search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணன்
    X
    கிருஷ்ணன்

    பெண்களால் ஏற்பட்ட சாபத்தை போக்கும் விரதம்

    ஒருவரது வீட்டில் பெண்களால் ஏற்பட்ட சாபத்தை விலக்க இந்த விரதம் மிகவும் அவசியமானது ஆகும். இந்த விரதம் தோன்றிய கதையை அறிந்து கொள்ளலாம்.
    மன மகிழ்வுடனும், உடல் ஆரோக்கியத்துடனும், தன தானியம் பெற்று பெரு வாழ்வு வாழும் பாக்கியத்தை ரிஷி பஞ்சமி விரதம் தருவதாக ஆன்மிக சான்றோர்கள் கூறுகிறார்கள். அதைவிட முக்கியமானது என்னவென்றால், ஒருவரது வீட்டில் பெண்களால் ஏற்பட்ட சாபத்தை விலக்க இந்த விரதம் மிகவும் அவசியமானது ஆகும்.

    பாண்டவர்களில் ஒருவரான தருமர், கிருஷ்ணரிடம் சென்று ஒரு உபாயம் கேட்டார். அதாவது “கிருஷ்ணா! எங்கள் குடும்பத்திற்கு பெண்களால் சாபம் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். அந்த சாபம் விலக என்ன பரிகாரம், விரதம் இருக்க வேண்டும்” என்று கேட்டார். (பாண்டவர்கள் ஐந்து பேருக்கு, திரவுபதி ஒருத்தி மட்டுமே மனைவியாக அமைந்தது கூட, ஒரு பெண்ணின் சாபத்தின் விளைவால்தான்).

    அதற்கு பதிலளித்த கிருஷ்ணர், “உங்களின் குடும்பத்திற்கு, பெண்ணின் சாபம் இருப்பதாக நீங்கள் கருதினால், அது விலகுவதற்காக ஒரே தீர்வு ரிஷி பஞ்சமி விரதம் மேற்கொள்வதுதான்” என்றார். மேலும் இதுதொடர்பான ஒரு கதையையும் அவர் தருமருக்கு எடுத்துரைத்தார்.

    அந்தக் கதையை இங்கே காணலாம். பாரத தேசத்தில் விதர்பா ராஜ்ஜியம் இருந்தது. அதை ஆட்சி செய்த மன்னன் நல்ல குணங்களுடனும், மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் தனது அரசாட்சியை நடத்தி வந்தான். அந்த ராஜ்ஜியத்தில் அனைத்து நற்குணங்களும் கொண்ட சுமித்தரா என்ற வேதியன் வாழ்ந்து வந்தான். அவனைப் போலவே அவனது மனைவி ஜெயஸ்ரீயும் அனைத்து நற்குணங்களும் பொருந்தியவளாக இருந்தாள்.

    மிகவும் கட்டுப்பாடும், ஆன்மிக நெறியும் மிக்க அந்த குடும்பத்தில் அவர்களையும் அறியாமலேயே தீட்டு பட்டு விட்டது. அது அவர்கள் அறியும் முன்பாகவே அவர்கள் இருவரும் மரணம் அடைந்து விட்டார்கள். மறு பிறவியில் கணவன் மாடாகவும், மனைவி நாயாகவும் பிறந்தனர். அவர்களின் கர்மவினை காரணமாக, அவர்கள் இருவரும் அவர்களின் மகன் வீட்டிலேயே வளரும் நிலை உருவானது. மாடாக இருந்த சுமித்தராவுக்கும், நாயாக இருந்த ஜெயஸ்ரீக்கும் அது தங்களின் மகனின் இல்லம் என்பது தெரியும். ஆனால் அவர்களின் மகனுக்கு அது ஒரு மாடு, நாய் என்ற வகையிலேயே அறிந்திருந்தனர்.

