என் மலர்

  ஆன்மிகம்

  கோவில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கிய போது எடுத்த படம்.
  X
  கோவில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கிய போது எடுத்த படம்.

  தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக-கர்நாடக மாநில பக்தர்கள் இணைந்து கொண்டாடிய தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதில் பூசாரி மட்டும் தீ மிதித்தார்.
  ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழக-கர்நாடக மாநில பக்தர்கள் இணைந்து குண்டம் திருவிழாவை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். விழாவில் கோவிலின் தலைமை பூசாரி மட்டுமே குண்டம் இறங்குவது தனிச்சிறப்பாகும். இதில் 3 நாட்கள் பக்தர்கள் விரதம் கடைபிடிப்பது வழக்கம்.

  அதன்படி இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி கடந்த 14-ந் தேதி பக்தர்கள் விரதம் கடைபிடிக்க தொடங்கினார்கள். அன்று இரவு மாரியம்மனின் உற்சவ சிலை மேள வாத்தியங்கள் முழங்க தொட்டகாஜனூர் செல்லும் வழியில் உள்ள ஆற்றிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அம்மன் உற்சவ சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

  நேற்று முன்தினம் அதிகாலையில் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னர் காலையில் இருந்து மாலை வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. பின்னர் கோவிலின் முன்பகுதியில் குண்டம் அமைக்கும் பணி நடந்தது. பெரிய மர விறகுகள் அடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து குண்டம் பற்ற வைக்கப்பட்டது. இரவு மாரியம்மனுக்கு மலர் மற்றும் ஆபரணங்களினால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனின் வீதிஉலா நடந்தது. இரவு முழுவதும் அம்மன் தாளவாடியில் உள்ள ஒவ்வொரு வீதியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  நேற்று அதிகாலை பக்தர்கள் பலர் வீடுகளில் இருந்து கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்து மாரியம்மனுக்கு அருகில் வைத்து பூஜை செய்தனர். காலை 6 மணி அளவில் கோவிலில் இருந்து பூசாரிகள் மற்றும் பக்தர்கள் மீண்டும் தாளவாடி ஆற்றுக்கு சென்றனர். அங்கு மாரியம்மன் சிலை மற்றும் காவல் தெய்வங்களான பீரேஸ்வரசாமி, காரேஸ்வரசாமிகளின் உருவங்கள் தாங்கிய பல்லக்குகள் சுத்தம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டன. ஆற்றங்கரையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூக்களால் பல்லக்குகள் அலங்காரம் செய்யப்பட்டன.


  மலர் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.


  அங்கிருந்து பக்தர்கள் சிலர் பல்லக்குகளை சுமந்து ஆற்றங்கரையில் உள்ள அரசமரத்தடி விநாயகர் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு அம்மன் சிலையுடன் கோவில் பூசாரி சிவண்ணா வந்தார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் உற்சாகமாக ஊர்வலத்தை தொடங்கினார்கள். சாமி பல்லக்குகளை சுமந்து கொண்டு வந்த பக்தர்கள் சுழன்று சுழன்று ஆடினார்கள்.

  ஊர்வலத்தில் மைசூரை சேர்ந்த சிலர் வீரபத்ரா வேடம் அணிந்தும், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் டிரம்செட் வைத்தும் நடனம் ஆடினார்கள். பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சிலர் குறவர் வேடமணிந்து நடனம் ஆடினார்கள்.

  அம்மன் ஊர்வலமாக வந்தபோது வழிநெடுகிலும் காத்திருந்த பெண் பக்தர்கள் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை போன்றவற்றை ஒரு தட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அப்போது அம்மன் சிலையுடன் வந்த பூசாரிக்கு பக்தர்கள் மாலை அணிவித்து பாதபூஜை செய்தனர்.

  ஆற்றில் இருந்து புறப்பட்ட அம்மன் ஊர்வலம் தொட்டகாஜனூர்ரோடு, தாளவாடி பஸ் நிலையம், தலமலைரோடு, ஓசூர்ரோடு, சாம்ராஜ்நகர்ரோடு, நேதாஜிவீதி வழியாக வந்தது. அதன்பின்னர் அம்பேத்கர் வீதியில் அம்மன் ஊர்வலம் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மன் வரும் வழித்தடமான அம்பேத்கர் வீதி முழுவதும் மலர்களால் பாதை உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் சுமார் 2 டன் எடையுடைய செண்டுமல்லி, சம்பங்கி, ரோஜா, மல்லி ஆகிய மலர்கள் 100 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டது. அம்மனுடன் வந்த பூசாரி மலர் படுக்கையின் மீது நடந்து சென்று அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தார்.


  குண்டம் திருவிழாவை காண மாரியம்மன் கோவில் மற்றும் பள்ளிவாசல் முன் கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

  அதன்பின்னர் படைக்கலம் ஏந்தி வந்த பூசாரிகள் காலை 10 மணிஅளவில் கோவிலுக்கு வந்தனர். அப்போது சுமார் 60 அடி நீளத்தில், 2 அடி உயரத்தில் குண்டம் தயார் நிலையில் இருந்தது. வெட்டு அரிவாள் ஏந்தி அருள் பெற்று ஆடிக்கொண்டு வந்த பூசாரி சந்திரசேகர் குண்டத்தில் எலுமிச்சை பழத்தை வீசினார். தொடர்ந்து தேங்காய் உடைத்தார்.

  இதையடுத்து தலைமை பூசாரி சிவண்ணா குண்டத்தில் இறங்கி தீ மிதித்தபடி கோவிலுக்கு சென்றார். அப்போது குண்டத்தை சுற்றிலும் நின்றுகொண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் பக்திகோஷம் எழுப்பினார்கள். விழாவில் பூசாரி ஒருவர் மட்டுமே குண்டம் இறங்குவதால் கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா தீ மிதித்ததும் பக்தர்கள் பலர் குண்டத்தில் உப்பு, மிளகு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் போன்ற பொருட்களை வீசினார்கள்.

  இந்த குண்டம் திருவிழாவில் தாளவாடி, தொட்டகாஜனூர், தலமலை, கோடிப்புரம், எரகநல்லி, சாம்ராஜ்நகர், குண்டல்பெட், சிக்கோவா, மைசூர் உள்பட தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய 2 மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  திருவிழாவையொட்டி சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில் தாளவாடி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
  Next Story
  ×