என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்னாடுடைய சிவனே போற்றி
    X

    தென்னாடுடைய சிவனே போற்றி

    சிவனுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள்வாழ்க
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள்வாழ்க
    ஆகமம் ஆகிநின்று, அண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன், இறைவன் அடிவாழ்க

    வேகம் கெடுத்தாண்ட, வேந்தன் அடிவெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன், பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்தன், பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும், கோன்கழல்கள் வெல்க
    சிரங்குவிவார் ஓங்குவிக்கும், சீரோன் கழல்வெல்க

    ஈசன் அடிபோற்றி, எந்தை அடிபோற்றி
    நேசன் அடிபோற்றி, சிவன் சேவடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
    மாயப் பிறப்பறுக்கும், மன்னன் அடிபோற்றி
    சீரார் பெருந்துறை, நம் தேவன் அடிபோற்றி

    ஆராத இன்பம், அருளும் மலைபோற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள், நின்ற அதனால்
    அவன் அருளாலே, அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
    முந்தை வினை முழுதும், ஓய உரைப்பன்யான்

    கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி
    விண்நிறைந்து மண்நிறைந்து, மிக்காய், விளங்கொளியாய்
    எண்இறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன்

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்ச்
    செல்லா நின்ற, இத்தாவர சங்கமந்துள்

    எல்லாப் பிறப்பும், பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள், கண்டுஇன்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

    வெய்யாய் தணியாய், இயமானன் ஆம்விமலா
    பொய்யாயின எல்லாம், போய் அகல வந்தருளி
    மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே

    ஆக்கம், அளவிறுதி, இல்லாய், அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய, நின்ற மறையோனே

    கறந்தபால் கன்னலொடு, நெய் கலந்தாற்போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள், தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும், எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்துடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான், வல்வினையேன் தன்னை

    மறைந்திட மூடிய, மாய இருளை
    அறம்பாவம் என்னும், அருங்கயிற்றால் கட்டிப்
    புறந்தோல்போர்த் தெங்கும், புழுஅழுக்கு மூடி
    மலஞ்சோரும் ஒன்பது, வாயில் குடிலை
    மலங்கப் புலனைந்தும், வஞ்சனையைச் செய்ய

    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    கலந்தஅன்பு ஆகிக், கசிந்துள் உருகும்
    நலந்தான் இலாத, சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க், கிடந்த அடியேற்குத்

    தாயிற் சிறந்த, தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார், அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப், பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சங்கெடப்

    பேராது நின்ற, பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே, அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து, ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும், இல்லானே உள்ளானே

    அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
    சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

    நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்உணர்வே
    போக்கும் வரவும், புணர்வும்இலாப் புண்ணியனே
    காக்கும் எம்காவலனே, காண்பரிய பேர்ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே, அத்தா மிக்காய்நின்ற
    தோற்றச் சுடர்ஒளியாய்ச், சொல்லாத நுண்உணர்வாய்

    மாற்றமாம் வையகத்தின், வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்
    ஊற்றான உண்ணார், அமுதே உடையானே
    வேற்று விகார, விடக்குடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா, அரனேயோ என்றென்று

    போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்யானார்
    மீட்டிங்கு வந்து, வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக், கட்டழிக்க வல்லானே
    நள்இருளில் நட்டம், பயின்றாடும் நாதனே
    தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே

    அல்லல் பிறவி, அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச், சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின், பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின், உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.
    Next Story
    ×