search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டபோது எடுத்தபடம்.
    X
    ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டபோது எடுத்தபடம்.

    ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது

    தீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வெள்ளிக் கிழமை) சாமி தரிசனம் செய்கிறார்.
    ஹாசன் டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி மட்டும் திறக்கப்படுவது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும். கோவில் நடை அடைக்கும்போது, அம்மன் கருவறையில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். மேலும் பூவும் வைக்கப்படும். அந்த பூ அடுத்த ஆண்டு கோவில் நடை திறக்கும் வரை வாடாமல் இருக்கும். மேலும், கோவிலில் ஏற்றப்படும் விளக்கும் அடுத்த ஆண்டு நடை திறக்கும்வரை தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும். நடை திறக்கும்போது தான் அந்த விளக்கும் அணையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்த கோவிலுக்கு கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங் களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அரசியல்வாதிகளும், முக்கிய பிரமுகர்களும் இங்கு வந்து ஹாசனாம்பாவை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

    அத்தகைய சிறப்புமிக்க ஹாசனாம்பா கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. நேற்று மதியம் 12 மணி அளவில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ் வாழை மரத்தை வெட்டி, பாரம்பரிய முறைப்படி கோவில் நடையை திறந்தார். பின்னர் மன்னர் குடும்பத்தினர் சார்பில், ஹாசனாம்பா கோவிலுக்கு முதலில் சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்பின்னர், அரசு கருவூலத்தில் உள்ள நகைகள் பாதுகாப்பாக எடுத்து வந்து, ஹாசனாம்பா சிலைக்கு அணிவிக்கப்படும். இதில், தர்மஸ்தலா கோவில் தர்ம அதிகாரி வீரேந்திர ஹெக்டே, மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    மன்னர் குடும்பத்தை சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ், வாழை மரத்தை வெட்டியபோது எடுத்தபடம்.

    இன்று கோவில் நடை திறந்ததும், கருவறை உள்பட கோவில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் முதல் நாளான நேற்று பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    நாளை முதல் 9-ந்தேதி வரை 24 மணி நேரமும் ஹாசனாம்பாவை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஹாசனாம்பா கோவிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் என தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாசனாம்பா கோவில் மற்றும் ஹாசன் டவுன் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாசனாம்பா கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    நேற்று முதல் 9-ந்தேதி மதியம் 2 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் பக்தர்கள் 24 மணி நேரமும் ஹாசனாம்பாவை தரிசனம் செய்யலாம். முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்ய உள்ளார். ஹாசனாம்பா கோவில் உள்ளே பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×