search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சூரிய பகவான்
    X
    சூரிய பகவான்

    கணவனை இழந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய ரத சப்தமி விரதம்

    கணவனை இழந்தவர்கள் ரத சப்தமி விரதத்தை கடைப்பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.
    19-2-2021 ரத சப்தமி

    அமாவாசைக்கு பிறகு வரும் 7-வது நாள் ‘சப்தமி’ திதியாகும். ஆடி மாதம் முதல் மார்கழி வரையான 6 மாத காலத்தை ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்றும், தை மாதம் முதல் ஆனி வரையான 6 மாதத்தை ‘உத்திராயன புண்ணிய காலம்’ என்றும் அழைப்பார்கள். தட்சிணாயன காலத்தில் தெற்கு நோக்கி பயணிக்கும் சூரிய பகவான், உத்திராயனம் தொடங்கும் தை மாதம் முதல் நாளில் வடக்கு நோக்கி திரும்புவார். அதனால்தான் தை முதல் நாளில் அவருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம். தை முதல் நாளில் வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கினாலும், ஏழாவது நாளான சப்தமி தினத்தன்றுதான், அவரது 7 குதிரை பூட்டிய தேர், முழுமையாக வடக்கு நோக்கி திரும்புகிறதாம். எனவேதான் தை மாதம் வரும் சப்தமி திதியானது, ‘ரத சப்தமி’ என்று அழைக்கப்படுகிறது.

    சப்த ரிஷிகளில் முக்கியமானவர், காசியபர். இவருக்கு பல மனைவியர் உண்டு. அவர்களில் ஒருத்தியான அதிதி, கர்ப்பவதியாக இருந்தாள். அப்போது ஒரு நாள் வாசலில் சத்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்தாள். அவளது இல்லத்தின் முன்பாக முதியவர் ஒருவர், யாசகம் கேட்டு நின்று கொண்டிருந்தார். உணவு எடுத்துவருவதாகக் கூறிச் சென்ற அதிதி, கர்ப்ப அவதி காரணமாக மெதுவாக நடந்து சென்று உணவை எடுத்து வந்தாள். இதனால் தாமதம் உண்டானது. அப்போது அந்த யாசகர், “ஏன் இவ்வளவு தாமதம். நீ என்னை அவமதித்து விட்டாய். உன் வயிற்றில் வளரும் பிள்ளை, இறந்து போகும்” என்று சபித்தார்.

    இதனால் பதறிப்போன அதிதி, இதுபற்றி தனது கணவர் காசியபரிடம் கூறினாள். அவரோ “நீ வீணாக பதற்றம் கொள்ள வேண்டாம். அமிர்த உலகத்தில் இருந்து அழிவே இல்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்றார்.

    அந்த வாழ்த்தின்படி பிரகாசமான ஒளியோடு பிறந்தவர்தான், சூரிய பகவான். ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், உலகை வலம் வந்து உலக உயிர்களை காப்பதால், திதிகளில் ஏதாவது திதியான சப்தமி நாளில் இவரை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியது. அதிலும் ரத சப்தமி அன்று விரதம் கடைப்பிடிப்பது, நமக்கு பல்வேறு பலன்களைப் பெற்றுத்தரும்.

    இந்த நாளில் சூரிய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும். 7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். இவ்வாறு வைத்துக் ெகாண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள் 7 எருக்கம் இலை களுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராடுவது சிறப்பு. கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.

    ரத சப்தமி அன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய- சந்திரரை வரைந்து, அவர்கள் பவனி வருவதாக நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உட்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய நாராயணரின் துதிகளைச் சொல்லி வழிபட வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம்.
    Next Story
    ×