search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    புறம் தவிர்த்து அறம் வளர்ப்போம்

    “நம்பிக்கையாளர்களே! நீங்கள் பிறர் குறைகளைத் துருவி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம். இன்னும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம்”. (திருக்குர்ஆன் 49:12)
    “நம்பிக்கையாளர்களே! நீங்கள் பிறர் குறைகளைத் துருவி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம். இன்னும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம்”. (திருக்குர்ஆன் 49:12)

    இந்த இறைவசனம் இறைவனை ஏற்றுக்கொண்ட ஓர் நல்லடியான் இவ்வுலகில் மற்ற சகோதரர்களோடு எப்படி வாழவேண்டும் என்பதற்கு சரியான வழிகாட்டுதலையும், அதன் அளவுகோலையும் மிகத் தெளிவாக கூறுகிறது.

    ஆதிபிதா ஆதம் அவர்களின் தவறால் தோன்றியது தான் இப்புவியுலகம். அதனால் மனிதன் தவறு செய்யும் இயல்புடையவன் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. குற்றமற்ற ஒருவனை உலகில் காண்பது அரிதிலும் அரிது. ஏனென்றால் வெளித்தோற்றத்திற்குப் புலப்படாத எத்தனையோ விஷயங்களை, அல்லாஹ் மட்டுமே அறிந்தவனாக இருக்கின்றான்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவன் நம்மோடு பழகும் மேலோட்டான நிலைமையை ஏற்றுக்கொண்டு, அவனிடம் உள்ள நல்ல பண்புகளுக்காக அவனை மதிக்கத் தெரிந்தவனே உண்மையான நண்பன். அதை விடுத்து, அவன் குணநலன்களில் உள்ள நிறைகுறைகளை எடை போட்டு பார்த்து குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிருப்பது ஒரு ஆரோக்கியமான சமுதாய கட்டுக்கோப்பை ஏற்படுத்தி தராது. மாறாக சிதலம் பட்ட ஓர் வாழ்க்கைச் சூழலைத் தான் ஏற்படுத்தும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் நயவஞ்சகத்தனத்திற்கு அது ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். அதற்கு சைத்தானின் அனுக்கிரகமும் கிடைக்கும்.

    அதனால் தான் பிறரிடம் இருப்பதைவிட மிக அதிகமாக தன்னிடம் உள்ள குறைகளை சுயபரிசோதனை செய்து அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டுமேயன்றி, பிறரின் குறைகள் பற்றி கணக்கெடுப்பதற்கு நமக்கு எந்த தார்மீக பொறுப்பும் கிடையாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    எங்கெல்லாம் நல்லவைகள் தென்படுகிறதோ அதனில் இருந்து தேவையானவற்றை எடுத்துக்கொள், தீயவை எதிர்வந்தால் அதனைத் தவிர்ந்துவிடு, இரண்டிலும் உள்ள சிறந்ததை பாடமாக கற்றுக்கொள் என்பது தான் திருக்குர்ஆனின் சித்தாந்தம்.

    நம்மில் பலர், ‘பிறரிடமுள்ள குறைகளை பிறரிடம் சுட்டிக்காட்டுவது புறம் ஆகாது. ஏனென்றால் அவனிடம் உள்ள குறையைத் தானே சொல்கிறேன்’ என்ற கருத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் உள்ளதைச் சொல்வது தான் புறம், அவனிடம் இல்லாததைச் சொல்வது இட்டுக்கட்டுதல், அவதூறு செய்தல் என்ற அடைமொழிக்குள் வரும், அபாண்டம், பழிசுமத்துதல் என்ற வரையறைக்குள்ளும் அது பொருந்தும்.

    எனவே தான் புறம் பேசுதலை குற்றமாக சித்தரிக்கும் திருக்குர்ஆன்; இட்டுக்கட்டுதல், பழிசுமத்துதல் என்பதை மன்னிக்க முடியாத பாவமாக எடுத்துரைக்கிறது. பாவத்திற்கு அஞ்சி நம் வாழ்வை சரிசெய்து கொள்வோம், புறம் தவிர்த்து அறம் வளர்ப்போம்.

    -மு.முகமது யூசுப், உடன்குடி
    Next Story
    ×