search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மூகாம்பிகை சிலை உருவானது எப்படி?
    X

    மூகாம்பிகை சிலை உருவானது எப்படி?

    ஆதிசங்கரர் தான் தியானத்தில் கண்டு களித்த தாய் மூகாம்பிகையின் திருக்காட்சியை மற்றவர்களிடம் கூறினார். அம்பிகையின் தோற்றத்தை அப்படியே சிலையாக வடிக்க முடிவு செய்தார்.
    ஆதிசங்கரர் தான் தியானத்தில் கண்டு களித்த தாய் மூகாம்பிகையின் திருக்காட்சியை மற்றவர்களிடம் கூறினார். அம்பிகையின் தோற்றத்தை அப்படியே சிலையாக வடிக்க முடிவு செய்தார். சிலை வடித்து எடுக்கும் பரம்பரையில் மிகத் தேர்ச்சிப் பெற்ற ஸ்தபதி ஒருவரை அழைத்து திருவுருவச்சிலையை செய்ய ஏற்பாடு செய்தார்.

    அதன்படி மூகாம்பிகை சிலை பஞ்சலோகத்தில் வடிக்கப் பெற்றது. திருவுருவச்சிலை மத்தியில் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலும் மற்றும் இதன் இருபுறமும் நின்ற நிலையில் இரு அம்மன் திருவுருவத்தையும் (லட்சுமி மற்றும் சரஸ்வதி) தன்னுடைய தியானத்தில் கண்டபடி தத்ரூபமாக வடிக்கப்பட்டு இருப்பதைக் கண்ட ஆதிசங்கரர் மெய் சிலிர்த்து பக்திப் பரவசமானார். இதுவும் தாய் மூகாம்பிகையின் அதி அற்புத லீலை என்று மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
    லிங்கப்பெருமை

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்ள கருவறை லிங்கம் சுயம்புலிங்கமாகும். இச்சுயம்பு லிங்கம் தரைக்கு மேலே சற்று நீட்டிக்கொண்டு சம அளவில் கோள அமைப்பில் சக்தி நிறையப்பெற்றதாக புனிதத் தன்மையுடன் சிறந்து விளங்குகிறது.

    இச்சுயம்பு லிங்கத்தின் உச்சி மத்தியில் ஒரு தங்க ரேகையால் இரு சமமற்ற பாகங்களாக, வலது பாகம் சிறியதாகவும். இடது பாகம் பெரியதாகவும் உள்ளவாறு பிரிக்கப்பட்டுள்ளது. வலது பாகம் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களைப் புரிகின்ற மும்மூர்த்திகளான சிவ, விஷ்ணு, பிரம்மா இவர்களைக் குறிப்பதாகும். அதேபோல இடதுபாகம் ஆதி சக்தியின் மூன்று வித ரூபங்களாக திகழும் மஹாகாளி, மஹாசரஸ்வதி, மஹாலட்சுமி ஆகிய இவர்களைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

    பொதுவாக வேதங்களில் இடதுபாகம் பெண்களின் இடத்தைக் குறிப்பதாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இச்சுயம்பு லிங்கத்தின் இடப்பகுதி பெரியதாக இருப்பதால் கருணையே வடிவான ஸ்ரீ மூகாம்பிகை இத்தலத்தில் கொலுவிருந்து பேரருள் புரிவதாக எல்லோராலும் போற்றி வணங்கப்படுகிறாள்.

    முப்பெரும் தேவர்களும் முப்பெரும் தேவியரும் நிறைந்த புனிதமிக்க ''சிவசக்தி'' சொரூபமாக இச்சுயம்புலிங்கம் திகழ்வதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சுயம்புலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படும் போது கருவறை சோமுகம் வழியாக வெளியேறும் புனித நீரை பிடித்து குடிக்கவும், தலையில் தெளித்துக் கொள்ளவும் பக்தர்கள் போட்டி போடுவதை எப்போதும் பார்க்க முடிகிறது.

    கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகைத்தலம் 51 சக்தி பீடங்களில் இடம் பெறவில்லையாயினும் இந்தப்பீடமே முதன் முதல் ஆதிசங்கரரால் புனிதப்படுத்தப்பட்டு நிறுவப்பட்ட பீடம். எனவே இதனை அர்த்தநாரி பீடம் என அழைக்கிறார்கள்.

    உலகிலேயே தொன்மையான மலை மேற்குத் தொடர்ச்சி மலை. அதன் உட்பிரிவுதான் குடசாத்ரி என்ற புனிதமான மலை. ரிஷிகளும் சித்தர்களும் இன்றும் தவம் செய்து கொண்டிருக்கும் புண்ணியத் தலம் இது.

    இங்கு உற்பத்தியாகும் நதியே சௌபர்ணிகா நதி. இதன் கரையில் கருடபகவான் தவம் செய்து தனது குலத்தில் நிலவியிருந்த பலவிதமான சாபங்களையும் தோஷங்களையும் நீக்கிக்கொண்டான். கருடனின் பெயர் சுபர்ணன் என்பதினால், இந்த ஆறு சுபர்ணிகா என்று பெயர்பெற்றது. ஒரு குடும்பத்தில் தீராத பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வந்தால் இந்த சுபர்ணிகா நதிதீர்த்தத்தில் நீராடி தூய மனதுடன் மூகாம்பிகையை வழிபாடு செய்தால் பேரானந்தம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
    Next Story
    ×