என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இன்று குரு பூர்ணிமா: விரதமிருந்து வழிபடுங்கள்
    X

    இன்று குரு பூர்ணிமா: விரதமிருந்து வழிபடுங்கள்

    குரு பூர்ணிமா அல்லது குரு பவுர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள்.
    இன்று (செவ்வாய்க்கிழமை) குரு பவுர்ணமி தினம்.

    “குரு பூர்ணிமா அல்லது குரு பவுர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள். குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும், குரு பூர்ணிமா தனி மனிதன் தனதுகுருவின் வழிகாட்டுதலுடன் தன்னை உணரும் சாதனையைத் துவங்கும் தொடக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைவது உறுதி என வேதம் கூறுகிறது.

    குருபூர்ணிமா அன்று செய்யும் பயிற்சியும், அன்று கிடைக்கும் குருவின் தொடர்பும் இப்பிறவியில் மட்டுமல்ல , பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். நமது தேசத்தில் பல ஞானிகள் - ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் உயர்ந்ததாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை.

    குருவின் துணையோடு யோகசாதனையைத் தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா.யோகப்பண்பாட்டில் இந்தத் திருநாள் ஆனந்தமான ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது. குரு பூர்ணிமா என்று சொல்லப்படும் வியாச பவுர்ணமி நாளில் (ஆடிப் பவுர்ணமி) குருவுடன் இருந்தால், தாங்கள் பெற்ற ஞானச்செல்வம் மேன்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வு ஒளிமயமாகத் திகழும் என்பது யோக ரகசியமாகும்.

    குரு என்பவர் நம் மன இருளைப் போக்குபவர். நம் மனத்தை இருள் சூழ்ந்திருக்கிறதென்றால் என்ன அர்த்தம்? நம்முடைய உண்மையான உருவத்தை, நிலையை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். நம் உடலே நாம் என்று திடமாக நம்பிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

    “நீ உடல் அல்ல அதற்கும் அப்பாற்பட்டவன். சுத்தப் பேரானந்த பெருநிலையே நீ. எங்கும் நீக்கமற நிறைந்த, உருவமற்ற, முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட, பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்ட சச்சிதானந்த பேரின்பப் பேருணர்வின் ஒரு துளி நீ” என்று நம்மை உணர வைக்கிறார் நம் குரு.

    அவர் ஏற்கனவே அந்த உணர்வினைப் பெற்றவர். அந்த அனுபவத்தின் உதவியுடன் நீயும் அதைப் பெற வழிமுறைகளைக் காட்டுகிறார். அந்த உணர்வை நாம் பெற்ற உடன், நமக்கு ஆத்ம விழிப்பு உணர்வு நிலை ஏற்படுகிறது. அது நம்மை மீண்டும் இந்த உலகில் பிறவா நிலைக்கு இட்டுச் செல்கிறது. நாம் பிறவி எடுத்ததன் குறிக்கோள் இந்த ஆத்ம உணர்வை பெறுவது தான். அதைப் பெற நமக்கு நம் குரு உதவுகிறார். எனவே அந்த நன்றிக் கடனைச் செலுத்த ஆண்டிற்கு ஒரு முறை குரு பூர்ணிமா நாளன்று அவரை சிறப்பாக வழிபடுகிறோம்.

    ஆகையால் குரு பூர்ணிமாவன்று நம் குருவை மட்டுமின்றி அவரது குரு பரம்பரையையே வணங்கிப் போற்ற வேண்டும். நம் குருவிற்கும் ஒரு குரு உண்டல்லவா? ஆக நம் குருவிற்கு ஒரு குரு, அவருக்கும் மேலே ஒரு குரு என்று நம் குரு பரம்பரை முழுவதையுமே போற்றி வழிபடும் நாள் குரு பூர்ணிமா. இதை “வியாச பூர்ணிமா” என்றும் கூறுவார்கள். வியாசர் விஷ்ணுவின் அவதாரம். குரு பூர்ணிமா அன்று தான் அவர் தோன்றினார் என்றும், அவர் பிரம்ம சூத்திரம் எழுத ஆரம்பித்த நாள் என்றும் கூறப்படுகிறது.

    இறைவனின் மூச்சுக் காற்றாகிய வேதத்தை நமக்குக் கொடுத்தவர் வியாசர். மகாபாரதம், பதினெட்டு புராணங்களை இயற்றியவர். எனவே அவரில் ஆரம்பித்து நம்முடைய குரு வரை அனைவரையும் மனம், மொழி, மெய்யால் வணங்க வேண்டும்.
    ஆன்மீகத்தில் ஒரு பழமொழி உள்ளது இறைவனால் கொடுக்கப் பட்ட சாபத்தை ஒரு குருவினால் மாற்ற முடியும், ஆனால் ஒரு குருவினால் கொடுக்கப்பட்ட சாபத்தை இறைவனாலும் மாற்ற முடியாது என்பதாகும். இதனை கூர்ந்து நோக்கினால் குருவின் வலிமை தெரியும்.

    சூரியனின் ஒளிக்கதிரை எப்படி சந்திரன் பிரதிபலித்து நமக்கு ஒளி தருகிறதோ அதே போல் குருவானவர் இறைவனின் அருள் ஒளியைப் பிரதிபலித்து நமக்கு தருபவர். குரு ஒரு பக்தனிற்கும் இறைவனிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் ஒரு கருவியாக ஒரு பாலமாக செயல்படுபவர்.

    ஆன்மீக அன்பர்கள் குரு பௌர்ணமி நாளில் வியாச முனிவருக்கோ அல்லது தங்கள் ஆன்மீக குருவிற்கோ சிறப்பு பூசைகள் செய்வது வழக்கமாகும். ஆன்மீக தேடல் உள்ளவர்கள் இந்நாளில் தங்கள் பயிற்சியை தொடங்குவது சிறப்பைத் தரும். குரு பவுர்ணமி தினத்தன்று அனைவரும் மனதளவில் தங்களுடைய ஆஸ்தான குருவாக ஏற்றுக்கொண்டவருக்கு பூஜைகள் செய்தால் அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட வித்தைகளை முழுமையாக உள்வாங்கும் பாக்கியத்தை பெற முடியும்.

    எனவே குரு பவுர்ணமி தினமான நாளை, நீங்கள் யாரையெல்லாம் உங்களது குரு என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு உரிய மரியாதை செய்து போற்றி வழிபடுங்கள். இந்த வழிபாடு உங்களுக்கு இந்த பிறவியில் தேவையானதை தந்து உங்களை நிச்சயம் முக்தி பாதைக்கு அழைத்து செல்லும்.

    சாய் சத்சரிதம் படியுங்கள் :

    குரு பூர்ணிமா தினத்தன்று ஸ்ரீ சாய் சத்சரிதத்தை முழுமையாகவோ அல்லது ஓரிரு அத்யாயங்களோ படிக்கலாம். குறிப்பாக பிரம்ம ஞானத்தைப் பற்றி பாபா கூறும் ஸ்ரீ சாய் சத்சரிதாவின் 16, 17 அத்யாயங்களை படிக்க லாம். பாபாவிற்கு பிடித்தமான ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்யலாம். முடியாவிட்டால் பாராயணம் செய்யப்படுவதை செவிமடுத்து கேட்க வேண்டும்.
    Next Story
    ×