    ஒரு நாள் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செலுத்தும் தினம். அன்று அவர்கள் வீட்டில் சமைத்து வைத்த பாயசத்தை பாம்பு ஒன்று சாப்பிட முயன்றது. ஆனால் பாயசம் மிகவும் சூடாக இருந்தது. அதனால் சூடு தாக்கியதில் பாம்பு, பாயசத்திற்குள் தன்னுடைய விஷத்தை உமிழ்ந்து விட்டது. இதைத் தற்செயலாகப் பார்த்து விட்ட அந்த வீட்டின் நாயாக இருந்த ஜெயஸ்ரீ, ‘தன்னுடைய மகனுக்கு பாம்பின் விஷம் தாக்கி, அவர்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே’ என்று நினைத்தாள்.

    எனவே ஓடோடிச் சென்ற நாய், பாயசம் இருந்த பாத்திரத்தை தரையில் கவிழ்த்து விட்டது. இதைப் பார்த்த வீட்டு சமையல்காரப் பெண்மணி, அந்த நாயை முது கெலும்பு முறியும் அளவுக்கு அடித்துத் துரத்தினாள். பின்னர் மீண்டும் வேறு பாயசம் செய்து வைத்தாள். அடிபட்ட நாய் வலி தாங்காமல் அழுது கொண்டே, மாடாக இருந்த தன்னுடைய கணவரிடம் சென்று தன்னுடைய நிலையை எடுத்துக்கூறியது. அவளை மாடு உருவில் இருந்த கணவன் தேற்றினான்.

    இந்த நிலையில் அனைத்து சாஸ்திரங்களையும் நன்கு படித்திருந்த சுமித்தராவின் மகன், தன் வீட்டில் இருக்கும் விலங்குகள் இரண்டும் ஏதோ பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டார். அவருக்கு விலங்குகளின் பாஷை புரியும். அவர், தன்னுடைய தாய் தந்தையரே இந்த ஜென்மத்தின் நாய், மாடாக பிறந்து இருப்பதை அந்த விலங்குகள் பேசியதை வைத்துப் புரிந்து கொண்டார். “எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம். எந்த தாய், தந்தையின் மரணத்திற்காக இன்று சிரார்த்தம் செய்கிறோமோ, அந்த நாளில் அவர்களின் மனதை வருத்தப்பட வைத்து விட்டோமே” என்று கலங்கினான்.

    பின்னர் அந்த இரு விலங்குகளையும் உள்ளே அழைத்து வந்து, நன்கு குளிப்பாட்டி அவற்றை வணங்கினான். பிறகு அவற்றை அழைத்துக் கொண்டு ஒரு முனிவரிடம் சென்று, அதற்கு பரிகாரம் கேட்டான். அவரும் ரிஷி பஞ்சமி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறி, அதை செய்தால் அவனுடைய பெற்றோர் களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று கூறினார். அவனும் அதை செய்து தன் பெற்றோர்களுக்கு மோட்சத்தை அடைய வழி செய்தார்.

    இந்தக் கதையை தருமரிடம் கூறிய கிருஷ்ணர், எந்த ஒருவன் ரிஷி பஞ்சமி விரதத்தை சரியாகக் கடைப்பிடித்துச் செய்கிறானோ அவனுடைய குடும்பத்துக்கு பெண்களால் ஏற்பட்ட சாபம் விலகும் என்று கூறி அவருக்கு வழி காட்டினார்.

    பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கிக் கொள்ள, விதர்பாவை ஆண்டு வந்த சிதாஷ்வ எனும் மன்னன் பிரம்மாவிடம் ஒரு விரதத்தை தமக்கு அருளுமாறு வேண்டிக் கேட்டான். அதற்கு பிரம்மன், இந்தக் கதையைக் கூறியதாகவும் சொல்லப் படுகிறது. பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கும் விரதம், ரிஷி பஞ்சமி விரதம் என்பது வடநாடுகளில் ஐதீகமாக இருக்கிறது.

    Next Story
    ×