search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    சோதனைக் களத்தில் நாம்...

    இன்றைய உலகில் ஒவ்வொருவரும்; எப்படியேனும் பொருளீட்ட வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும், நாளைய வாழ்வை சிறந்த முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும்,
    இன்றைய உலகில் ஒவ்வொருவரும்; எப்படியேனும் பொருளீட்ட வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும், நாளைய வாழ்வை சிறந்த முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும், நன்றாகச் செலவு செய்ய வேண்டும் என்று உலக வாழ்க்கையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

    பொருளீட்டும் இந்தப் போராட்டத்தில் மறுமை வாழ்வை மறந்து வாழ்கின்றனர். எதற்காக இவ்வுலக வாழ்வு என அறியாமல் செயல்படுகிறார்கள்.

    உலகமே கதி என்று வாழ்ந்த பல சமூகங்களை இறைவன் அழித்துள்ளான். காரணம் உலக மோகத்தில் திளைத்து, மறுமையை மறந்து, குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டமைதான். நாம் எவ்வாறு செயல்படுகின்றோம் என்பதைச் சோதிப்பதற்காகவே நம்மை இறைவன் இந்த உலகத்தில் படைத்துள்ளான்.

    இறைவன் கூறுகிறான்: “பின்னர், அவர்களுக்குப் பிறகு பூமியில் அவர்களுடைய இடத்தில் இப்பொழுது உங்களை அமர்த்தினோம்; நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக”. (திருக்குர்ஆன் 10:14)

    உலகில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டும், இறந்து கொண்டும் இருக்கின்ற இந்த தொடர் நிகழ்ச்சி இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கான காரணம், அவர்களை சோதித்து யாருடைய செயல் இவ்வுலக வாழ்விற்கும், மறுமை வாழ்விற்கும் உகந்ததாக உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்குத்தான்.

    ஆகவே இவ்வுலகில் மனிதன் உடலாலும் பொருளாலும் தொழிலாலும் பலவகையாக சோதிக்கப்படுகிறான். அதில் பொறுமையை மேற்கொண்டு வெற்றி பெறுவோருக்கு நற்செய்தி கூறுவீராக என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:

    “மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக”. (திருக்குர்ஆன் 2:155)

    சோதனைக்கு ஆளாகாத மனிதர் எவரும் கிடையாது. ஏதோ ஒரு வகையில் மனிதன் சோதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றான். நல்லவனாக இருந்தாலும் சோதிக்கப்படுவான், தீயவனாக இருந்தாலும் சோதிக்கப்படுவான். இது இறைவனின் நியதி. இந்த நியதியை எவராலும் மாற்ற முடியாது.

    வெற்றி பெற்ற மாமனிதர்

    சோதனைகளை வென்று அவற்றை பொறுமையுடன் சகித்துக்கொண்டவர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கின்றார்கள். மட்டுமல்ல, அவர்கள் அடுத்தவர்களுக்குப் பாடமாகவும் திகழ்கின்றார்கள். ஆயினும் சோதனைகளை தாங்கிக்கொள்ளாமல் அவசர கதியில் வாழ்வை முடித்துக்கொள்பவர்கள் மோசமான முன்னுதாரணமாக விளங்குகின்றார்கள்.

    இவ்வுலகில் பல்வேறு சந்தர்பங்களிலும் சூழ்நிலைகளிலும் சோதிக்கப்பட்ட நபர்தான் இறைத்தூதர் இப்ராகிம் (அலை) அவர்கள்.

    தூதுத்துவத்தின் ஆரம்பத்தில் இப்ராகிம் (அலை) அவர்கள் தன் தந்தையை நேர்வழியின் பக்கம் அழைத்தபோது அவரது தந்தை, “உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்” என்று பயமுறுத்தினார். பெற்றெடுத்த மகனை வீட்டை விட்டு வெளியேற்றினார். இதனால் அவர் சொந்த நாட்டையும் சொத்து சுகங்களையும் துறந்து வேறு நாடு சென்றார்.

    இங்கு சொந்த பந்தங்கள் மூலமாகவும், சொந்த வீடு மற்றும் செல்வத்தின் மூலமாகவும் இப்ராகிம் (அலை) அவர்களை இறைவன் சோதித்தான். அதில் அவர் வெற்றி பெறுகின்றார்.

    பின்னர் நம்ரூத் என்ற அரசன் மூலம் இப்ராகிம் (அலை) நெருப்பில் எறியப்படுகின்றார். இங்கு கொள்கை மூலம் இறைவன் அவர்களை சோதித்தான்.

    முதுமையான வயதில் குழந்தை பிறக்கும் என்ற நற்செய்தியை இப்ராகிம் (அலை) அவர்களுக்கு கூறி அதன் மூலம் அவர்களுடைய பொறுமையை இறைவன் சோதிக்கின்றான்.

    அடுத்து, அல்லாஹ்வின் கட்டளைப்படி இப்ராகிம் (அலை) தன்னுடைய மகனை அறுத்து பலியிட முன்வருகின்றார். இங்கு பெற்றெடுத்த மகனையே தியாகம் செய்வதன் மூலம் இறைவனால் சோதிக்கப்படுகின்றார்.

