என் மலர்

  ஆன்மிகம்

  பிரிந்த தம்பதியரை ஒன்றுசேர்க்கும் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில்
  X

  பிரிந்த தம்பதியரை ஒன்றுசேர்க்கும் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசிஷ்ட நதிக் கரையோரம் அமைந்த திருத்தலம் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
  சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசிஷ்ட நதிக் கரையோரம் அமைந்த இரண்டாவது திருத்தலம் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில். இந்த ஆலயம் பஞ்சபூத லிங்கங்களுள் அப்புலிங்கம் (நீர்) என்பார்கள். பஞ்சபூதங்களும், நான்கு மறைகளும் வழிபட்ட பெருமைக்குரியது இந்தக் கோவில்.

  தல வரலாறு :

  முன்னொரு காலத்தில் பார்வதி தேவியின் தந்தையான தட்சன் தன்னலம் கருதி யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்திற்கு சிவபெருமானை அழைக்காதது மட்டுமின்றி, அவருக்குரிய அவிர்பாகத்தையும் தர மறுத்தான். ஆனால் அந்த யாகத்திற்கு ஈசனின் உத்தரவை மீறி பார்வதி தேவி சென்றார். இதனால் அவர் மீது சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தனது உத்தரவை மீறியதால் ‘தன்னை விட்டு பிரிந்து வாழக் கடவாய்’ என்று சக்திக்கு சாபமும் கொடுத்தார். பின்னர் சக்தியை விடுத்து, தனியாக இத்தலம் வந்து லிங்க உருவில் வில்வ மரத்தடியில் தங்கினார்.

  இறைவனை பிரிந்த பார்வதி தேவி எங்கு தேடியும் இறைவனை காணாது துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது சிவபெருமான் அசரீரியாக, தான் பூலோகத்தில் வில்வ விருட்சத்தின் அடியில் சிவலிங்க திருமேனியாக இருப்பதாகவும், தம்மை சூரியன் தினமும் வழிபட்டு கொண்டிருப்ப தாகவும், அப்போது நீ வந்து எம்மை வழிபடு’ என்றார்.

  அதன்படியே பார்வதி தேவி, தனது தமையன் பெருமாளுடன் இந்த திருத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டார். இறைவனும் அருள்பாலித்து சக்திக்கு தன்னுடலில் சரிபாதி தந்து ஏற்றுக்கொண்டார்.

  மனைவியை பிரிந்த கவுதம மகரிஷி :

  ஒருமுறை இந்திரன் ஹோம பூஜை செய்ய நினைத்தான். அவனுக்கு கவுதம மகரிஷி அதி அற்புதமான அமிர்த நேரம் ஒன்றை குறித்துக் கொடுத்தார். ‘பலகோடி யுகங்களுக்கு ஒருமுறை வருகின்ற இந்த அமிர்த நேரத்தை, சுயநலமின்றி இறை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என இந்திரனுக்கு அறிவுரையும் வழங்கினார். கவுதமர் குறித்து கொடுத்த அமிர்தநேரம் வந்ததும், இந்திரன் மனம் மாறியது. தானே எப்போதும் இந்திரப் பதவியில் இருக்க வேண்டும் என்ற சுயநலம் அவனுள் எழுந்தது.

  இந்திரனின் எண்ணத்தை தனது ஞானத்தால் உணர்ந்த கவுதமர், ஓர் அழகிய மலரை படைத்து இந்திரன் மனைவியான இந்திராணியிடம் கொடுத்தார். இந்திராணி அந்த மலரின் அழகில் மயங்கிப்போனதால், அமிர்த நேரத்திற்குள் அவளால் ஹோமத்திற்கு வர இயலாமல் போய்விட்டது. மனைவியின் துணையின்றி ஹோமபூஜையை செய்ய இயலாத இந்திரனின் எண்ணம் தோல்வியடைந்தது. தன் எண்ணத்தை நிறைவேறவிடாமல் செய்த கவுதம மகரிஷி மீது இந்திரனுக்கு கோபம் ஏற்பட்டது.

