என் மலர்

  ஆன்மிகம்

  பக்தனுக்காக விசுவாமித்திர மாமுனிவர் உருவாக்கிய ‘திரிசங்கு சொர்க்கம்’
  X

  பக்தனுக்காக விசுவாமித்திர மாமுனிவர் உருவாக்கிய ‘திரிசங்கு சொர்க்கம்’

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனது பூதவுடலுடன் சொர்க்கம் போக எண்ணிய திரிசங்கு என்னும் அரசனுக்காக விசுவாமித்திர மாமுனிவர் தனது தவவலிமையால் ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையே உருவாக்கிய தனி சொர்க்கத்தை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
  சூரிய வம்சத்து மன்னன் திரிதஷ்வனுக்குப் பிறகு மன்னராகப் பதவியேற்றவர் திருயருனி. இவர் தனது வாழ்க்கையில் நன்னெறிகளையும், நன்னடத்தைகளையும் கடைப்பிடித்து நீதிநெறி தவறாமல் நல்லாட்சி செய்து வந்தார். அவரது ஆட்சியில் அந்நாட்டு மக்கள் எந்தக் கவலையுமின்றி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தனர்.

  திருயருனியின் மகன் சத்தியவிரதன், தந்தையின் குணத்திற்கு நேர் எதிராக, அதர்ம வழியில் நடக்கத் தொடங்கினான். அவனுடைய தவறான செயல்பாடுகளால், அந்நாட்டு மக்கள் பெரிதும் துன்பமடைந்தனர். அவனால் பாதிக்கப்பட்ட மக்கள், அவனது தவறான செயல்களை மன்னரிடம் சொல்லி வருத்தப்பட்டனர்.

  அதனைக் கேட்ட மன்னர் அவனை நல்வழிப்படுத்துவதற்காக வசிஷ்ட முனிவரிடம் அனுப்பி வைத்தார். முனிவரும் அவனுக்குப் பல அறிவுரைகளைச் சொன்னார். ஆனால், அவன் எதையும் கேட்பதாக இல்லை. தொடர்ந்து தீய செயல்களையே செய்து கொண்டிருந்தான். முனிவர் அவனை நல்வழிக்குத் திருத்த இயலாது என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்.

  தருமநெறிப்படி வாழாத தன் மகன் மீது கோபம் கொண்ட மன்னன் திருயருனி, அவனை நாட்டைவிட்டு வெளியேற்றினார். நாட்டை விட்டு வெளியேறிய சத்தியவிரதன், அருகிலிருந்த காட்டுக்குள் சென்று வாழத் தொடங்கினான்.

  இந்த நிலையில் விசுவாமித்திர முனிவர், தனது மனைவி, மக்களை விட்டுவிட்டு, கடுந்தவம் செய்வதற்காகத் தனிமையான இடம் ஒன்றைத் தேடிச் சென்று விட்டார். அந்தக் காலத்தில் மழை பெய்யாமல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவரது குடும்பத்தினருக்குத் தேவையான உணவு கிடைக்காமல், அவர்கள் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர்.

  விசுவாமித்திர முனிவர் குடும்பத்தினர் பட்டினி கிடப்பதை அறிந்த சத்தியவிரதன், அந்தக் குடும்பத்திற்குத் தேவையான உணவினைத் தேடிக் கொண்டு போய்க் கொடுத்து, அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவனுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது வசிஷ்ட முனிவர் வளர்த்து வந்த பசுக்களில் ஒன்று, அவனின் கண்ணில் பட்டது.

  அந்தப் பசுவைத் திருடிக் கொண்டு சென்ற அவன், அதைக் கொன்று அதன் இறைச்சியை விசுவாமித்திரரின் மனைவி, மக்களுக்குக் கொடுத்து, தானும் உண்டான். பசு காணாமல் போனதை அறிந்த முனிவர், ‘என்ன நடந்தது?’ என்பதைத் தனது ஞான திருஷ்டியால் கண்டறிந்தார்.

