search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பராய்த்துறை ஈசன்
    X
    திருப்பராய்த்துறை ஈசன்

    நீராடினால் நன்மை தரும் திருப்பராய்த்துறை ஈசன்

    ஈசன், பிட்சாடனர் உருவத்தில் வந்து முனிவர்களின் செருக்கை அழித்து அவர்களுக்கு அருள்புரிந்த திருத்தலம் திருப்பராய்த்துறை ஆகும்.
    கண்வ மகரிஷி என்பவர், கங்கையில் நீராடச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதி தேவதைகளும் வந்தனர். அவர்கள் மூவரும் கரிய நிறமாக காணப்பட்டனர். ‘எங்களிடம் நீராடிய மக்களின் பாவங்கள் அனைத்தும் படிந்து, மூவரும் இப்படி ஆகிவிட்டோம். எங்களுக்கு பாவ விமோசனம் கூறுங்கள்’ என்று கண்வ மகரிஷயிடம் அவர்கள் கேட்டனர்.

    அதற்கு அந்த மகரிஷி, “நீங்கள் மூவரும் தென்திசை சென்று துலா மாதத்தில் காவிரியில் மூழ்கி நீராடுங்கள். அதுவும் துலா மாத முதல் நாளில் திருப்பராய்த்துறையிலும், பிற நாட்களிலும், கடைசி நாளிலும் மயிலாடுதுறையிலும் நீராடி அங்குள்ள சிவசக்தியை வழிபடுங்கள். நீங்கள் புனிதமடைந்து புதுப்பொலிவு பெறுவீர்கள்” என்று விமோசனம் கூறினார். அவரது வழிகாட்டல் படி கங்கை, யமுனை, சரஸ்வதி நதி தேவதைகளும் துலா மாதம் எனும் ஐப்பசியில் காவிரியில் நீராடி தங்கள் பாவங்கள் நீங்கி சுய உருவம் அடைந்தனர். எனவேதான் ஐப்பசி மாதத்தில் இங்கு நீராடுவது மிகவும் சிறப்புடையது என்கிறார்கள்.

    ‘காவிரி துலா நீராடல்’ என்றதும் நம் நினைவுக்கு வருவது இரண்டு திருத்தலங்கள்தான். ஐப்பசி முதல் நாள் திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி கடைசி நாள் மற்றும் கார்த்திகை முதல் நாளில் மயிலாடுதுறையிலும் அதிகாலை 4 மணி முதல் மாலை 6.30 மணிக்குள் காவிரியில் நீராடி ஈசனை வழிபடுவது தொன்று தொட்டு வரும் மரபாகும். அந்த வகையில் ஐப்பசி மாதம் முதல் தேதியில் திருப்பராய்த்துறை கோவிலின் காவிரிக் கரையில் ‘முதல் முழுக்கு’ நடைபெறுகிறது.

    இந்நாளில் திருப்பராய்த்துறை சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் அகண்டக் காவிரிக்கரையில் எழுந்தருள, உடன் அஸ்திர தேவருக்கு தீர்த்த அபிஷேகம் நடைபெறும். பின்னர் அம்மையப்பன் பக்தர்களுக்குத் தீர்த்தப் பிரசாதம் அளிப்பார். அப்போது அங்கு குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் காவிரியில் நீராடி அம்மையப்பனை வழிபடுவர். இதில் நீராடுபவர்களின் பாவங்களும், தோஷங்களும் அகன்று வாழ்வில் நலமும் வளமும் கிட்டும்.

    ஈசன், பிட்சாடனர் உருவத்தில் வந்து முனிவர்களின் செருக்கை அழித்து அவர்களுக்கு அருள்புரிந்த திருத்தலம் இதுவாகும். மனிதர்களின் வாழ்க்கை முறை இல்லறம், துறவறம் எனும் இருமுறைகளைக் கொண்டது. ஒருவன் இல்லறத்தில் நிலம், செல்வம், பெண் போன்ற சிற்றின்பங்களுக்கு ஆட்பட்டும், வறுமை, போட்டி, பொறாமை, பயம் என பற்பல இன்னல்களுக்கு ஆட்பட்டு வருந்தினாலும் முறைப்படி இல்லற தர்மங்களை கடைப்பிடித்தால் மோட்சம் பெறலாம்.

