search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சிவன்
    X
    சிவன்

    சோமவார விரதத்தை சரியான முறையில் அனுஷ்டிப்பது எப்படி?

    கொஞ்சம் கொஞ்சமாக ஒளி கூடவும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறையவும் சந்திரனுக்கு உதவிய பரமேஸ்வரனை வழிபட்டு, மேற்கொள்வதுதான் சோமவார விரதம்.
    சந்திரன் முழுமையாகத் தேயும் நாள்தான் அமாவாசை; முழுமையாக வளர்ந்து ஒளிரும் நாள் பௌர்ணமி. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஒளி கூடவும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறையவும் அவனுக்கு உதவிய பரமேஸ்வரனை வழிபட்டு, மேற்கொள்வதுதான் சோமவார விரதம். இந்த விரத நியதிப்படி, திங்கட்கிழமையன்று காலையில் நீராடிவிட்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது வழக்கம்.

    அன்று முழுவதும் சிவ ஸ்தோத்திரம் சொல்லிக்கொண்டே இருப்பது இவ்வாறு விரதம் இருப்பவர்களின் வழக்கம்.  வீட்டிலேயே இருக்கக்கூடியவர்கள் இப்படி நாள் முழுவதும் எந்த உணவும் எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருப்பார்கள். அன்று சிவாஷ்டகம் படிக்கலாம். சிவ அஷ்டோத்திரம் சொல்லலாம். மனதார சிவனை தியானித்து நம்முடைய நியாயமான தேவைகளுக்காகப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

    அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என்றால் அவரவர் உடல் நலத்துக்கு ஏற்றார்போல உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம் அல்லது எளிமையான சைவ உணவை ஒருவேளை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். சிவ ஸ்தோத்திரங்கள் மனப்பாடமாகத் தெரிந்தால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். வேலை நேரத்திலே டீ நேரம், உணவு இடைவேளை நேரம் என்று கிடைக்குமானால், அப்போது, கையோடு ஸ்லோகப் புத்தகங்களை எடுத்துக்கொண்டுபோய் அவற்றைப் பார்த்துப் படித்துக் கொண்டிருக்கலாம்.

    இதற்கும் அவகாசமும் வசதியும் இல்லையென்றால், கவலைப்படவேண்டாம், ‘ஓம் நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை மட்டுமாவது நாள்பூராவும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். வேலைக்குப் போகிறவர்களால் காலையில் சிவன் கோயிலுக்குச் சென்றுவர நேரமில்லாமல் போகலாம். அப்படிப்பட்டவர்கள், மாலையில் வீட்டுக்கு வந்தபிறகு நீராடிவிட்டு சிவன் கோயிலுக்குப் போய் சிவதரிசனம் செய்யலாம்.

    அதுவும் முடியாமல், இரவு வீடு திரும்ப வெகு நேரமாகிவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் நாள் பூராவும், ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை விடாமல் சொல்லிக்கொண்டேயிருந்தால் போதும். அதோடு திங்கட்கிழமையில் பிரதோஷமும் வருமானால், அது ரொம்பவும் விசேஷமானதாக அமையும். பிரதோஷ நேரத்தில் சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகம், அர்ச்சனை எல்லாவற்றையும் மனங்குளிரப் பார்த்து எல்லா பாக்கியங்களையும் அடைய அச்சாரம் வாங்கிக்கொள்ளலாம்.
    Next Story
    ×