  ‘என் மனைவியை ஹோமபூஜையில் கலந்துகொள்ள விடாமல் பிரித்தது போலவே, உமது மனைவியையும் பிரிந்து வாழக்கடவாய்’ என கவுதமருக்கு சாபமளித்தான் இந்திரன். இந்த சாபத்தின் மாயையால் கவுதமர் தனது மனைவி அகலிகையை ‘கல்லாகக் கடவது’ என சாபமிட்டார். பின்னர் கவுதமர் இந்த சாப நிவர்த்திக்காக சிவபெருமானை வேண்டினார்.

  அப்போது ஈசன், ‘ஏத்தாப்பூரில் சூரியன் என்னை வழிபடும் வேளையில் வந்து தரிசனம் செய்தால் நீ உன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வாய்’ என்று திருவாய் மலர்ந்தார்.

  அதன்படியே, கவுதமர் இந்த திருத்தலத்துக்கு வந்து சாம்பமூர்த்தீஸ்வரரை வணங்கி வழிபாடு செய்ய, இறைவனின் திருவுளப்படி ராமபிரானின் திருப்பாதம் பட்டு அகலிகை சாபவிமோசனம் பெற்றார். அதைத் தொடர்ந்து கவுதமர் தனது மனைவி அகலிகையுடன் இணைந்தார் என தல வரலாறு கூறுகிறது.

  கி.பி. 8-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த ஆலயம், கட்டிடம் இல்லாமல் வில்வ மரத்தின் அடியில் லிங்கத் திருமேனி மட்டும் இருந்துள்ளது. ஒரு நாள் மைசூர் மகாராஜாவின் கனவில் தோன்றிய இறைவன், தனக்கு கோவில் கட்டுமாறு பணித்தார். அதன்படி மகாராஜா உத்தரவின்படி அவரது மந்திரிகளில் ஒருவரான சே‌ஷய்யர் என்பவர் இங்கு வந்து கோவில் கட்டும் பணியைச் செய்தார். கோவில் அமைக்கும் பணிக்காக ஏரி ஒன்று வெட்டப்பட்டது. அப்போது பூமியில் இருந்து பெருமாள் சிலை வெளிப்பட்டது.


  சிவபெருமானுக்கு கோவில் அமைக்கும் பணியின் இடையிலேயே, அந்தப் பெருமாளுக்கும் தனி கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவில் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் ‘லட்சுமி கோபால பெருமாள் கோவில்’ என்ற பெயரில் இருக் கிறது.

  இதனை அறிந்த மைசூர் மகாராஜா, மந்திரி சே‌ஷய்யரை அழைத்து பாராட்டி, முதல் கும்பாபிஷேகம் பெருமாளுக்கும், பின்னர் சிவனுக்கும் செய்ய உத்தரவிட்டார். இன்றும் முதல் பூஜை பெருமாளுக்கும், அதன்பிறகே சிவனுக்கு விசே‌ஷ பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

  ஆலய அமைப்பு :

  இந்த ஆலயம் அர்த்தமண்டபம், மகாமண்டபம், கருவறை என மூன்று பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் மூலவரான சாம்பமூர்த்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இந்த லிங்க மூர்த்தியின் மீது ஐப்பசி மாதம் 9-ந்தேதி முதல் 15-ந் தேதி வரையும், மாசி மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையும் சூரிய கதிர் விழும் அதிசயத்தைக் காணலாம்.

  இவரை வழிபட்டால் சர்ப்ப தோ‌ஷம் நீங்கும், மகப்பேறு கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. கோவில் பிரகாரத்தில் உள்ள வில்வமரத்தை பிரிந்த தம்பதியர் வலம் வந்து வழிபாடு செய்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவதுடன், சகல செல்வங்களுடன் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. உற்சவர் உமா மகேஸ்வரர். அம்பாள் திருநாமம் மனோன்மணி என்பதாகும். இவர் தெற்கு நோக்கியவாறு தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் வசிஷ்டநதி.

  கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, முருகன் ஆகியோர் உள்ளனர். இதையடுத்து அஷ்டதிக்கு பாலகர்கள், பைரவர், அறுபத்துமூன்று நாயன்மார்கள் வீற்றிருக்கின்றனர். இங்கு அதிசய சண்முகர் சிலை உள்ளது. முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்களுடன் இந்த சண்முகர் காட்சி தருகிறார். இந்தக் கோவிலின் மடப்பள்ளி அருகே தென்மூலையில் நான்கு லிங்கங்கள் உள்ளன. இதற்கு ‘சதுர்வேத லிங்கம்’ என்று பெயர். கோவில் கருவறையின் பின்புறம் 10 லிங்கங்கள் உள்ளது சிறப்பம்சம். பஞ்சலிங்கங்கள், சேஷ்டாதேவி ஆகியோர் தனித்தனி சன்னிதியில் உள்ளனர்.

  இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணிஅவிட்டம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம், தை பிரம்மோற்சவம், மாசிமகம், பங்குனிஉத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

  சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் 37 கிலோமீட்டர் தூரத்தில், வாழப்பாடியை அடுத்து, புத்திரகவுண்டன்பாளையம் எனும் ஊருக்கு வடக்கே 2 கிலோமீட்டர் தொலைவில் வசிஷ்டநதியின் வடகரையோரம் இந்த ஆலயம் இருக்கிறது. ஆத்தூர் மற்றும் வாழப்பாடியில் இருந்து பஸ் வசதி உள்ளது.

  சமாதானப் பெருமாள் :

  சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் லட்சுமி கோபாலபெருமாள் ஆலயம் இருக்கிறது. இங்குள்ள பெருமாள் சிலை, சிவன் கோவில் அமைப்பதற்காக ஏரி ஒன்று வெட்டப்பட்டபோது, அதன் அடியில் இருந்து கிடைத்தது. இதையடுத்து அந்த பெருமாளைக் கொண்டு தனிக் கோவில் அமைக்கப்பட்டது.

  சிவபெருமானுடன், தனது தங்கயான பார்வதி தேவியை சேர்த்து வைப்பதற்காக பெருமாளும் அம்பாளுடன் இத்தலம் வந்தார். தங்கைக்காக சிவனை சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைக்க வந்ததால், இவர் ‘சமாதானப் பெருமாள்’ என்றும் அழைக்கப்படு கிறார். இந்த பெருமாளின் திருமேனிதான் தற்போது லட்சுமிகோபால பெருமாள் கோவிலில் உள்ளது.

  சாபவிமோசனம் அடைந்த காமதேனு:

  தேவலோகத்தில் உள்ள காமதேனு எனும் தெய்வீக பசு, சகல ஐஸ்வரியங்களும் நிறைந்தது. கேட்டதை எல்லாம் தரும் சக்தி உடையது. அமைதியே வடிவான இந்த காமதேனு, ஒரு முறை மாயையினால் ஆட்கொள்ளப்பட்டு கடும் பசிக்கு ஆளானது. பசியின் கொடுமையால் மாமிசத்தை உண்ணத் தொடங்கியது. இதனால் இறைவனின் சாபத்திற்குள்ளாகி புலியாக மாறியது. தனது தவறுக்கு மனம் வருந்திய புலி வடிவம் கொண்ட காமதேனு, சாபநிவர்த்தி அடைவதற்காக ஏத்தாப்பூர் வந்து இங்குள்ள சாம்பமூர்த்தீஸ்வரரை வழிபட்டு பழைய சுயஉருவத்தை அடைந்தது. காமதேனு, புலி வடிவம் கொண்டு இங்கு வழிபட்டதால், இந்த ஊர் ‘ஏய்ச்சரம்’ என அழைக்கப்பட்டதாகவும் கூறுவார்கள்.

  அடுத்த வாரம் அக்னி தலமாக விளங்கும் ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலைப் பற்றிப் பார்க்கலாம்.
  Next Story
  ×