search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்
    X

    காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்த காட்சி.

    உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

    • தேரோட்டம் 14-ந்தேதி நடக்கிறது.
    • 15-ந் தேதி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடும், வாஸ்துசாந்தியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு மேல் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு 7 மணிக்கு கேடயத்தில் வெக்காளியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறுகிறது. மேலும், 13-ந் தேதி வரை இரவு 7 மணிக்கு முறையே பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்னவாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 14-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 16-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறும்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×