  அவர் காட்டிற்குள் இருந்த சத்தியவிரதனைச் சந்தித்து, ‘பசுவைக் கொல்வதே பாவம். ஆனால் நீ, அதை கொன்று, இறைச்சியையும் சாப்பிட்டு மிகப்பெரிய பாவம் செய்து விட்டாய். இதனால் உனக்கு இந்தப் பிறவியில் சொர்க்கம் செல்ல முடியாது. பசுவைக் கொன்று தின்ற பாவத்திற்காக நீ, இன்னும் பல பிறவிகள் எடுக்க வேண்டியதிருக்கும்’ என்றார்.  ‘பசிக்கு உணவில்லாத போது, பசு மட்டுமல்ல, எதைக் கொன்று சாப்பிடுவதும் தவறில்லை. உங்களுடைய அறிவுரை எதையும் கேட்க நான் தயாராக இல்லை’ என்றான் சத்தியவிரதன்.

  கோபமடைந்த முனிவர், ‘தந்தையின் நல்லுரையைக் கேட்காதது, பசுவைக் கொன்றது, கொன்ற பசுவின் இறைச்சியைத் தின்றது என்று மூன்று பாவங்களைச் செய்த நீ, இனி ‘திரிசங்கு’ (மூன்று பாவங்களைச் செய்தவன்) என்று அழைக்கப்படுவாய். மன்னர் குலத்தில் பிறந்த நீ, மிகவும் தரம் தாழ்ந்த நிலையை அடைவாய், உன் உடல் அருவருக்கத்தக்கதாக மாறிப் போகும்’ என்று சாபம் கொடுத்தார்.

  முனிவர் கொடுத்த சாபத்தைக் கேட்டு, அவன் எந்த அதிர்ச்சியும் அடையவில்லை; அமைதியாக இருந்தான். தான் செய்தது தவறு என்று உணராமல் இருந்த அவனைக் கண்ட முனிவர் அங்கிருந்து சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில், சத்தியவிரதனின் உடல் அருவருப்பு கொண்டதாக மாறியது.

  அவன், விசுவாமித்திரரின் குடும்பத்தினரைச் சந்தித்து, வசிஷ்டர் தனக்கு அளித்த சாபம் பற்றி கூறினான். அதன் பிறகும், அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்து, அந்தக் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான்.

  தொடக்கத்தில் அவர் அரசராக இருந்த போது, நினைத்ததைக் கொடுக்கும் வல்லமையுடைய தெய்வீகப் பசுவை வைத்திருந்த வசிஷ்ட முனிவரைப் பார்த்துப் பொறாமைப்பட்டார். பின்னர் அவர் ரிஷி ஆன பிறகு, வசிஷ்டர் பெற்ற பிரம்ம ரிஷி பட்டத்தைக் கண்டு கோபமடைந்தார். தன்னுடைய இழப்புகள் அனைத்திற்கும் வசிஷ்டர்தான் காரணமென்று நினைத்துக் கொண்டிருந்தார்.

  இந்நிலையில் விசுவாமித்திரர், தனது கடுமையான தவத்தால் பல வரங்களைப் பெற்றுத் திரும்பினார். அப்போது அவருக்கு பஞ்சத்தால் தன் குடும்பம் அடைந்த கஷ்டமும், சத்தியவிரதன் உதவி செய்ததும், அவனுக்கு சாபம் கிடைத்ததும் தெரியவந்தது.

  அவர் சத்தியவிரதனிடம், ‘வசிஷ்டர் கொடுத்த சாபத்திலிருந்து உன்னை என்னால் விடுவிக்க முடியாது. ஆனால், அதிலிருந்து விடுபடுவதற்கான வழியை என்னால் காட்ட முடியும்’ என்றார்.

  சத்தியவிரதனோ, ‘முனிவரே! சாபத்திலிருந்து விடுபடுவதை விட, எனக்கு இன்னொரு ஆசை இருக்கிறது. தாங்கள்தான் எனது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும்’ என்றான்.

