search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    ஒன்றுபடுவோம்... வென்றெடுப்போம்...

    ஒற்றுமை என்பது உணர்வுப்பூர்வமானது. ஒவ்வொருவரும் தம் விருப்பு வெறுப்புகளை விலக்கி, விட்டுக்கொடுத்து உருவாக்க வேண்டிய பாசப்பிணைப்பு தான் ஒற்றுமை.
    ஒற்றுமை என்பது உணர்வுப்பூர்வமானது. ஒவ்வொருவரும் தம் விருப்பு வெறுப்புகளை விலக்கி, விட்டுக்கொடுத்து உருவாக்க வேண்டிய பாசப்பிணைப்பு தான் ஒற்றுமை.

    அதனால் தான் அருள்மறை, அல்லாஹ்வின் கட்டளையை இப்படிச் சொல்லிக்கொடுக்கின்றது:

    “நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். (திருக்குர்ஆன் 3:103)

    ஒரு காரியத்தில் நல்ல முடிவு எட்டப்படுவதற்கு பலகாரணங்கள் இருக்கக்கூடும். அவற்றில் சிறந்தவற்றை பேசித்தீர்த்து தீர்மானிப்பதே அறிவுடைமையாகும். அதனால், நல்லபயன்களும் விளையும்.

    ஆனால் சிலர், பிரச்சினைகள் வரும் என்று நன்றாக அறிந்திருந்தும் ‘நான் சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறுவதுண்டு. அதுபோல, நல்லதாக இருந்தாலும் பிறர்சொல்லியதால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் சிலர் பிடிவாதமாக இருப்பதுண்டு.

    இதுபோன்ற செயல்களால் தான் நம்மிடையே பிளவுகளும், வேற்றுமைகளும் தலைவிரித்து ஆடுகின்றன.

    வேற்றுமைகளால் வீழ்ந்து விட்ட பல சாம்ராஜ்யங்கள், பிறகு ஒன்றுபட்ட எழுச்சியினால் மீண்டும் உயிர்பெற்ற வரலாறுகள் உண்டு.

    உஹது போரில் உச்சகட்ட நேரம். கிட்டத்தட்ட வெற்றிக்கனியைப் பறித்தாகிவிட்டது. எதிரிகள் திரும்பி வந்தால் அவர்களை தடுக்க காவலுக்கு நின்ற 70 வீரர்களுக்குள்ளே சலசலப்பு.

    ‘போர்முடிந்து விட்டது, எதிரிகள் போர்க்களத்தில் விட்டுச்சென்ற பொருளை சேகரிப்போம்’ என்று ஒருபிரிவினர் கூறினார்கள்.

    ‘இல்லையில்லை, நபிகள் நாதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை நாம் இந்த இடத்தை விட்டு அசையக்கூடாது’ என்று இன்னொரு பிரிவினர் கூறினார்கள்.

    ஆனால் ஒரு பிரிவினர் நபிகளின் உத்தரவை மதிக்காமல் காவல் பணியில் இருந்து அகன்றனர். அப்போது எதிரிப் படையினர் மீண்டும் வந்து போர் வீரர்களை பின்புறத்தில் இருந்து தாக்கினர். வெற்றியின் பாதை மாற்றப்பட்டு விட்டது. விளைவு, அண்ணலார் அதிகளவில் பாதிக்கப்பட்டார்கள். அருமை சஹாபா ஹம்ஸா (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

    ஒருசின்ன கருத்து வேற்றுமையால் எத்தனைப் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியது இருந்தது. இந்த வரலாற்றை அறிந்தும் நம்மவர்கள் இன்னும் ஏன் தர்க்கிக்கின்றார்கள். ஒற்றுமை வழிசெல்ல தாமதிக்கின்றார்கள்.

    காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் சிறந்த தளபதி. பல போர்களில் தளபதியாக இருந்து பல நாடுகளை வென்றெடுத்தவர். அவர் போருக்குச் சென்றால் வெற்றிக்கனியை நிச்சயமாக பறித்து வருவார் என்ற எண்ணம் வீரர்கள் மத்தியில் பிரபலமானது.

