search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்று புண்ணிய பலன்களை தரும் மாசி மக விரதம்
    X

    இன்று புண்ணிய பலன்களை தரும் மாசி மக விரதம்

    மாசி மாதத்தில் பவுர்ணமியோடு கூடிய மகம் நட்சத்திரம் வரும் மாசி மகமான இந்த புண்ணிய நாளில், விரதம் இருந்து புண்ணிய தீர்த்தங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
    19-2-2019 (இன்று) மாசி மகம்

    மாசி மாதத்தில் பவுர்ணமியோடு கூடிய மகம் நட்சத்திரம் வரும் தினத்தை ‘மாசி மகம்’ என்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இந்த புண்ணிய நாளில், விரதம் இருந்து புண்ணிய தீர்த்தங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

    முன்காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் பல கொடிய செயல்களைச் செய்து, மக்களை துன்புறுத்தி வந்தான். அவனைக் கொல்வதற்கான வழியை, அவனது குலகுரு அறிந்திருந்தார். அதை வருண பகவானிடம் சொல்வதற்காக அவர், இருள் சூழ்ந்த நேரத்தில் சென்றார். இருட்டில் குருவை பகைவன் என்று நினைத்த வருணன், அவர் மீது தனது பாசத்தை வீசினான். இதில் அந்த குரு இறந்தார்.

    அவன் செய்த பாவத்தினால் அங்கு ஒரு பெரிய ராட்சசன் தோன்றினான். அவன், வருணனை இரண்டு கால்கள் மற்றும் கைகள், கழுத்தோடு இணையும்படி கட்டி, கடலுக்குள் தூக்கி வீசினான். அந்த துன்பத்தில் இருந்து விடுபட முடியாமல் பலகாலமாக கடலுக்குள்ளேயே கிடந்தான் வருணன். இதையடுத்து தேவர்கள், முனிவர்கள் பலரும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். வருணனை விடுவிக்கும்படி வேண்டுதல் வைத்தனர். இதையடுத்து சிவபெருமான், வருணன் ஆழ்ந்து கிடந்த சமுத்திரத்தில் எழுந்தருளி, அவனது கட்டுகளை விடுவித்து அருளினார். இது நிகழ்ந்ததாக சொல்லப்படுவது சிதம்பரம் திருத்தலம் ஆகும்.

    துன்பத்தில் இருந்து மீண்ட வருணன், சிவபெருமானை வணங்கி “இறைவா! மாசி மகமாகிய இந்த தினத்தில், இத்தலத்தில் நீராடு பவர்களுடைய துன்பங்களை போக்கி அருள வேண்டும். அதுபோன்ற தருணங்களில் இறைவனாகிய நீங்கள், புண்ணிய நதிகளில் எழுந்தருளி மக்களை காத்தருள வேண்டும்” என்று வேண்டி வரம் பெற்றான்.

    இந்த கதையை வியாக்ரபாத முனிவர், இரணியவர்மன் என்ற மன்னனுக்கு கூறினார். அவன் மாசி மகத்தன்று, சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு கொடியேற்றி வைத்தான். அப்போது தேவர்கள், முனிவர்கள் பலரும் அங்கு வந்து விழாவை கண்டுகளித்தனர். மேலும் “இறைவா! கனகசபைக்குத் தலைவரே. எங்களுக்கு அருள் செய்யுங்கள்” என்று வேண்டினர்.

    பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் வழியை அலங்காரம் செய்தனர். சிவபெருமான் கடற்கரைக்கு எழுந்தருளினார். இதனை வருணன் கண்டு, எதிர் கொண்டு ஈசனை வணங்கினான். சிவபெருமான் வருணனின் துன்பத்தை நீக்கிய துறையிலேயே நீராடி, அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்து கனக சபைக்குள் புகுந்தார்.

    சிதம்பரத்தில் உள்ள பத்து தீர்த்தங்களில் ‘பாசமறுத்த துறை’யும் ஒன்று. இது சிதம்பரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாசி மக நாளில் அந்த தீர்த்தத்தில், தீர்த்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.
    Next Story
    ×