search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    6 முறை இடிக்கப்பட்டும் எழுந்த சோமநாதபுரம் சோமநாதர் கோவில்
    X

    6 முறை இடிக்கப்பட்டும் எழுந்த சோமநாதபுரம் சோமநாதர் கோவில்

    இந்த கோவில் முதன் முதலில் எப்போது கட்டப்பட்டது என்பது பற்றி சரியான வரலாற்று தகவல்கள் இல்லை. ஆதிகாலத்தில் இருந்தே இது குஜராத்தில் பிரதான கோவிலாக திகழ்ந்துள்ளது.
    சோமநாதபுரம் சோமநாதர் கோவில்

    இந்த பெயரை கேட்டதுமே நமக்கு ஞாபகத்துக்கு வருவது கஜினி முகமது.இந்தியா மீது 17 முறை படையெடுத்து வந்து தாக்கிய ஆப்கானிஸ்தான் மன்னன் கஜினி முகமது இந்த கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி இங்கிருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்து சென்றான். கஜினி முகமது மட்டும் அல்ல, மேலும் பல முஸ்லிம் மன்னர்களும் இந்த கோவிலை இடித்து தள்ளினார்கள்.

    இவ்வாறு 6 முறை தரைமட்டமாக்கப்பட்ட கோவில் ஒவ்வொரு முறையும் மீண்டும் கட்டப்பட்டு இன்றும் நம் கண்முன் கம்பீரமாக நிற்கிறது. சோமநாதர் கோவில் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள பிரபாஸ் பதான் என்ற இடத்தில் இருக்கிறது. இது, ஜோதிர் லிங்கம் ஆலயம் ஆகும். இந்தியாவில் ராமேஸ்வரம் உள்ளிட்ட 12 ஜோதிர்லிங்கம் ஆலயங்கள் உள்ளன. அதில், சோமநாதபுரம் கோவில் முதன்மையானதாகும்.

    இந்த கோவில் முதன் முதலில் எப்போது கட்டப்பட்டது என்பது பற்றி சரியான வரலாற்று தகவல்கள் இல்லை. ஆதிகாலத்தில் இருந்தே இது குஜராத்தில் பிரதான கோவிலாக திகழ்ந்துள்ளது. நாட்டின் பல இடங்களில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்துள்ளனர். அரபிக்கடல் ஓரமாக கபிலா, ஹிரன், சரஸ்வதி (மறைந்து போன ஆறு) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோவில் அமைந்துள்ளது.

    முதலில் இந்த இடத்தில் பழங்கால கோவில் இருந்துள்ளது. அதே இடத்தில் கி.பி. 649-ம் ஆண்டு அந்த பகுதியை ஆண்டு வந்த யாதவ குல மன்னர் வல்லபாய் பிரமாண்ட கோவிலை கட்டி இருக்கிறார். ஆனால், 725-ம் ஆண்டு சிந்து (பாகிஸ்தான்) பகுதியை ஆண்டு வந்த இஸ்லாமிய அரசின் கவர்னர் அல்ஜுனாபெத் படையெடுத்து வந்து சோமநாதர் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி விட்டார்.

    அதன்பிறகு இந்த பகுதியை ஆண்ட மன்னர் 2-ம் நாகபத்ரா கி.பி. 815-ம் ஆண்டு மீண்டும் கோவிலை கட்டினார். 1025-ல் கஜினி முகமது படையெடுத்து வந்து ஆலயத்தை தாக்க வந்தார். அப்போது கோவிலில் தங்கம், முத்து, பவளம், ரத்தினம், வெள்ளி என ஏராளமான செல்வங்கள் குவிந்து கிடந்தன. இதை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் தான் கஜினி முகமது தாக்க வந் தான். அவனது படையை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக ஏராளமான மக்கள் அணி, அணியாக திரண்டு வந்து எதிர்த்தனர்.

    அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்தி விட்டு கஜினி முகமது படை கோவிலுக்குள் புகுந்தது. சுமார் 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். 20 ஆயிரம் பேர் அடிமையாக சிறை பிடிக்கப்பட்டனர். அதன் பிறகுதான் படை உள்ளே நுழைய முடிந்தது. கோவிலுக்குள் புகுந்த கஜினி முகமது அத்தனை செல்வங்களையும் கொள்ளையடித்தான். கோவில் கர்ப்பகிரகத்தில் இருந்த சிவலிங்கத்தின் சிலையையும் உடைத்து எடுத்து சென்றான். கோவிலில் இருந்த வெள்ளி கதவுகள், சந்தன மரத்தால் ஆன கதவுகளையும் முற்றிலும் பெயர்த்து எடுத்து சென்றான்.

    அன்றைய பண மதிப்புபடி அவன் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மதிப்பு 2 கோடி தினார் ஆகும். இப்போதைய கணக்குப்படி பார்த்தால் எத்தனையோ ஆயிரம் கோடி இருக்கும் என்கிறார்கள். கோவிலில் இருந்து அவன் 7 வண்டிகள் நிறைய தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை எடுத்து சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.

