என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாபவினைகளை போக்கி அருளும் சித்ரகுப்த விரதம்
    X

    பாபவினைகளை போக்கி அருளும் சித்ரகுப்த விரதம்

    பாபவினைகளை போக்கி அருளும் மகிமை சித்ரகுப்த விரதத்துக்கு உண்டு. இதன் பெருமையை விவரித்துக்கூறும் புராணக்கதையைப் பார்க்கலாம்.
    ஒருசிறுவனுக்கு படிப்பு வரவில்லை. முரட்டுத்தனமும், கோபமும் அதிகமுள்ள அவன் தவறான செயல்களில் ஈடுபட்டான். இதனால் கவலைப்பட்ட அவனது தாய் மகனே ‘சித்ரகுப்தய நம’ என தினமும் சொல்லிக்கொண்டே வா! சித்ரகுப்தன் உனக்கு நல்வழிகாட்டுவார் என்றாள். அவனும் சித்ரகுப்தன் பெயரை உச்சரித்துக்கொண்டே வந்தான். ஒருநாள் சித்ரகுப்தன் மகிழ்ந்து அவன் ஏட்டைப்புரட்டிபார்த்தார். அவன் மரணம் அடைய ஏழு நாட்களே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    சித்ரகுப்தன் பெயரை கூறிய அந்த ஒரு நல்ல செயலைத்தவிர அவன் வேறு எதையும் செய்யவில்லை. அவன் மீது இரக்கம் கொண்ட சித்ரகுப்தன் அவன் கனவில் தோன்றி, நீ என்பெயரை உச்சரித்ததை தவிர வேறு எந்த நற்செயல்களையும் செய்யவில்லை. உன் நிலத்தில் ஒரு குளத்தை வெட்டு. அதில் ஒரு மாடு நீர் அருந்தினால் மூணே முக்கால் நாழிகை வரை உனக்கு சொர்க்கம் கிடைக்கும். மரணமடைந்ததும் உன்னிடம் எமன், முதலில் சொர்க்கத்துக்கு செல்கிறாயா? நரகத்துக்கு செல்கிறாயா? என்று கேட்டால், முதலில் சொர்க்கத்துக்கு போகச்சம்மதிக்கிறேன் என்று சொல்லிவிடு என்று ஆலோசனை கூறிவிட்டு மறைந்தார்.

    சித்ரகுப்தன் கனவில் கூறியபடி அந்தச்சிறுவன் குளம் வெட்டினான். முதல்நாளில் குளத்தின் ஓரிடத்தில் சிறிது ஊற்று சுரந்தது. சித்ரகுப்தன் மாடாக வந்தார். கரையில் நின்று அம்மா என்று குரல் கொடுத்தார். மாடுகள் பல ஓடி வந்தன. ஒருமாடு தண்ணீர் குடித்தது. அதற்குள் சிறுவன் உயிர்பிரிந்தது. எமன் அவன் கணக்கை கூறும்படி கூறினார். சித்ரகுப்தன் இவன் சாகும் முன்பு ஒரு குளத்தை வெட்டியிருக்கிறான் அதில் ஒரு மாடு தண்ணீர் குடித்து இருக்கிறது என்றார்.

    இதைக்கேட்ட எமதர்மராஜா உனக்கு மூன்றே முக்கால் நாழிகை சொர்க்கவாசம் உண்டு. முதலில் சொர்க்கவாசம் அனுபவிக்கிறாயா? நரகத்திற்கு செல்கிறாயா? எனக்கேட்டார். அதற்கு சித்ரகுப்தன் தன் கனவில் சொன்னபடி முதலில் சொர்க்கத்துக்கு செல்கிறேன் என்று சிறுவன் கூறினான். இதற்கிடையே அவன் வெட்டிய குளத்தில் தண்ணீர் ஊற, ஊற்றினில் மாடுகள் வந்து தண்ணீர் குடித்தன. அவனது புண்ணிய கணக்கும் ஏறிக்கொண்டே இருந்தது. சொர்க்கத்திலேயே அவனுக்கு நிரந்தர இடம் கிடைத்தது.

    சித்ரகுப்தன் பெயரைச்சொன்னதற்காகவே, ஒருவன் சொர்க்கவாசம் அனுபவித்தான் என்றால் ஒவ்வொரு பவுர்ணமியிலும் சித்ரகுப்தனுக்கு விரதம் இருந்து அவரை வழிபட்டால் அவரது மகிமையால் அளவுகடந்த புண்ணியம் கிடைக்கும். 
    Next Story
    ×