search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சதுர்புஜ ராமர் கோயில் - காஞ்சிபுரம்
    X

    சதுர்புஜ ராமர் கோயில் - காஞ்சிபுரம்

    செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீராமன் அருள்பாலிக்கும் பொன்பதர் கூடம்.
    தமிழ்நாட்டில் தொண்டை மண்டலம் பகுதியில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களாக பல திருக்கோயில்கள் விளங்கினாலும் அபிமான தலங்களாகவும் பல கோயில்கள் போற்றப்படுகின்றன. அவைகளில் ஒன்றுதான் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீராமன் அருள்பாலிக்கும் பொன்பதர் கூடம். இத்தலம், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு "பொன்பதர் கூடம்' என்று பெயர் வந்த காரணமே அலாதியானது.

    ஒருசமயம், வைணவ ஆசார்ய புருஷர்களில் ஒருவரான சுவாமி தேசிகர் இப்பகுதிக்கு யாத்திரையாக வந்த தருணத்தில் ஒரு கடலை வியாபாரி வீட்டின் திண்ணையில் அவருடைய அனுமதி பெற்று தான் பூஜைக்காக உடன் கொண்டு வந்திருந்த ஹயக்ரீவர் விக்கிரகத்துடன் தங்கினார். அன்றிரவு தன் நிலத்தை ஒரு குதிரை மேய்வதாக கடலை வியாபாரி கனவு கண்டார்.

    மறுநாள் திண்ணையில் குதிரை முகம் மனித உடலுடன் கூடிய ஹயக்ரீவ விக்கிரகத்துடன் அமர்ந்திருந்த தேசிகரிடம் தன் கனவை சொல்லி வியந்தார் வியாபாரி. அவருக்கு ஹயக்ரீவர் அருள் பரிபூர்ணமாக கிடைத்துவிட்டதாக கூறினார் தேசிகர்.

    பிறகு தன் நிலத்திற்கு போய் பார்த்தபோது குதிரை மேய்ந்ததாக கனவில் கண்ட தன் நிலத்தில் நெற்கதிர்கள் பொன்மணிகளாக விளைந்திருப்பதைக் கண்டு பிரமித்தார். அதிலிருந்து இத்தலம் "பொன் உதிர்ந்த களத்தூர்' என்று அழைக்கப்பட்டு நாளடைவில் "பொன்விளைந்த களத்தூர்' என்று மாறியது. இந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது இவற்றின் பொன் பதர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் போய் விழுந்ததாம். அப்படி பதர் விழுந்த இடமே "பொன்பதர் கூடம்' என்றாகியது. இங்குதான் சதுர்புஜ ராமர் கோயில் உள்ளது.

    ஒரு கரத்தில் வில்லும் ஒரு கரத்தில் அம்புமாக காட்சி தரும் ராமர் நான்கு கரங்களுடன் சங்கு சக்கரதாரியாய் தான் மஹாவிஷ்ணுவின் அம்சம் என்று சில தருணங்களில் காட்சியளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக ராமாயண காவியம் இயம்பும். அப்படி புராணக் கதாபாத்திரங்களுக்கு மஹாவிஷ்ணுவாக காட்சி தந்த ராமர், தேவராஜ முனிவர் என்ற அடியாரின் வேண்டுகோள்படி பூலோகத்தில் மக்களுக்கும் காட்சி தந்தருளினார். பகவான் இத்தலத்தில் ராமபிரானாக நான்கு திருக்கரங்களுடன் கோயில் கொண்டுள்ளார் என்பது தலவரலாறு.

    இங்கு சதுர்புஜ ராமர் சங்கு, சக்கரம், கோதண்டம் மற்றும் பாணம் இவைகளை தரித்துக்கொண்டு அருள்பாலித்து வருகிறார். உற்சவமூர்த்தியும் அதே திருக்கோலத்துடன் ராமகாவியத்தில் வர்ணிக்கப்பட்ட வண்ணம் இளைய பெருமாள், சீதாப்பிராட்டி மற்றும் அனுமன் இவர்களோடு சேவை தந்து தம்மை வழிபடுவோருக்கு அனைத்து வரங்களையும் அருளுகின்றார்.

    ஸ்ரீ சதுர்புஜ கோதண்டராமர் கைங்கர்ய சபா உபய திருப்பணிக் கமிட்டி என்ற அமைப்பின் மூலம் இத்திருக்கோயிலுக்கு புதியதாக கொடிமரமும் அதற்குண்டான செப்புக் கவசமும் செய்யப்பட்டுள்ளது.

    நூதன துவஜஸ்தம்ப பிரதிஷ்டை மற்றும் மஹாசம்ப்ரோக்ஷணம் 26.10.2015 அன்று காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெறுகின்றது. அன்று பிற்பகல் வைதீக திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

    இத்திருத்தலத்திற்கு செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று பின்  அங்கிருந்து இந்த கோவிலுக்கு செல்லலாம்.

    இந்த கோவில் பற்றிய தகவல்கள் அறிய இந்த எண்ணில் 94445 18810 தொடர்பு கொள்ளலாம்.
    Next Story
    ×