    அவன் ஊருக்கு திரும்புவதற்கு முன்பு கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி விட்டுதான் சென்றான். பின்னர் இப்பகுதியில் ஆட்சிக்கு வந்த 2-ம் குமார பாலா கோவிலை மீண்டும் கட்டினார். கற்களால் கட்டப்பட்ட கோவிலை அவர், தங்கம், வெள்ளியால் பிரமாண்டமாக அலங்கரித்தார். ஆனாலும், கோவில் மீண்டும் தாக்குதலுக்கு ஆளானது. 1299-ல் டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜி தனது தளபதி உலுக்கான் தலைமையில் படையை அனுப்பி கோவிலை தகர்க்க செய்தான்.

    பின்னர் ஆட்சிக்கு வந்த மகிபாலா தேவா 1308-ல் மீண்டும் கோவிலை கட்டினார். 1395-ம் ஆண்டு மீண்டும் கோவில் இடிக்கப்பட்டது. டெல்லி சுல்தானின் குஜராத் பகுதி கவர்னராக இருந்த ஷாபர்கான் கோவிலை இடித்தான். ஆனாலும், மீண்டும் கட்டப்பட்ட கோவிலை 1451-ல் குஜராத் சுல்தான் முகமது பேகடா இடித்து தள்ளினான். அடுத்து மீண்டும் கோவிலை கட்டினார்கள். 1546-ல் இந்த பகுதியை கைப்பற்றிய போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் பங்குக்கு கோவிலை இடித்து விட்டு சென்றனர்.

    எத்தனை தடவை இடித்தாலும் மக்களும் விடவில்லை. மீண்டும் கோவிலை கட்ட 1701-ல் முகலாய மன்னன் அவுரங்கசீப் கோவிலை முற்றிலும் இடித்து தள்ளினான். இவ்வாறு 6 முறை கோவில் இடிக்கப்பட்டு இருந்தது.1782-ல் மராட்டிய மன்னர் லாகூருக்கு படையெடுத்து சென்று அந்த பகுதியை கைப்பற்றியதுடன் சோமநாத புரம் கோவிலில் இருந்து எடுத்து சென்று அங்கு வைத்திருந்த 3 வெள்ளி கதவுகளை மீட்டு வந்தார்.

    இதன் பிறகு மீண்டும் கோவில் கட்டப்பட்டாலும் காலப் போக்கில் பாதிப்பு அடைந்து கோவில் மோசமான நிலையில் இருந்தது. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கோவில் அமைந்துள்ள பகுதி ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்ட ஜுனாகத் சமஸ்தானத்தில் இருந்தது. ஜுனாகத் மன்னர் இந்த பகுதியை பாகிஸ் தானோடு இணைக்க முயன் றார். ஆனால், வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் கடுமை யாக போராடி இந்த பகுதியை இந்தியாவோடு இணைத்தனர்.

    சிதைந்து கிடந்த கோவிலை மீண்டும் கட்ட சர்தார் வல்ல பாய் பட்டேல் மீண்டும் கட்ட உத்தரவிட்டார். ஆனால், மகாத்மா காந்தி கோவிலை அரசு பணத்தில் கட்டக்கூடாது. வேண்டுமானால் பொது மக்களிடம் நிதி திரட்டி கட்டி கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். இதனால் அறக்கட்டளை அமைத்து நிதி திரட்டி மீண்டும் கோவில் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இதற்குள் மகாத்மா காந்தி, வல்லபாய் பட்டேல் இருவருமே இறந்து விட்டனர். மத்திய மந்திரி கே.எம்.முன்ஷி தலைமையிலான அறக்கட்டளை குழு 1951-ல் கட்டுமான பணியை தொடங்கியது. அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

    படிப்படியாக கட்டுமான பணி தொடர்ந்து 44 ஆண்டுகள் நடந்து 1995-ம் ஆண்டுதான் பணி முற்றிலும் நிறைவு பெற்றது. அப்போதைய ஜனாதிபதி 1.1.1995-ம் ஆண்டு கோவிலை திறந்து வைத்தார். இந்த கோவில் சாளுக்கிய மரபுப்படி கட்டப்பட்டு கம்பீரமாக நிற்கிறது. கோவிலின் உயரம் 115 அடி. இதன் கோபுரத்தில் 10 டன் எடையுடைய கோபுர கலசம் வைக்கப்பட்டுள்ளது. அதில், 37 அடி உயரம் கொண்ட கொடிமரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    பழங்காலத்தில் மிக பிரமாண்டமாக கோவில் இருந்துள்ளது. இப்போது அந்த அளவுக்கு மிக பிரமாண்டமாக இல்லாவிட்டாலும் கலை நயத்தோடு சிறப்பாக கோவில் கட்டப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கோவில் என்பதால் குஜராத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியா மட்டும் அல்ல, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மகா சிவராத்திரி விழா இங்கு மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    மன்னர்கள் காலத்தில் கோவிலை சுற்றியுள்ள 12 ஆயிரம் ஊர்களின் வருமானத்தை கோவிலுக்கு பயன்படுத்தி உள்ளனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களும் இருந் திருக்கின்றன. கஜினி முகமது கோவி லில் கொள்ளையடித்து சென்ற சந்தன கதவுகள் ஆப்கானிஸ்தானில் இருந்தன. 1842-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து கவர்னர் ஜெனரல் எட்வர்டு லா இந்த கதவுகளை இந்தியா கொண்டு வர உத்தரவிட்டார். அதன்படி அவை கொண்டு வரப்பட்டன. ஆனால், இதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதனால் கதவுகள் ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. இப்போதும் அந்த கதவுகள் அங்குதான் உள்ளன.
    Next Story
    ×