search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரஸ்வதி தேவி
    X
    சரஸ்வதி தேவி

    வசந்தம் வீசச் செய்யும் வசந்த பஞ்சமி விரதம்

    வசந்த பஞ்சமி அன்றுதான் சரஸ்வதி அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான், வடமாநிலங்களில் அன்றைய தினம் விரதம் இருந்து சரஸ்வதி வழிபாட்டை செய்கிறார்கள்.
    தமிழகத்தில் சரஸ்வதி வழிபாடு என்பது நவராத்திரியை ஒட்டி, புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். வட நாட்டில் நவராத்திரியை, துர்க்கை வழிபாடாக நடத்துவார்கள். ஜனவரி- பிப்ரவரி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதியை ‘வசந்த பஞ்சமி’ என்று வர்ணிப்பார்கள். இந்த நாளை வட நாட்டில் சரஸ்வதி வழிபாட்டிற்குரிய தினமாக கடைப்பிடிக்கின்றனர். தமிழ்நாட்டில் வசந்த பஞ்சமி தினமானது, காமன் பண்டிகையாக பழங்காலங்களில் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.

    வசந்த பஞ்சமி அன்றுதான் சரஸ்வதி அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான், வடமாநிலங்களில் அன்றைய தினம் விரதம் இருந்து சரஸ்வதி வழிபாட்டை செய்கிறார்கள்.

    ஆதிகாலத்தில் இந்த உலகத்தையும், அதில் உள்ள உயிரினங்களையும் படைத்தார் பிரம்மா. அதன்பிறகும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. தன்னுடைய படைப்புகளில் ஏதோ ஒரு குறை இருப்பதாக அவரது மனம் நெருடியது. இந்த நிலையில் அவர் தன் கமண்டலத்தை கையில் எடுத்த போது, அதில் இருந்து சில துளி தண்ணீர் சிந்தியது. அந்த துளிகளில் இருந்து ஒரு பெண் சக்தி வெளிப் பட்டது.

    அந்த சக்தியின் கையில் சுவடிகளும், வீணையும், ஸ்படிக மாலையும் இருந்தது. நீரில் இருந்து வெளிப்பட்ட அந்த சக்தியானவள், தன் கையில் இருந்த வீணையை மீட்டினாள். அதில் இருந்து தெய்வீகமான இசை வெளிப்பட்டது. அந்த இசையின் காரணமாக, பிரம்மனின் படைப்புகள் அனைத்தும் ஓசை நயம் பெற்றன. ஆறுகள் சலசலக்கத் தொடங்கின. கடல் பெருத்த சத்தத்துடன் அலைகளை வெளிப்படுத்தியது. காற்று பெரும் இரைச் சலுடன் வீசியது. மனிதர்கள் அனைவரும் மொழியறிவு பெற்றனர்.

    இதையடுத்து பிரம்மதேவன் மகிழ்ச்சி அடைந்தார். அந்த பெண் சக்தியை பலவிதமாக போற்றினார். அந்த பெண் சக்தியே ‘சரஸ்வதி’ ஆவாள். அவள் தோன்றிய தினமே ‘வசந்த பஞ்சமி’ என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்தால், ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

    மேற்கு வங்கத்தில் வசந்த பஞ்சமி அன்றுதான், குழந்தைகளின் கல்வியை தொடங்குகிறாா்கள். அப்போது குழந்தைகளின் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழில்நுட்ப கருவிகள் என்று பலவிதமான பொருட்களை வைப்பாா்கள். அதில் இருந்து குழந்தை எதை எடுக்கிறதோ, அதில் ஆர்வமும், எதிர்காலமும் அமையும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பேனாவை எடுத்தால், அறிவில் சிறந்து விளங்குவார்கள் என்றும், இசைக் கருவிகளை தொட்டால் இசைத் துறையில் பெரும் புகழ் பெறுவார்கள் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.

    பஞ்சாப், அரியானா, ஜம்மு-காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அன்றைய தினம் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து வழிபாடு செய்வார்கள். அன்றைய தினம் அனைத்துமே மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யப்படும். சரஸ்வதிக்கு மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற மலர்மாலை அணிவிப்பார்கள். பூஜையில் வைக்கப்படும் பிள்ளையார் கூட, மஞ்சளில் பிடித்து வைக்கும் மஞ்சள் பிள்ளையார்தான்.

    மேலும் சரஸ்வதிக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களும், லட்டு உள்ளிட்ட மஞ்சள் நிற நைவேத்தியங்களாகவே இருக்கும். பஞ்சாப் பகுதிகளில் இந்த காலகட்டத்தில்தான் கடுகு செடியில் மஞ்சள் நிறப்பூக்கள் பரவலாக பூத்துக் குலுங்கும். அதனை அடிப்படையாகக் கொண்டே இப்படி மஞ்சள் வண்ணம் பூசப்படுவதாக சொல்கிறார்கள். இல்லங்களில் கூட அனைவரும் மஞ்சள் நிற ஆடைகளையே அணிவார்கள். குஜராத் மாநிலங்களில், இளைஞர்கள் பல வண்ண பட்டங்களை காற்றில் பறக்கவிடுவார்கள்.

    ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா - சரஸ்வதி கோவில், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோவில், ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவில் ஆகிய தலங்களில் வசந்த பஞ்சமி திருநாள் மிக விமரிசையாக கொண்டாடப்படும்.
    Next Story
    ×