search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று 2-வது நாளாக பெண்கள் பொங்கல் வைத்தனர்.
    X
    கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று 2-வது நாளாக பெண்கள் பொங்கல் வைத்தனர்.

    கோட்டை மாரியம்மன் கோவிலில் 2-வது நாளாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று 2-வது நாளாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.

    இந்தநிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது நேற்று தொடங்கியது. எனினும் நேற்று முன்தினமே ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். தொடர்ந்து இரவு விடிய, விடிய கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    சேலம் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்ததையும் படத்தில் காணலாம்.


    நேற்று 2-வது நாளாக கோவில் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தினார்கள். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. கோவிலில் திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆடிப்பண்டிகையை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களிலும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், 14-ந் தேதி பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடக்கிறது.

    இதேபோல் சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன்கோவில், கடைவீதி சின்ன மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டை புது மாரியம்மன் கோவில், சஞ்சீவராயன் பேட்டை மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 
    Next Story
    ×