    அந்த எண்ணம் அல்லாஹ்வை மறந்து காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் மீது நம்பிக்கையை அதிகரித்து விடும் ஆபத்தை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள், ஒரு கடுமையான போரின் மத்தியில் தளபதிக்கு ஓலை அனுப்புகிறார்கள்.

    “இந்த ஆணை உங்கள் கையில் கிடைக்கும் போது உங்கள் தளபதி பொறுப்பை அபூ உபைதா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் படையில் ஒரு சிப்பாயாக நீங்கள் போரில் கலந்து கொள்ளவேண்டும்”.

    வீரர்களின் நம்பிக்கை, படைத்தவனிடமிருந்து படைப்பினங்கள் மீது சென்று விடலாகாது. வெற்றியைத்தருவது அல்லாஹ் மட்டுமே என்ற நம்பிக்கை தான் அவர்களிடம் மேலோங்க வேண்டும். போரில் தோல்வி கிடைக்கலாம்; தவறில்லை. ஆனால் நம்பிக்கையில் சோரம் போகலாகாது என்பதை வலியுறுத்தவே அந்த ஆணையை அனுப்பினார் உமர் (ரலி) அவர்கள்.

    சிப்பாய்கள் இரு பிரிவினராக சிதறத் தொடங்கினர். சிலர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை அணுகி, “எப்படிப்பட்ட வீரர் நீங்கள்? அபூ உபைதாவின் கீழ் சிப்பாயாக செயலாற்றுவதா? வேண்டாம். நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். கலீஃபாவின் ஆணையை புறக்கணியுங்கள். நாம் போரில் வெற்றி பெற்றால் கலீஃபா மனசாந்தி பெறுவார்” என்றார்கள்.

    காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், “இது கலீஃபாவின்ஆணை. இதற்கு காரணம் இல்லாமல் இருக்க முடியாது. என்னிடம் தர்க்கித்து படையை பிளவுபடுத்த வேண்டாம். நாம் பலவீனப்பட்டு விடுவோம். நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன். அபூ உபைதா (ரலி) அவர்களே இனிமேல் நம்படையின் தளபதி”என்று மிக தீர்க்கமாக சொன்னார்கள்.

    போர் தொடர்ந்தது. காலித் பின் காலித் (ரலி) அவர்கள் தளபதியாக இல்லாமல் சாதாரண சிப்பாய் போல போரில் கலந்து கொண்டார். அன்றைய தினம் படைவீரர்கள் பிளவுபடாமல் ஒன்றிணைந்ததால் வெற்றிக்கனியை மிக எளிதாக பெற்றார்கள்.

    ‘நான் தான் பெரியவன்’ என்று கலீஃபாவின் கட்டளையை அவர் மறுத்திருந்தால், இன்று வரலாறு தோல்வியை பதிவு செய்துஇருக்கும். வரலாற்றில் கறை படிந்திருக்கும். அல்லாஹ்வும் சொல்கிறான்:“நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக்கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும். ஆகவே, நீங்கள் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.” (திருக்குர்ஆன் 8:46)

    ஆனால் இன்று உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. ஒற்றுமை இன்மையால், மக்கள் தொகையில் அதிகம் இருந்தும் சிதறி சின்னாபின்னமாகி இழப்புகளை சந்தித்து பலவீனப்பட்டுள்ளோம்.

    சிங்கத்தை விரட்டிய மாட்டு மந்தையைப் போல், வலையில் பிடிபட்டும் ஒன்றாய் பறந்து வேடனை ஏமாற்றிய புறாக் கூட்டத்தைப் போல நாம் ஒன்று பட்டால் மட்டுமே உயர முடியும். காலத்தின் கட்டாயம் இது.

    அல்லாஹ் நமக்கு அருள்புரிய ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம். ஆமின்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    Next Story
    ×