    ஒரு முறை தாருகாவனத்தில் இருந்த முனிவர்களுக்கு, ‘இறைவனைக் காட்டிலும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்’ என்ற பெரும் ஆணவமும், அவர்களது மனைவிகளுக்கு, ‘அனைவரிலும் தாங்களே மிக அழகானவர்கள், கற்புக்கரசிகள்’ என்று அகங்காரமும் ஏற்பட்டது. அவர்களின் ஆணவத்திற்கு முடிவுகட்ட எண்ணிய சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் தாருகாவனம் வந்தனர். சிவபெருமான் காண்போரைக் கவரும் அதிபேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்தி வந்தார். மகாவிஷ்ணு அழகே வடிவாய் யாவரும் மயங்கும் மோகினி எனும் பெண் வடிவில் வந்தார்.

    அப்போது தாருகாவனத்தில் இருந்த முனிவர்கள், மோகினி வடிவில் வந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரைப் பின் தொடர்ந்தனர். பிட்சாடனராக வந்த சிவபெருமானது பேரழகைக் கண்டு வியந்த முனிவர்களின் மனைவிகள், தங்கள் கற்பினையும் மறந்து அவர் பின்னே சென்றனர். தங்களது தவநெறியும், ஒழுக்கமும் மற்றும் தங்கள் மனைவியரின் கற்புநெறியும் கெடக் காரணமாயிருந்த பிட்சாடனர் மீது மிகுந்த கோபம் கொண்ட தாருகாவனத்து முனிவர்கள், ஒரு வேள்வியைச் செய்தனர்.

    அதிலிருந்து வெளிவந்த புலியை, பிட்சாடனர் வடிவில் இருந்த சிவனைக் கொல்வதற்காக ஏவினர். ஆனால் ஈசனோ அந்தப் புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டார். அடுத்து அந்த வேள்வியில் இருந்து வந்த மானை சிவபெருமான் தமது இடக் கரத்தில் வைத்தருளினார். பின்னர் வந்த மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டார். தொடர்ந்து வந்த பாம்புகளைத் தமது ஆபரணமாகத் தரித்துக்கொண்டார். இவை தவிர முயலகன் என்ற அசுரன் வர அவனைக் கீழேத்தள்ளி முதுகில் ஏறி நின்று நடனமாடினார். முனிவர்கள் தொடர்ந்து மந்திரங்களை ஏவ, அவற்றை டமருக வடிவில் தமது திருக்கரத்தில் தாங்கிக்கொண்டார் பிட்சாடனர்.

    இறுதியாக தங்கள் தவ வலிமையால் வேள்வியில் இருந்து ஒரு மத யானையை முனிவர்கள் வரச் செய்தனர். தம்மைக் கொல்ல வந்த யானையின் வயிற்றுக்குள் சென்றார் பிட்சாடனர். அந்த வலியைத் தாங்க முடியாமல் யானை வீழ்ந்தது. ஈசன் யானையின் வயிற்றுக்குள் புகுந்ததால் உலகம் இருண்டது. இதனைக் கண்ட அன்னை உமையவள் முருகப் பெருமானை தம் கரத்தில் தாங்கியவாறு ஈசனைத் துதித்தாள். அதுசமயம் யானையின் வயிற்றினைக் கிழித்துக் கொண்டு ஈசன் வெளிப்பட்டார். கிழிந்த யானையின் தோலைத் தம் மீது போர்த்திக்கொண்டு வீர நடனம் புரிந்தருளினார்.

    அப்போது உமையவளின் திருக்கரத்தில் இருந்த குழந்தை முருகன் தம் தந்தையைச் சுட்டிக்காட்ட, முனிவர்கள் அறிவுமயக்கம் தெளிந்து சிவபெருமானின் காலடியில் வீழ்ந்து வணங்கினர். சிவபெருமான் அவர்களிடம் இரக்கம் கொண்டு, அவர்களுக்கு ஞானத்தை அளித்து அவர்களின் மன மயக்கத்தை அகற்றி அருளினார். இப்படி சிவபெருமான் தாருகாவனத்து முனிவர்களுக்குக் குருவாக இருந்து அருளினார். பின்னர் அந்த தாருகாவனத்திலேயே கிழக்கு நோக்கியவாறு சுயம்பு லிங்கமாக தாருகாவனேஸ்வரராக, பராய்த்துறை நாதர் எனும் பெயரில் எழுந்தருளினார். அவரது உடனுறை சக்தியான தெற்கு நோக்கிய அம்பிகையின் திருநாமம் ‘பசும்பொன் மயிலம்மை எனும் ஹேமவர்ணாம்பிகை’ என்பதாகும்.

    அமைவிடம்

    திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரத்தில் முக்கொம்பு அணை அமைந்துள்ளது. அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பராய்த்துறை இருக்கிறது.
    Next Story
    ×