம் புரிந்து கொண்டார். எனினும், இராமலிங்கம் அவர்கள் அமைதியை நாடினார். கடவுள் என்றால் என்ன? என்று அறிய விரும்பி, 1858-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல திருத்தலங்களைப் பார்வையிட்டுச் சிதம்பரத்தை வந்தடைந்தார்.

  அங்கே கருங்குழி ஊரின் மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் இராமலிங்கத்தைச் சந்தித்து தனது இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு ண்டிக் கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு அவரது இல்லத்தில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார் இராமலிங்கம். அவர் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்தவர், பின்னர் அதைத் தூய்மையாக்கி எண்ணெய் நிரப்பி வைக்க மறந்துபோனார். கலயத்தில் நீர் அப்படியே இருந்தது.

  அன்றிரவு, இராமலிங்கம் வெகுநேரம் வரையில் எழுதிக் கொண்டிருந்தார். விளக்கில் ஒளி மங்கும்பொதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று நினைத்து விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு ஒளிவிட்டுத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது.

  கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865-ஆம் ஆண்டு இராமலிங்கம் ‘சமரச வேத சன்மார்க்கச் சங்கம்‘ என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் அதைச் “சமரசச் சுத்தச் சன்மார்க்கச் சத்தியச் சங்கம்‘ என்று மாற்றியமைத்தார். அதில் மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள் பலவற்றை அறிவித்தார். உயிர்க்கருணை (‘ஜீவ காருண்ய’) ஒழுக்கத்தை‘ கடைபிடிக்கச் சொல்லி அனைவரையும் வலியுறுத்தினார். பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லா நற்பயன்களுக்கும் மேலானது என்று அறிவுறுத்தி வந்த அவர், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.  கருங்குழிக்குப் பக்கத்தில் வடலூரில் பார்வதிபுரம் என்னும் ஊர் மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867-ஆம் ஆண்டு, மே மாதம் 23-ஆம் நாளன்று அங்கு சமரச வேதத் தருமச்சாலையைத் தொடங்கினார். இங்கு, சாதி, சமய, மொழி, இன, நிறப்பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் அன்று ஏற்றி வைத்த அடுப்பும் இன்று வரை அணையாமல் தொடர்ந்து அன்னம் உருவாக்க எரிந்த வண்ணம் இருக்கிறது.

  தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிளிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்கள் பயன்படாமல் இருந்து வந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். அந்த இடத்துக்குச் ‘சித்தி வளாகத் திருமாளிகை‘ என்றும் பெயர் சூட்டினார். அங்கு அவர் அடிக்கடி ‘பிரமதண்டிகா யோகம்‘ செய்து வந்தார். அதாவது, இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து ‘தியானத்தில்‘ இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் உடலை வெப்ப உடலாக ஆக்கி வந்தார்.

  இறைவனை ஒளி வடிவமாகப் போற்றிய ராமலிங்க அடிகளார் வள்ளலார் என்று அறியப்பட்டு சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் ஆண்டு அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை‘ என்று பெயர் சூட்டினார்.

  25.1.1872, தை மாதம் 13-ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஜோதி தரிசனம் செய்யும் வழிபாட்டு விழா நடைபெற்றது. 20.10.1973, அன்று திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார். அதுவே ‘பேருபதேசம்‘ என்று சொல்லப்படுகிறது.

  தமது அறையில் எப்போதும் எரிந்து வந்த தீப விளக்கை சித்திவளாகத் திருமாளிகையின் முன்புறம் எடுத்து வைத்தார். மக்களிடம், தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொன்னவர், தெய்வ பாவனையை இந்த தீபத்தில் கண்டு ஆராதியுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்‘ என்று உறுதி அளித்தார்.

  1874-ஆம் வருடம் தை மாதம் 19-ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருள் வாழ்த்து வழங்கி விட்டு இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டார். அவரது விருப்பப்படி, அவரது முதன்மைச் சீடர்கள் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.

  அன்று முதல் வள்ளலார் இராமலிங்கம் அடிகளார், உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல் அருவமாக நிறைந்து அருட்பெருஞ்சோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். வள்ளலார் ஏற்றி வைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. அவர் சித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து ஒருமை வழிபாடு செய்யலாம். மாதந்தோறும் பூச நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையைப் பலகணி வழியாகப் பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.

  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஒளி இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், தன்னலம். பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது. இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைக் காண்கிறான்.

  ஜோதி தரிசனகாட்சி என்பதும் இது போலத் தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபத்தின் ஜோதி ஒளியைக் காண இயலும். கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள். அதனால் தான் இன்றும் ஒளிக்காட்சி முன்பு ஏழு வண்ணத் திரைகள் விலக்கப்படுகிறது. திரைகள் விலகியதும் ” அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி” கண்ணாடியில் கண்டதும் நம் உள்ளே கண்டிப்பாக அதிர்வு ஏற்படும்.

  அவர் ஏற்றிய அந்த அகல்தீபம் இன்று வரை அணையா ஒளியாகப் பேணப்பட்டு வருகிறது. அது தான் அந்த அறைக்குள் இருக்கும் ஆறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டு எதிரொளிக்கிறது. அந்தத் தீபத்தின் எதிரொலியே ‘ ஒளி‘ ஆகும். அந்தக் கண்ணாடி, வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

  இந்த ஜோதி தரிசனத்தை காண்பதற்கு 21-ந்தேதி (திங்கட்கிழமை) லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்த வண்ணம் காத்திருப்பார்கள். இறைக்காட்சியோடு, தங்களையே தாங்கள் காணும் உணர்வு இந்தப் பொழுதில் கிடைத்து விடுவதாக மரபு. இந்த ஜோதி தரிசன வழிபாட்டை காண தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது வடலூர் சென்று திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் சத்திய ஞானசபையைப் பார்க்க வேண்டும். அது உங்களை ஞானம் உள்ள பக்குவப்பட்ட மனிதனாக மாற்றும். 
  Next Story
  ×