search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீட்டில் வழிபாடு
    X
    வீட்டில் வழிபாடு

    விருப்பங்களை நிறைவேற்றும் விரதங்கள்

    விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். இந்து சமயத்தில் உள்ள சில விரதங்களை பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
    ‘விரதம்’ என்பதற்கு ‘உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல்’ என்று பொருள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். இந்து சமயத்தில் உள்ள சில விரதங்களை பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.

    உமா மகேஸ்வர விரதம்

    கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இதுவாகும். இந்த நாளில் சிவன்- பார்வதியை வழிபாடு செய்ய வேண்டும்.

    விரதமுறை: காலை உணவை மட்டும் தவிர்த்து, சிவாலயம் சென்று சிவ-பார்வதி தம்பதியரை வணங்கி வர வேண்டும்.

    பலன்:- குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    விநாயக சுக்ரவாரம்

    வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் முதல் வெள்ளிக்கிழமையில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் வெள்ளிக்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. வழிபாட்டிற்குரிய தெய்வமாக விநாயகப்பெருமான் இருக்கிறார்.

    விரதமுறை: பகலில் உணவை தவிர்த்து, இரவு நேரத்தில் பழம், இட்லி சாப்பிடலாம்.

    பலன்:- கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    மங்கள வாரம்

    தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, வாழ்நாள் முழுவதும் செவ்வாய்க்கிழமை தோறும் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரத நாளில் பைரவர் மற்றும் வீரபத்திரரை வழிபட வேண்டும்.

    விரதமுறை: பகலில் ஒரு பொழுது சாப்பிட்டு விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    பலன்:- எதிரி பயம் நீங்கும். பயணத்தின்போது பாதுகாப்பாக உணர்வீர்கள்.

    கந்த சஷ்டி

    ஐப்பசி மாதம் வரும் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையான 6 நாட்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். வழிபாட்டிற்குரிய தெய்வமாக முருகப்பெருமான் இருக்கிறார்.

    விரதமுறை: முதல் 5 நாட்கள் ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, 6-வது நாளில் மூன்று வேளை உணவையும் நீக்கி விரதம் இருக்க வேண்டும். அன்று மாலை நடைபெறும் சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட வேண்டும். அதன் பிறகு மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஒன்றை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

    பலன்:- சஷ்டி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    தை அமாவாசை

    தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. வழிபாட்டுக்குரிய தெய்வம், சிவபெருமான்.

    விரதமுறை: காலையில் உணவருந்தாமல், முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். மற்ற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்த முடியாமல் போனவர்கள், இந்த ஒரு நாளில் தர்ப்பணம் செய்தாலே, அதற்கான பலன் கிடைத்து விடும்.

    பலன்:- முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப விருத்தி உண்டாகும்.
    Next Story
    ×