search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெற்றி மீது வெற்றி வரும்
    X

    வெற்றி மீது வெற்றி வரும்

    அம்பிகை பிரதானமாக அமர்ந்து அருள்பாலிக்கும் எத்தனையோ அம்மன் சக்தித் தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அருள் அலை வீசுவதாக இருந்திருக்கும்.
    அம்பிகை பிரதானமாக அமர்ந்து அருள்பாலிக்கும் எத்தனையோ அம்மன் சக்தித் தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அருள் அலை வீசுவதாக இருந்திருக்கும்.

    சில தலங்களில் துர்க்கை அம்மனின் ஆக்ரோஷத்தை காண முடியும். சில தலங்களில் லட்சுமியின் கருணை இருப்பதை உணரலாம். சில ஆலயங்களில் சரஸ்வதியின் அருளை பெற முடியும்.

    இந்த மூன்று சக்திகளும் ஒருங்கிணைந்து தரும் அருளை ஒரே இடத்தில் பெற முடிந்தால் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கல்வியா, செல்வமா, வீரமா... அனைத்தும் ஒரே இடத்தில் உங்களுக்கு கிடைக்கிறது என்றால்... அதற்கு எவ்வளவு அதிர்ஷ்டமும், பாக்கியமும் செய்திருக்க வேண்டும்.

    இந்த சிறப்புக்குரிய இடம் - கொல்லூர் மூகாம்பிகை ஆலயம். இந்த ஆலயம் கர்நாடகா மாநிலத்தில் மேற்கு கடலோர மாவட்டங்களில் ஒன்றான உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவளை நம்பி நீங்கள் கொல்லூர் சென்று வந்தால் நிச்சயமாக அவள் உங்களை மாமன்னராக வாழ வைப்பாள். அதற்கேற்ப உங்களுக்கு வெற்றி மீது வெற்றிகள் வரும்.

    இத்தகைய சிறப்புமிக்க இந்த தலம் கொல்லூர் குடசாத்திரி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. இதன் அருகே சவுபர்ணிகை என்ற நதி ஓடுகிறது. சென்னை மற்றும் வட நாட்டிலிருந்து இத்தலம் செல்ல விரும்புபவர்கள் ரயில் மூலம் மங்களூரை அடைய வேண்டும். அங்கிருந்து கொல்லூருக்குச் செல்ல பஸ் வசதி மற்றும் கார் உண்டு. நான்கு மணிநேரப் பயணம். இத்தலம் மங்களூரிலிருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

    மங்களூர்&குந்தாபூர் வழியாகவும் எளிதில் கொல்லூரை சென்று அடையலாம். இத்தலத்தில் குடி கொண்டிருப்பவள் அன்னை ஸ்ரீமூகாம்பிகை ஆவாள். இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். பெருமையும், புகழும் மிக்கது. நம் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் அன்னையைக் காண தினமும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இது மேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஏழு புண்ணியத் தலங்களில் ஒன்றாகும்.

    கோலமகரிஷி என்பவர் இங்கு பல ஆண்டுகளாக தவம் இயற்றி வந்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி அவரிடம் கூறியதாவது, ''முனிவரே உன் தவத்தால் நாம் பெரிதும் மகிழ்ந்தோம். தானாகத் தோன்றிய ஜோதி லிங்கத்தை நீ வழிபடுவாயாக. உனக்கு ஆதிபராசக்தி அந்த இடத்தில் காட்சி தந்தருள்வாள்'' என்றார்.

    அந்த மகரிஷி தவ வலிமையால் அந்தப் பகுதி புனிதம் அடைந்தது. அந்த மகானின் பெயரால் அத்தலம் கோலாபுரம் என்றழைக்கப்பட்டு வந்தது. பிறகு அது கொல்லூர் என மருவிற்று. இந்தக் கொல்லூர் ஓங்கி வளர்ந்த மலைச் சிகரங்களாலும், பச்சை பசேல் ஆன மரம், செடி, கொடிகளாலும் சூழப்பட்டது. மிகவும் வனப்புமிக்க பிரதேசமாகும். ஸ்ரீசக்கர வடிவத்தில் இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தலத்தின் அமைதியும், அழகும் நிறைந்த சூழ்நிலையானது அங்கு அன்னையை நாடி வரும் பக்தர்களுக்கு மன சாந்தியையும், பக்தி நெறியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. திருப்பிச்செல்ல மனமே வராது.

    இக்கோவிலின் பக்கத்தில் விருந்தினர் தங்கும் விடுதி, பணித்துறையினர் தங்கும் வசதி, அர்ச்சகர்களின் இல்லங்கள், ராம கிருஷ்ண யோகாசிரமம், ஸ்ரீசங்கர மடம் முதலியவை இருக்கின்றன. தற்போது சுமார் 1500 குடும்பங்கள் கொல்லூரில் வசித்து வருகின்றனர்.

    இக்கோவிலின் மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் சவுபர்ணிகை ஆறு ஓடுகிறது. அதன் கரையில் மகிழ மரங்கள் மலரை சொரிந்து நறுமணம் பரப்பிக் கொண்டு இருக்கின்றன. அங்கே ஒரு விநாயகர் கோவில் உள்ளது. சவுபர்ணிகையில் நீராடி, விநாயகரை வணங்கிய பின்தான் அன்னையை தரிசிக்க செல்ல வேண்டும்.
    Next Story
    ×