search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீட்டில் பூஜை
    X
    வீட்டில் பூஜை

    அடிக்கடி உபவாசம் இருப்பது நல்லதா?

    விரதம் என்று காலை முதல் மாலை வரை உண்ணாமல் இருப்பது நமது இந்திய கலாச்சாரத்தில் பலரும் கடைபிடிக்கும் விஷயம்.
    விரதம் என்று காலை முதல் மாலை வரை உண்ணாமல் இருப்பது நமது இந்திய கலாச்சாரத்தில் பலரும் கடைபிடிக்கும் விஷயம். மாதத்தில் ஒருநாள் விரதம் இருந்தால் நல்லது என்றும் சொல்கிறார்கள். சிலர் வாரத்தின் பாதிக்கிழமைகளை விரதத்திலேயே கழிப்பார்கள். இதனால், சிலர் ஒல்லியாக பலவீனமாக காணப்படுவார்கள் ‘தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பேன்’ என்று சபதம் செய்வார்கள். முறையாக எப்படி விரதம் இருக்க வேண்டும்?

    விரதம் (Fasting) என்பதை பண்டைய காலத்தில் நமது முன்னோர் ‘உபவாசம் இருப்பது’ என்றுதான் சொல்லியுள்ளார்கள். உபவாசம் செய்வதன் நோக்கம் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்துவது. மாதம் ஒருமுறை உபவாசம் இருப்பது, நம் வாழ்க்கை முறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இன்னும் சிலர் உபவாசம் இருப்பதை எதுவும் உண்ணாமல் இருப்பது என்று நினைக்கிறார்கள். அது தவறு. எதுவும் சாப்பிடாமல் காலை முதல் மாலை வரை இருந்தால் கோபம் வரும்.

    எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். மற்றவர்கள் மீது எரிச்சல் படுவார்கள். எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக ஏற்படும். உபவாசம் இருப்பதன் முக்கிய நோக்கமே தன்னைத்தானே அகத்தாய்வு (introspection) செய்து கொள்ளவும், நேர்மறை எண்ணங்களை (Positive thoughts) வளர்த்துக் கொள்ளவும், மனதை புதிப்பிக்கவுமே விரதம் மேற்கொள்ளப்படுகிறது. மாதத்தின் ஒருநாள் செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, சினிமா பார்ப்பது, செல்போன் பேசுவது போன்ற அன்றாட நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு மனதுக்கும் உடலுக்கும் ஓய்வளிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் எதுவும் அந்த நாளில் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். முழுமையாக பட்டினி இருக்கக்கூடாது.

    பழச்சாறு, மோர், பானகம், எலுமிச்சைச்சாறு, இளநீர் போன்ற நீர்ச்சத்துக்கள் உள்ள பானங்களை போதுமான இடைவேளைகளில் அருந்திக் கொள்ளலாம். வேக வைத்த காய்கறிகளை சாப்பிடலாம். முளை கட்டிய தானியங்களை சாப்பிடலாம். சோயா பீன்ஸ், சுண்டக்கடலை, நவதானியங்கள் போன்ற நல்ல கலோரி அளவுள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி குடிக்கலாம். உடலுக்கு சக்தி இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உபவாசம் இருக்கும் நாளில் ஆன்மிகச் சிந்தனையுள்ள புத்தகங்களை படிப்பதும் நல்ல மனநிலையைக் கொடுக்கும். உணவு, பசி, மனம் மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எந்த வகையான உணவுகள் உண்ணுகிறோமோ அதற்கேற்ற எண்ணங்களே வரும்.

    வயிறு காலியாக இருக்கும் போதுதான் பொறாமை, கோபம், அகத்தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். உங்கள் முகபொலிவையும் பாதிக்கும். தேவையான இயற்கை உணவுகள் எடுத்துக்கொண்டு உபவாச பயிற்சியை மேற்கொண்டால் வயதான தோற்றம் மாறும். முகம் புத்துணர்வுடன் இருக்கும். போதுமான நீர்ச்சத்துக்கள் உடலில் தங்கும். உங்கள் ஜீரண உறுப்பு மண்டலம் நலமுடன் இருக்கும். போதுமான அளவு நீர்ச்சத்து உள்ள பானங்களை எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். வாயுத்தொல்லை, குடல் சம்பந்தமான பிரச்னைகள் இதனால் ஏற்படாது. தோல் மெருகேறும். பலவிதமான நோய்களை வராமல் தடுக்க முறையான உபவாசம் வழிவகுக்கும். மாதம் ஒருநாள் உபவாசம் இருந்தாலே போதும். போதுமான பயிற்சி இருப்பவர்கள் வாரம் ஒருமுறை கூட உபவாசம் இருக்கலாம்.
    Next Story
    ×