search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்: தொல்லைகள் தீர்ப்பார் தும்பிக்கையான்!
    X

    பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்: தொல்லைகள் தீர்ப்பார் தும்பிக்கையான்!

    • பங்குனி சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுவோம்.
    • நம் தொல்லைகளையும் துக்கங்களையும் தீர்த்தருளுவார் தும்பிக்கையான்.

    பங்குனி மாதம் வழிபாட்டுக்கான மாதம். பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்வதற்கு உகந்த மாதம். தெய்வங்கள் பலவற்றுக்கும் திருமணங்கள் அரங்கேறிய மாதம். எனவே இந்த மாதத்தில் தெய்வங்கள் முழு சாந்நித்தியத்தை வெளிப்படுத்தி, பிரபஞ்சத்தையும் மக்களையும் அமைதிப்படுத்தி ஆனந்தத்திலும் நிறைவிலுமாக ஆழ்த்துவார்கள் என்பது ஐதீகம்.

    பங்குனி மாதத்தில், ஐயப்பனின் அவதார தினமும் வரும். ஸ்ரீராமபிரானின் அவதார நன்னாளும் வரும். ஸ்ரீவள்ளி அவதரித்ததும் பங்குனி மாதத்தில்தான். இத்தனைப் பெருமையும் புண்ணியமும் நிறைந்த மாதத்தில், விநாயகப் பெருமானை தினமும் வழிபட்டு வந்தாலே உன்னத பலன்கள் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வழிபட வேண்டும் என்று விவரிக்கிறது தர்மசாஸ்திரம். ஆகம விதிப்படியும் ஆலயங்களில், முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம். அதன் பின்னரே மூலவரை தரிசிக்கிறோம்.

    விநாயகர், முழுமுதற் கடவுள் என்று போற்றப்படுகிறார். பிரமாண்டமான கோயிலிலும் பிள்ளையாரைத் தரிசிக்கலாம். தெருமுனைக் கோயிலிலும் கணபதி காட்சி தருவார். ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் கூட, அரசமரத்தடி நிழலில் கூட பிள்ளையாரப்பா அற்புதமாகக் காட்சி தந்து, நமக்கு அருளையும் பொருளையும் அள்ளித்தந்தருளுகிறார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    நம் விக்னங்களையெல்லாம் தீர்த்து அருளுகிறார். அதனால்தான் அவருக்கு விக்ன விநாயகர் என்றே திருநாமம் அமைந்தது. கணங்கள் என்றால் பொழுதுகள் என்று அர்த்தம். நம்முடைய ஒவ்வொரு கணத்துக்கும் அதிபதி பிள்ளையார்தான். அதனால்தான் அவருக்கு கணபதி எனும் திருநாமமும் அமைந்தது என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    இத்தனை பெருமைகள் கொண்ட பிள்ளையாருக்கு உகந்தது சங்கட ஹர சதுர்த்தி நன்னாள். நாளை, சங்கடஹர சதுர்த்தி. பங்குனி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தி. இந்த நன்னாளில், விரதம் இருந்து பிள்ளையாரை தரிசிப்போம். விநாயகர் அகவல் பாராயணம் செய்வோம். மகா கணபதி மந்திரம் ஜபித்து வேண்டிக்கொள்வோம்.

    விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சார்த்தி வேண்டிக் கொள்வது ரொம்பவே மகத்துவம் மிக்கது. அதேபோல், பிள்ளையாருக்கு வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் விக்னங்களெல்லாம் பறந்தோடும். கவலைகள் அனைத்தும் காணாமல் போகும். துக்கங்களையெல்லாம் போக்கித் தருவார் தும்பிக்கையான்!

    சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுகத்தானை மனதார பிரார்த்திப்போம்.

    Next Story
    ×