    அல்லாஹ்வின் அனைத்து சோதனைகளிலும் இப்ராகிம் (அலை) அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “மேலும், இப்ராகீமை அவருடைய அதிபதி சில விஷயங்கள் மூலம் சோதித்ததை நினைவுகூருங்கள். இன்னும் அவர், அவற்றில் எல்லாம் முழுமையாகத் தேர்ந்துவிட்டார்”. (திருக்குர்ஆன் 2:124)

    இறைவனின் சோதனைகளில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றதன் காரணமாக இப்ராகிம் (அலை) அவர்களுக்கு நற்செய்தி கூறியதைப் போன்று அவருடைய வழித்தோன்றல்களான நமக்கும் அல்லாஹ் நற்செய்தி கூறுகிறான். ஆயினும் நமக்கான சோதனைகளில் நாம் வெற்றி பெறும்போதுதான் அந்த நற்செய்திக்கு முழுமையாகத் தகுதிபெற்றவர்களாக நாம் மாறமுடியும்.

    “இப்ராகிமின் வழித்தோன்றல்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் கொடுத்து மாபெரும் அரசாட்சியையும் வழங்கியிருக்கிறோமே”. (திருக்குர்ஆன் 4:54)

    தோல்வியடைந்த அலட்சிய கூட்டம்

    இவ்வுலகில் இறைவனால் பல்வேறு அருட்கொடைகளாலும் சிறப்புகளாலும் சோதிக்கப்பட்ட சமூகம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எனும் பனீஇஸ்ரவேலர்கள்.

    இவர்கள் படைக்கப்பட்ட நோக்கத்தை குறித்து கூறும்போது; ‘இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை சோதிக்க அல்லாஹ் அவர்களை தன் பிரதிநிதிகளாக நியமித்தான்’ என்று திருக்குர்ஆன் (7:129) குறிப்பிடுகிறது.

    “உங்கள் இறைவன் உங்களுடைய பகைவனை அழித்துவிட்டு, இப்பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக்கி நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதைப் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது”.

    அதிக அளவில் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்ட சமூகம் என்ற சிறப்புத் தகுதியை வழங்கி பனீ இஸ்ரவேலர்களை அல்லாஹ் சோதித்தான். ஆனால் அவர்கள் ஜகரிய்யா (அலை), யஹ்யா (அலை) போன்ற அனேக இறைத்தூதர்களை அநியாயமாகக் கொன்றார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்களிடையே காலையில் ஓர் இறைத்தூதர் தோன்றுவார். அவரைக் கொலை செய்வார்கள். மாலையில் வேறொரு இறைத்தூதர் தோன்றுவார். அவரையும் கொலை செய்வார்கள்.

    பிர்அவ்னிடமிருந்து பனீ இஸ்ரவேலர்களுக்கு விடுதலை கொடுத்து அவர்கள் கண் முன்னே கடலைப் பிளந்து பிர்அவ்னையும் அவன் கூட்டத்தையும் அந்தக் கடலில் மூழ்கச் செய்து சோதித்தான்.

    பின்னர், மன்னு சல்வா எனும் சொர்க்கத்து உணவை பனீ இஸ்ரவேலர்களுக்கு இறைவன் உண்ணக் கொடுத்தான். ஆயினும் இதனை சேமிக்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்தான். ஆனால் அவர்கள் அதில் வரம்பு மீறினார்கள்.

    எகிப்தில் இருந்து வெளியேறிய பிறகு தங்களுக்கென குடித்தனம் இல்லாத நிலையில், போர் புரிந்து பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுங்கள் என்ற கட்டளை மூலம் மீண்டும் சோதித்தான்.

    ஆனால் அவர்களோ இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களிடம், “வேண்டுமாயின், நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்” (திருக்குர்ஆன் 5:24) என்று கூறி இறைவனின் கட்டளையை அலட்சியப்படுத்தினார்கள்.

    இறைச்சோதனைகளுக்கு ஆளான இஸ்ரவேலர்களின் இறுதி நிலையும் அவர்களின் மீது இடப்பட்ட சாபத்தையும் குறித்து பல இடங்களில் திருக்குர்ஆன் விவரிக்கின்றது. இவை அனைத்துமே நமக்கான பாடமும் படிப்பினையும்தான்.

    இவ்வுலகம் ஒரு விளைநிலம்

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்கு சோதனை செல்வம் ஆகும்”. (நூல்: திர்மிதி)

    இவ்வுலகில் தோன்றிய அனைத்து சமூகங்களும் பல்வேறு விதங்களில் சோதிக்கப்பட்டார்கள். அதேபோன்று நபி (ஸல்) அவர்களின் சமூகமான நாமும் சோதிக்கப்படுகின்றோம்.

    இந்த நிரந்தரமற்ற உலகில் நாளைய வாழ்வாதாரங்களை தேடும் விதத்தில் செல்வங்களின் பின்னால் விரைந்து கொண்டிருக்கிறோம். ஆகவேதான் இவ்வுலக மோகங்கள் அனைத்தும் இம்மை வாழ்வில் மட்டும் பயன்பட்டு நிரந்தரமான மறுமை வாழ்வில் கேள்விக்குறியாகி விடுகிறது.

    இவ்வுலகம் நிரந்தரம் என இஸ்ரவேலர்கள் போல் எண்ணி செயல்படாமல் இவ்வுலகம் ஒரு சோதனைக் களம்; அதில் நாம் சோதிக்கப்படுகின்றோம் என எண்ணி இறைத்தூதர் இப்ராகிம் (அலை) அவர்களைப் போல் இறைவனின் சோதனைகளை வெல்ல வேண்டும்.

    இவ்வுலகம் மறுமைக்கான ஒரு விளைநிலமே. இதில் நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் மறுமையில் அறுவடை செய்வோம். எனவே சோதனைகளின்போது பொறுமை காத்து நல்லவற்றை விதைத்து மறுமையில் நல்லவற்றையே அறுவடை செய்வோம்.

    அப்துல் முக்ஷித், திருச்சி.
    Next Story
    ×