search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீசக்கர பூஜை
    X
    ஸ்ரீசக்கர பூஜை

    அம்பிகை விரத வழிபாடும், ஸ்ரீ சக்கர பூஜையும்

    முறைப்படி விரதம் அனுசரித்து ஸ்ரீ சக்கரபூஜை செய்பவர் யோகமும், குரு பலனும், கிடைத்து பரம ரகசியங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெற முடியும்.
    அம்பிகைஅக்னி குண்டத்தில் தோன்றியவள். தேவர்களின் காரியங்களைச் சிறப்பாகச் சாதிப்பதற்காகவே அவள் தோன்றினாள். அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையை வழிபடுவதே “சண்டிஹோமம்” என்று அழைக்கப்படுகிறது.

    யாககுண்டத்தில் வளரும் தீயில் உருப்பெற்று எழும் ஸ்ரீ சக்கரத்தின் உச்சியில் உள்ள பிந்துவில் அன்னையானவள் பரமசிவனின் மடியில் எழுந்தருளி இருக்கிறாள். அவளிடமிருந்து அவனையும், அவனிடமிருந்து அவளையும் பிரிக்க இயலாது.

    காமேஸ்வரன் திருமடியில் எழுந்தருளியிருக்கும் அன்னை மஹாத்ரிபுரசுந்தரியானவள் நான்கு கரங்கள் கொண்டருள்கிறாள். அங்குசமும் பாசமும் பின்னிரு கரத்திலும் கரும்பும், பஞ்சபாணங்களும் அவளின் முன்னிரு கரத்திலும் மிளிர்கின்றன.

    இக்காமவல்லியை உபாசிக்கும் மரபே ஸ்ரீ வித்யையாகும். ஸ்ரீ வித்யையின் முக்கிய இடத்தை ஸ்ரீ சக்கர உபாசனை பெறுகிறது. ஸ்ரீ சக்கர மத்தியில் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட பஞ்ச பரும்மாசனத்தில் “ஸர்வானந்தமயபீடம்” என்கிற பிந்து வடிவமான மஹா பீடத்தில் காமேஸ்வரனின் இடது மடியில் அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும், மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்சபாணங்களையும் ஏந்தியவளாக ஸ்ரீ மத் லலிதா மஹாத்ரிபுர சுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.

    ஆக, அன்னையை இவ்வாறு மனதில் நிலை நிறுத்தி மனச்சுத்தி பேணி, வைதீக மரபின் வண்ணம் அக்னியிலும், ஆகம மரபின் வண்ணம் விக்கிரகத்திலும், தாந்திரீக மரபின் வண்ணம் ஸ்ரீ சக்கரத்திலும் ஆவாகித்து வழிபடுவர். அம்பிகையை ஸ்ரீ சக்கரம் என்ற யந்திரத்தின் நடுவில் பிந்துவில் எழுந்தருளச் செய்து, அவள் பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி அவளைச் சுற்றி ஒவ்வொரு கோணங்களில் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து வழிபடுவதே ஸ்ரீ சக்கர பூஜையாகும்.
    பூஜா மந்திரத்தாலும் ஆசமனத்தாலும் தூய்மை செய்த ஒருவர் குருவழிபாடு புரிந்து சங்கல்பித்துக் கொண்டு, தேகரட்சை செய்து கொள்ள வேண்டும். தேவி எழுந்தருளும் ஸ்ரீ சக்கரத்தினைச் சுற்றிலும் மதில்களாகவும், கோட்டைகளாகவும், நாற்பத்து நான்கு வரிசைகளை பாவனையுடன் பூசிக்க வேண்டும். இதுவே ஸ்ரீ சக்கர பூஜையின் முதல் அம்சமாகச் சொல்லப்பெறுகிறது.

    அடுத்துப் பூஜை செய்பவர் தமது உடலை மந்திரங்களின் மூலம் தெய்வீகமாக்கிக் கொள்ள வேண்டும். விக்னங்களை நீக்கிடும் விநாயகர் வழிபாட்டையாற்ற வேண்டும். இதன் பின், தெய்வீகச் சரீரமெங்கும் தேவர்களை ஆவாஹித்துத் தெய்வமயமாகச் ,சக்தி மயமாகத் தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கிற இடத்தையும் சாதகன் அமைத்துக் கொள்ள வேண்டும்.

    உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்கிற ஆறு சக்கரங்களையும் எழுப்பி தேவதைகளை நியாசம் செய்தல் வேண்டும். இவ்வாறு பதினெட்டு வகையான நியாசங்கள் உள்ளன.  இப்படியெல்லாம் தன்னை சுத்தி செய்து தெய்வீகப்படுத்திக் கொண்ட பின்னரே, ஒருவர் ஸ்ரீ சக்கரபூஜையினுள் நுழைய முடியும். ஸ்ரீ சக்கரபூஜையில் பாத்திரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

    கலசபாத்திரம், சாமான்யார்க்கிய பாத்திரம், குரு பாத்திரம், சுத்தி பாத்திரம், விசேஷார்க்கிய பாத்திரம், அலி பாத்திரம், பலி பாத்திரம், ஆத்மபாத்திரம், இவ்வாறாக அப்பாத்திரங்கள் பல்திறத்தன.. அவை பூஜையின் ஒவ்வொரு நிலைகளில் சாதகனால் பாவிக்கப்பெறுகிறது. உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஸ்ரீ சக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்.

    சதுஷ்ஷஷ்டி உபசாரங்கள் என்ற அறுபத்து நான்கு உபசாரங்களை அன்னைக்கு வழங்கிப் பூஜித்து, அம்பாளைச் சுற்றி எட்டெட்டு வரிசையில் சேரும் ஆவரண சக்திகளை பூஜிப்பர். இது பரிவாரார் அர்ச்சனை என்று குறிப்பிடப்பெறும். நிறைவாக, நவாவர்ணபூஜையும், லலிதா சஹஸ்ரநாம அல்லது திரிசதி நாம அர்ச்சனையும், நைவேத்தியத்துடன் விசேட பூஜையும் செய்வர். அதன் பின் பலிதானம், சுவாஸினீ பூஜை என்பவற்றினையும் ஆற்றுவர்.

    எம் தாயே, நாங்கள் தவறே செய்யினும் பொறுத்தருள வேண்டும். என்று விண்ணப்பம் செய்து பூஜாபலனையும் நிறைவில் அன்னையின் வரதஹஸ்தம் என்ற வரமருளும் இடது திருக்கரத்தில் சமர்ப்பிக்கப்பெற்று ஸ்ரீ சக்கரபூஜை நிறைவு பெறும். ஸ்ரீ சக்கர உபாசனை பயனும், அருளும்.

    ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரவழிபாட்டை சீரமைத்துப் பரவச் செய்தார் என்பது நம்பிக்கை. ஸ்ரீ வித்யோபாசனை என்று போற்றப்படுகிற ஸ்ரீ சக்கர வழிபாடு இன்று சக்தி வழிபாட்டாளர்களிடம் சிறப்புற்று விளங்குகிறது. ஆதிசங்கர சிருங்கேரியில் ஸ்ரீ சக்கரத்தின் மீது சாரதா தேவியைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்லுவர்.
    காஞ்சியில் காமகோடி பீட வாசினியாக எழுந்தருளியிருக்கிற அன்னை காமவல்லி முன்பாக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரபூஜை செய்திருக்கிறார்.

    சிதம்பரத்தில் ஆடவல்ல பெருமானின் வலப்பக்கத்தில் சிவசக்கரமும் சக்தி சக்கரமும் இணைந்து சம்மேளனமாக இருக்கிறது. இதனையே சிதம்பர ரகசியமாக வழிபடுகிற சிறப்பும் அமைந்திருக்கிறது. அன்னை சிவகாமி சந்நதியில் சிறப்பான ஸ்ரீ சக்கரம் ஒன்று அமைந்திருப்பதாகவும் குறிப்பிடுவர். குற்றாலத்தில் ஸ்ரீ சக்கரபீடம் இருப்பதாகவும் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் அம்பாள் சந்நதியில் ஸ்ரீ சக்கரமே பிரதிஷ்டை செய்யப் பெற்றிருப்பதாகவும் (அம்மைக்கு இங்கு திருவுருவம் இல்லை) திருவானைக்காவில் அகிலாண்டநாயகியின் காதணிகளில் ஸ்ரீ சக்கரம் பொறிக்கப்பெற்றிருப்பதா கவும் குறிப்பிடுவர். இவ்வாறாக, தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவஸ்தலங்களிலும் அன்னையின் ஸ்ரீ சக்கரம் சிறப்புடன் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

    ஸ்ரீ வித்யா உபாசனையை நன்கு நெறிப்படுத்தியவர்களில் ஆதிசங்கரர் வித்யாரண்யர், நீலகண்டர், பாஸ்கரராஜர் ஆகியோர் முதன்மை பெறுகின்றனர். முறைப்படி ஸ்ரீ வித்யையை அனுசரித்து ஸ்ரீ சக்கரபூஜை செய்பவர் யோகமும், குரு பலனும், கிடைத்து பரம ரகசியங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெற முடியும். பாஸ்கரராஜர் போன்ற முக்கிய ஆச்சார்யார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக சொல்கிறார்கள்.

    Next Story
    ×