search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவெள்ளறை பெருமாள் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    திருவெள்ளறை பெருமாள் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர் திருவிழா நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று மூலஸ்தானத்தில் இருந்து பெருமாள் தாயாருடன் புறப்பட்டு அனந்தராயர் மண்டபத்திற்கு காலை 4.15 மணியளவில் வந்தடைந்தார். இதனை தொடர்ந்து கொடிபடம் திருவீதி உலா நடைபெற்றது.

    பின்னர் காலை 5.45 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு 7.15 மணியளவில் பெருமாள் தாயாருடன் புறப்பாடு நடைபெற்றது. தாயார் சன்னதியில் இரவு 8 மணியளவில் திருமஞ்சனம் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணியளவில் கற்பக விருட்சத்தில் புறப்பாடு நடைபெற உள்ளது. அதன் பின்னர் காலை 9 மணியளவில் காளவாய்ப்பட்டி ஆஸ்தான மண்டபத்தில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளுகிறார். மாலை 6.30 மணியளவில் அனுமந்த வாகனத்தில் புறப்பாடும், திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

    இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் பெருமாள் தாயாருடன் கோவிலில் இருந்து புறப்பாடு நடைபெற்று பூனாம்பாளையம், மண்ணச்சநல்லூர், நொச்சியம் ஆகிய ஊர்களில் வழிநடை உபயங்கள் கண்டு அதன் பின்னர் கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் நாளை(சனிக்கிழமை) நள்ளிரவு 1 மணியளவில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கோவிலுக்கு புறப்பாடு நடைபெறும். இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 24-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 25-ந் தேதி சப்தாவரணம் திருவீதி ஏற்பாடும், 26-ம் தேதி ஆளும் பல்லக்கில் திருவீதி புறப்பாடும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ரெத்தினவேல் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×