search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    கந்தன் அருள்பெற கைகொடுக்கும் தைப்பூச விரதம்

    ‘வேலை வணங்குவதே வேலை’ என்று மனதில்கொள்ள வேண்டியநாள், தைப்பூசம் ஆகும். அப்படிச் செய்தால், பழத்துக்காகப் போராடிய முருகப்பெருமான், நமது நலத்திற்காக கண்டிப்பாக அருள்புரிவார்.
    மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம்தான் தை மாதம். இந்த மாதத்தில்தான் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூசம், தை மாதம் 25-ந் தேதி (8.2.2020) சனிக்கிழமை வருகிறது. அந்தநாளில் நாம் ஒவ்வொருவரும் படைவீடுகளில் உள்ள முருகனையோ, பக்கத்து ஆலயத்தில் உள்ள முருகனையோ கண்டிப்பாக வழிபட வேண்டும். இந்தத் தைப்பூச வழிபாடுதான் நம்முடைய ஆசைகளை எல்லாம் நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடாகும். இந்தநாளைக் கொண்டாடுவதற்கு பழநியை நோக்கி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வார்கள்.

    ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி திதியில் அசுரர்களுடன் போரிட்டு முருகப் பெருமான் வெற்றி பெற்றார். போருக்குச் செல்லும் முன்பாக முருகப்பெருமானுக்கு, பராசக்தி ஞானவேல் கொடுத்த தினம், பூசம் நட்சத்திரம் ஆகும். முருகனின் வெற்றிக்காக அம்பாள், வேல் வழங்கிய நாள் பூச நட்சத்திரம் என்பதால், அந்த நாளில் இறைவனை வழிபட்டால் நம் முடைய ஆவல்கள் பூர்த்தியாகும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவர். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

    ஆசையில்லாத மனிதன் இல்லை. நம்முடைய ஆசைகள் நியாயமான ஆசைகளாக, அளவான ஆசையாக இருக்க வேண்டும். சிலர் சுயதொழில் செய்து முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுவர். இன்னும் சிலர், நிறையப் படித்து பெயருக்குப் பின்னால் ஏராளமான பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று விரும்புவர். வேறு சிலரோ ஞான மார்க்கத்தில் சென்று ஆன்மிக உலகத்தில் அடியெடுத்து வைக்கவேண்டும் என்று விரும்புவர். சிலர் திரைப்படத்துறையில் அடியெடுத்து நிலையான புகழ் பெற நினைப்பார்கள். வெளிநாடு வரை நமது புகழ் பரவ வேண்டும் என்றும் சிலர் நினைப்பதுண்டு.

    இந்த ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பது தெய்வ வழிபாடுகள் தான். நமது ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானாதிபதி இருக்கும் நிலையறிந்து, அதன் பலமறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் ஒவ்வொரு மாதங்களிலும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டாலும் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெற இயலும்.

    அந்த அடிப்படையில் தான் மாதங்கள் தோறும் முருகப்பெருமானுக்குரிய மங்கல நிகழ்ச்சிகள் நடந்தாலும், வைகாசி விசாகமும், தைப்பூசமும், ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டியும், கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகையும், பங்குனி உத்திரமும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதில் தை மாதம், சூரிய பலத்தோடு இருக்கும் மாதம். தேவர்களின் விழிப்புணர்ச்சி காலம். இந்த மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில், கந்தப்பெருமானை கைகூப்பி வழிபட்டால் வந்த துயரங்கள் வாசலோடு நின்றுவிடும். சந்ததிகள் தழைக்கும். தனவரவும் திருப்தி தரும். பூசத்தன்று வேலவன் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் குவியும்.

    சிவனுக்கு ஓங்காரத்தின் பொருளை உரைக்கப் பேசும் முகம் ஒன்று, அடியவர்களின் வினைகளைத் தீர்க்கின்ற முகம் ஒன்று, சூரனை சம்ஹாரம் செய்வதற்காக அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று, சூரனை வதைத்த முகம் ஒன்று, வள்ளியை மணந்துகொள்ள வந்த முகம் ஒன்று, தனது வாகனமான மயில் மீது ஏறி நின்று விளையாடும் முகம் ஒன்று. இப்படி ஆறு முகங்களைப் பெற்ற அழ கனைப் போற்றிக் கொண்டாட உகந்தநாள், தைப் பூச நன்னாளாகும். அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் நம் ஆசைகள் நிறைவேறும்.

    திருச்செந்தூர் சென்று வழிபட்டு வந்தால் பகை மாறும். மனம் தெளிவு பெறும். பழனி சென்று வழிபட்டு வந்தால் செல்வநிலை உயரும். சுவாமிமலை சென்று வழிபட்டு வந்தால் ஞானம் கைகூடும். திருத்தணி சென்று வழிபட்டு வந்தால் கோபம் தணியும். பழமுதிர்சோலை சென்று வழிபட்டு வந்தால் நமது நிலை உயரும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தி யாகும்.

    ஆறுபடை வீடுகளுக்கும் செல்ல முடியாதவர்கள், அந்த படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து உள்ளம் உருகி வழிபட்டாலோ, உள்ளூரில் உள்ள முருகப்பெருமானை சேவித்து வந்தாலோ நல்ல வாழ்க்கை அமையும். நம்பிக்கைகள் நடைபெறும். தைப்பூசம் அன்றுதான் அருட்பிரகாச வள்ளலார் அருள் வழங்கும் வடலூரில் ஜோதி வழிபாடு கொண்டாடப்படுகின்றது. பொதுவாக இந்த பூசவழிபாடு என்பது ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரக்கூடிய வழிபாடாக அமைகிறது.

    ‘வேலை வணங்குவதே வேலை’ என்று மனதில்கொள்ள வேண்டியநாள், தைப்பூசம் ஆகும். அப்படிச் செய்தால், பழத்துக்காகப் போராடிய முருகப்பெருமான், நமது நலத்திற்காக கண்டிப்பாக அருள்புரிவார்.

    “ஜோதிடக்கலைமணி” சிவல்புரி சிங்காரம்
    Next Story
    ×