  பின்னர், ‘வசிஷ்டர் எனக்குச் சாபம் கொடுப்பதற்கு முன், நான் பசுவைக் கொன்று தின்றதால் ஏற்பட்ட பாவத்தால், இந்தப் பிறவியில் சொர்க்கம் செல்ல முடியாது என்றும், பசுவைக் கொன்று தின்ற பாவத்திற்கு நான் இன்னும் பல பிறவிகள் எடுக்கவேண்டும் என்றும் சொன்னார். எனக்கு இந்தப் பிறவியிலேயே, மானிட உடலுடன் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று விருப்பம். என் ஆசையை நிறைவேற்றி வையுங்கள்’ என்று சொல்லி விசுவாமித்திரரை வணங்கினான்.

  வசிஷ்ட முனிவர் மீது பொறாமை கொண்டிருந்த விசுவாமித்திரர், ‘சத்தியவிரதா! நான் செய்த தவ வலிமையால் பெற்ற வரங்களைக் கொண்டு, உன் விருப்பப்படி, இந்த உடலுடனே உன்னை சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்று சொல்லி, அதற்கான வேள்வியைத் தொடங்கினார்.

  விசுவாமித்திரர் செய்த வேள்வியின் பலனால், திரிசங்கு என்ற சத்தியவிரதன், விண்ணை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

  மானுட உடலுடன் ஒருவன் சொர்க்கம் நோக்கி வருவதைக் கண்ட வானவர்கள், இந்திரனிடம் தகவல் தெரிவித்தனர். இந்திரன் பூமியிலிருந்து மேலெழும்பி வந்து கொண்டிருந்த திரிசங்குவை வழியில் தடுத்து நிறுத்தினான்.

  பின்னர் அவன் திரிசங்குவிடம், ‘மானுட உடலுடன் ஒருவர் சொர்க்கலோகம் வருவது சரியான செயல் இல்லை. நீ பூலோகத்திற்குத் திரும்பிச் சென்று விடு’ என்று எச்சரித்தான்.

  ஆனால் திரிசங்கு, இந்திரனின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான். இதைக் கண்டு கோபமடைந்த இந்திரன், திரிசங்கை எட்டி உதைத்தான். மறு நிமிடம் திரிசங்கு தலைகுப்புற கவிழ்ந்து, பூமியை நோக்கி செல்லத் தொடங்கினான். பயத்தில் திரிசங்கு, ‘விசுவாமித்திர முனிவரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அலறினான்.

  விசுவாமித்திரர், உடனடியாக திரிசங்குவை வான் வெளியிலேயே நிற்கவைத்தார். பின்னர், ‘திரிசங்கு.. உனக்காக நான், நீ தற்போது இருக்கும் இடத்திலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்குகிறேன்’ என்று கூறி மந்திரம் ஜெபிக்கத் தொடங்கினார்.

  இதனைக் கண்டு அச்சமடைந்த இந்திரன், விசுவாமித்திரர் முன்பாக வந்து நின்றான். ஆனால் அவனைக் கண்டு கொள்ளாமல் வேள்வியை தொடர்ந்தார் முனிவர். உடனே இந்திரன், ‘ராஜரிஷியே! தங்களின் புதிய சொர்க்கம் உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள். புதிய சொர்க்கத்தால் பல்வேறு குழப்பங்கள் உருவாகும்’ என்றான்.

  ‘இந்திரா! திரிசங்கு மானுட உடலுடன் சொர்க்கம் காண விரும்பினான். நானில்லாத வேளையில், என் குடும்பத்துக்கு உணவளித்து காப்பாற்றிய அவனது விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை’ என்றார் விசுவாமித்திரர்.

  ஆனால், இந்திரன் விடவில்லை. ‘மகாமுனிவரே! தாங்கள் அனுப்பிய திரிசங்குவை வரவேற்று உபசரிக்காமல், புறக்கணித்து பெரிய தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். நான், திரிசங்குவை இந்திரலோகம் அழைத்துச் சென்று சிறப்பிக்கிறேன். தங்களின் புதிய சொர்க்கம் உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்’ என்று வேண்டினான்.

  இதையடுத்து விசுவாமித்திரர் தனது வேள்வியை கைவிட்டார். புதிய சொர்க்கம் மறைந்தது. இதையடுத்து இந்திரன், திரிசங்கை சொர்க்கலோகம் அழைத்துச் சென்று சிறப்பு செய்தான்.
  Next Story
  ×