என் மலர்
ஆன்மிகம்

மயிலாப்பூர் வாலீஸ்வரர் திருக்கோவில்
வாலீஸ்வரர் திருக்கோவில் - மயிலாப்பூர்
சென்னையின் முக்கியப் பகுதியான மயிலாப்பூரில், பழமை வாய்ந்த அருள்மிகு பெரிய நாயகி சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சென்னையின் முக்கியப் பகுதியான மயிலாப்பூரில், பழமை வாய்ந்த அருள்மிகு பெரிய நாயகி சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மயிலையில் கோபதி நாராயணன் செட்டித் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு கோலவிழி அம்மன் ஆலயத்தின் அருகாமையில் இருக்கிறது இந்தத் திருத்தலம். தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தில் பாதியை, கிரகித்துக் கொள்ளும் வலிமை படைத்த பராக்கிரமசாலியான வாலி, இந்தத் தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளான். மயிலாப்பூரில் அமைந்துள்ள 7 சிவாலயங்களில் ஒன்றாக இந்த ஆலயம் திகழ்கிறது.
கோவில் தல வரலாறு :
வாலியின் தாயார் சிறந்த சிவ பக்தையாக இருந்தவர். அவள் ஒரு முறை இந்திரனை வேண்டி தவம் இருந்தாள். அவள் முன் தோன்றிய இந்திரனிடம், 'எனக்கு பிறக்கப்போகும் மகன் சிறந்த சிவ பக்தனாகவும், சிவபூஜையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துபவனாகவும், மகா பராக்கிரமசாலியாகவும், அவதார புருஷனால் மட்டுமே அவனது ஆயுள் முடிவடைய வேண்டும் எனவும் பல்வேறு வரங்களைக் கேட்டுப் பெற்றாள்.
வாலி குழந்தைப் பருவத்தில் இருந்தே சிவ பக்தியில் சிறந்தவனாக இருந்தான். அவன் தன் தாயையே குருவாக எண்ணிக்கொண்டு, தினமும் சிவபூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். மேலும் சகல சாஸ்திரங்களையும் கற்றதோடு, மிகுந்த பலம் நிறைந்தவனாகவும் திகழ்ந்தான். சிவ பூஜையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், சுற்றம் சூழல் எல்லாவற்றையும் மறந்து, ஈசன் நினைவிலேயே மூழ்கிவிடும் அளவுக்கு அவனது பக்தி இருந்தது. அவனைக் கண்டு அவனது தாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.
ஒரு முறை வாலியை அழைத்த அவனது தாய், பல சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டு வரும்படி பணித்தார். அன்னையின் கோரிக்கைப்படி, திருவண்ணாமலை உட்பட பல சிவாலயங்களுக்குச் சென்ற வாலி, அங்கு மனமுருக சிவபெருமானை வழிபட்டான். ஆங்காங்கே தான் சந்தித்த முனிவர்களிடம் இருந்தும், சிவ பூஜை முறைகளை நன்கு கற்றுக்கொண்டான்.
பல இடங்களைக் கடந்து, பின் மயூரபுரி (தற்போது மயிலாப்பூர்) வந்து, பவதாரண்யேஸ்வரரை வணங்கினார். அவரை மலர்களாலும், வில்வ இலைகளாலும் மற்றும் பழங்களாலும் பூஜித்து மகிழ்ந்தான். வாலியின் பக்தியில் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், அவன் முன்பாகத் தோன்றினார். பின்னர் அவன் கேட்ட வரங்களை வழங்கி ஆசி கூறினார். வாலி தன்னுடைய வேண்டுதலுக்காக வழிபட்ட சிவலிங்கம் என்பதால், இங்குள்ள இறைவன் வாலீஸ்வரர் என்று திருநாமத்திலேயே அழைக்கப்படுகிறார். ஆலயமும் வாலீஸ்வரர் திருக்கோவில் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு :
ஆலயத்தின் வாசலைக் கடந்து உள்ளே சென்றால், ஐந்து சன்னிதிகள் கோபுரத்துடன் அமைந்துள்ளன. கணபதி மற்றும் சுவாமி சன்னிதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கியும், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதி கிழக்கு முகமாகவும், சுப்பிரமணியர் சன்னிதிக்கு எதிரே அமைந்துள்ள அருணகிரிநாதர் சன்னிதி மேற்கு முகமாகவும், சாஸ்தா சன்னிதி கிழக்கு முகமாகவும், பைரவர் சன்னிதி தெற்கு முகமாகவும், பஞ்சலிங்க சன்னிதி கிழக்கு முகமாகவும் அமைந்துள்ளன. பஞ்சலிங்க சன்னிதி கோபுரத்தின் அமைப்பானது, காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுர அமைப்பில் உள்ளது.
சனீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கியபடியும், ஆஞ்சநேயர் சன்னிதி கிழக்கு முகமாகவும் அமைந்திருக்கின்றன. மூலவர் சன்னிதியின் வெளிப்புற சுவர்களில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சூரிய, சந்திர சன்னிதிகள் மேற்கு நோக்கியும், சந்தானக் குரவர்கள் சன்னிதி வடக்கு நோக்கியும் உள்ளன.
மெய்கண்ட சிவம், அருநந்தி சிவம், மறைஞான சம்பந்த சிவம், உமாபதி சிவம் ஆகியோர் சந்தானக் குரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். வாலியின் திருவுருவம் சுவாமி சன்னிதியின் உட்புறத்தில் இறைவனை வணங்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. பிரகார சுற்றுச் சுவரில் பல்லியின் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த பல்லியை பக்தர்கள் நம்பிக்கையுடன் வணங்கிச் செல்கின்றனர். பிரகாரத்தில் உள்ள மண்டபத்தின் மேலுள்ள கோபுரத்தில் பதினெட்டு சித்தர் களின் உருவங்கள், சுதை வடிவத்தில் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. ஆலய தல விருட்சம், வன்னி மரம் ஆகும்.
ஆலய சிறப்பு :
கிழக்கு முகமாக அமைந்துள்ள விநாயகர் சன்னிதியில், விநாயகர் ஆவுடையாரில் அமர்ந்திருப்பது விசேஷமான அமைப்பாக கருதப்படுகிறது. இங்குள்ள பஞ்சலிங்க சன்னிதி, மிகுந்த சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. இங்கு வந்து தியானம் செய்தவர்கள் தங்களுக்கொரு புது அனுபவம் ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். காசிக்கு இணையாக இந்த பஞ்சலிங்கத்தை கூறுகின்றனர். இந்த சன்னிதிக்குக் கீழே ஒரு சித்தரின் ஜீவசமாதி உள்ளதாக செவி வழிச் செய்தி ஒன்று உள்ளது.
சனிக்கிழமை தோறும் காம்பு நீக்கிய வெற்றிலையை மாலையாகக் கோர்த்து, அந்த மாலையை வாலீஸ்வரருக்கும், வாலிக்கும் சாத்தி வழிபட்டு வந்தால் பக்தர்கள் வேண்டிய பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பஞ்சலிங்க சன்னிதியில் மாதுளம் பழ முத்துக்களால் அர்ச்சனை செய்தால், தீர்க்க முடியாத பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையானவர்கள் இந்த சன்னிதியில் சாம்பிராணி தூபம் ஏற்றினால் நிவர்த்தி உண்டாகும் என்கிறார்கள் பக்தர்கள்.
கோவில் திருவிழாக்கள் :
வைகாசி பவுர்ணமி தினத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பான முறையில் நடைபெற்று வீதிஉலா நடைபெறுகிறது. கந்த சஷ்டி உற்சவத்தில், சூரசம்ஹாரமும், மறுநாள் முருகன், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணமும் நடந்து, சுவாமி திருவீதி உலா நடைபெறும். தவிர சுவாமியும், அம்பாளும் அறுபத்திமூவர் திருவிழாவில் திருக்கோவிலிலிருந்து எழுந்தருளி, கபாலீஸ்வரர் மற்றும் இதர தெய்வங்களுடன் வீதிஉலா வந்து, பின் கோவிலை அடைவர். பிரதோஷம் மற்றும் பவுர்ணமியில் கோவிலில் உள்புறப்பாடு நடத்தப்படுகிறது.
புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவின் போது, 9 நாட்களும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. 9-ம் நாள் விழாவில் பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது. சித்திராப் பவுர்ணமியில், அம்பாளுக்கு 108 இளநீர் அபிஷேகம் மற்றும் மரிக்கொழுந்து சாத்தும் நிகழ்ச்சியும், சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜர் வீதிஉலா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் திருவெம்பாவை பாடல் தினமும் பாடி நித்ய கைங்கர்யங்கள் நடைபெறும். பத்து நாட்கள் மாணிக்கவாசகர் வீதி புறப்பாடு நடைபெறுகிறது. மாணிக்கவாசகர் அருளிய பொன்னூஞ்சல் பாடல்கள், ஆருத்ரா தரிசனத்தின்போதும், மார்கழி மாதத்தின் போதும் பாடப்படுகிறது.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்திருக்கும்.

Next Story