search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீராகவேந்திரர்
    X
    ஸ்ரீராகவேந்திரர்

    ஸ்ரீராகவேந்திரர் விரத முறை

    ஸ்ரீராகவேந்திரரின் அருளைப் பெறுவதற்காக விரதம் இருப்பவர்களும் உண்டு. இந்த விரதத்தை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
    சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரியில் பிறந்து, தஞ்சாவூரில் தவம் இயற்றிய ஸ்ரீராகவேந்திரரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். ஸ்ரீராகவேந்திரரின் அருளைப் பெறுவதற்காக விரதம் இருப்பவர்களும் உண்டு. இந்த விரதத்தை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

    ஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். அன்று பூச நட்சத்திரமாக இருந்தால் மிகவும் சிறப்பு. வேறு நட்சத்திரமாக இருந்தாலும் வழிபடலாம். குரு ஓரை நேரத்தில் விரதத்தை தொடங்குவது நல்லது. ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும்.

    ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்துமுக குத்துவிளக்கு வைக்க வேண்டும். பூஜைக்கு வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை.

    பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மனைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து, துளசி மாலை சூட்ட வேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும்.

    பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும். பூஜையை ஆரம்பிப்பதற்கு முன்பாக, குல தெய்வத்தை வழிபட்டு பின் மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கும் சந்தனம், குங்குமம், மலர் சூட்ட வேண்டும்.

    நைவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம்.

    ஸ்ரீராகவேந்திரர் படத்திற்கு தீப, தூபம் காட்டி, தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி இலைகளை வைத்துக்கொண்டும் எழுந்து நின்று,

    “பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய சத்ய தர்ம

    ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய

    நமதாம் ஸ்ரீ காம தேநுவே”

    என்று சொல்லிக்கொண்டே படத்தையும், விளக்கையும் பதினோரு தடவை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும்போது, சுலோகத்தைச் சொல்ல வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி இலையை படத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும். முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தபின், தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

    இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின், ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்க வேண்டும்.

    இவ்வாறு நாம் பிரார்த்தனை செய்யும்போது நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். ஸ்ரீராகவேந்திரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
    Next Story
    ×