என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாண விரதம்
    X

    மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாண விரதம்

    கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு பிருந்தாவன துவாதசி என்று பெயர்.
    கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது. மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை மேற்படி நாளில் "உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ' என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.

    துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடியபின், துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும். துளசிச் செடிக்கு பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும்.

    சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம். மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும்.

    அப்போது,

    "அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
    இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி
    நேச்வர பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத்
    வந்திதாம் மயா த்வத் ப்ரியாம் துளஸிம்
    துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'

    என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும். நல்ல முகூர்த்த நேரத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு. துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள். துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.

    சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர். துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வார். அதனால் துளசிக்கு "விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா' என்ற பெயர்களும் உண்டு.

    Next Story
    ×