என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உஹதுப் போரில் மாவீரர் ஹம்ஸா(ரலி) அவர்களின் இழப்பு
    X

    உஹதுப் போரில் மாவீரர் ஹம்ஸா(ரலி) அவர்களின் இழப்பு

    நபிகளாரால் சிங்கம் என்று போற்றப்பட்ட மாவீரர் ஹம்ஸா (ரலி) கொலை செய்யப்பட்டதால் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது இருப்பினும் முஸ்லிம்கள் நிலைமையைத் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர்.
    உஹுத் போரின் தீ இரு தரப்பிலும் கடுமையாக மூண்டு போர்க்களத்தின் பல பகுதிகளிலும் போர் வெடித்தது.

    முன்னர், நபி(ஸல்) இராணுவ திட்டத்தைச் செயல்படுத்த சொல்லிவிட்டு ஒரு கூர்மையான வாளை எடுத்து, தம் தோழர்களிடம் “இதற்குரிய கடமையை நிறைவேற்றுபவர் யார்?” என்று கேட்டபோது, அதனைப் பெற பலர் முன் வந்தாலும் அபூ துஜானா(ரலி) அவர்களுக்கு அது தரப்பட்டது. அதனை எடுத்துக் கொண்டு அவர்கள் எதிரிப் படையை நோக்கி முன்னேறினார்கள். தனக்கு எதிரே வந்த ஒவ்வொரு எதிரியுடனும் வாள் சண்டையிட்டு வீழ்த்தினார்கள்.

    காயம்பட்ட முஸ்லிம்களைக் குறிப்பார்த்து, எதிரிப் படையைச் சேர்ந்த ஒருவன் தாக்கிக் கொண்டிருந்தான். அபூ துஜானா(ரலி) அவனை நேருக்கு நேர் சந்தித்து இருவரும் கடுமையான வாள் சண்டையிட்டு, எதிரி அபூ துஜானாவை வீழ்த்த வாளை உயர்த்தும்போது அதனை அபூ துஜானா தனது கேடயத்தால் தடுக்க, அவனுடைய வாள் கேடயத்துக்குள் சிக்கியது. அந்தக் கணப்பொழுதில் அபூ துஜானா(ரலி) அவனை வெட்டி மாய்த்தார். அங்கிருந்து முன்னேறி எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தபோது எதிரிப் படையில் ஒருவர் மக்களுக்குப் போர் ஆர்வத்தைத் தூண்டியபடி சண்டையிட்டு கொண்டிருந்ததைக் கவனித்தவராக அவர் மீது தன் வாளை வீச எண்ணி அவரைத் திருப்பிய போது அது ஒரு பெண் என்பதைக் கண்டு ஒரு பெண்ணை நபியவர்களின் வாளில் வீழ்த்த வேண்டாமென்று விட்டுவிட்டார்கள். அவர் விட்டு வைத்த அந்தப் பெண் அபூ ஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா. பத்ருப் போரில் ஹிந்த் தனது தந்தை உத்பாவையும், மகன் ஹன்ளலா இப்னு அபூ ஸுஃப்யானையும் இழந்திருந்ததால் வீரியத்துடன் போர் புரிந்து கொண்டிருந்தார்.

    எதிரிகளின் கொடியைச் சுமந்திருந்த தல்ஹா இப்னு அபூதல்ஹா குடும்பத்தில் அக்கொடியை காப்பதற்கே குடும்பத்திலுள்ள அனைவரும் உயிர் இழக்க நேரிட்டது. எதிரிகளின் கொடி பூமியில் சாய்ந்து, அதைச் சுமப்பதற்கு யாரும் இல்லாமல் இறுதி வரை அது மண்ணிலேயே கிடந்தது.

    ஹம்ஸா(ரலி), ஸஅது இப்னு அபூ வக்காஸ்(ரலி), அலீ(ரலி), ஆஸிம் இப்னு ஸாமிதி(ரலி),  ஜுபைர் இப்னு அவ்வாம்(ரலி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) மற்றும் பலர் முஸ்லிம்களின் அணியில் பெரும் பங்காற்றி இணைவைப்பவர்களை யோசிக்க வைத்தனர். இவர்களைக் கண்டாலே எதிரிகள் ஓடத் தொடங்கினர்.  நபிகளாரின் சிறிய தந்தையான ஹம்ஸா(ரலி) அவர்களை நேருக்கு நேர் கொல்ல முடியாதென்று ஜுபைர் இப்னு முத்யிம் என்பவர் ஈட்டி எறிவதில் திறமை வாய்ந்த தனது அடிமை வஹ்ஷீயிடம் ‘நீ ஹம்ஸாவை கொன்றால் நீ அடிமைத்தளையிலிருந்து விடுதலையாவாய்’ என்று கூறி அவரை அனுப்பி வைத்திருந்தார். காரணம் பத்ருப் போரில் ஜுபைருடைய தந்தையின் சகோதரர் கொல்லப்பட்டிருந்தார். அதனால் வஹ்ஷீ தருணம் பார்த்து ஒளிந்திருந்து தூரத்திலிருந்து ஈட்டியை எறிந்தான். அது ஹம்ஸா(ரலி) அவர்களைக் கிழித்துக் கொண்டு அதுவே அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. ஒளிந்திருந்த வஹ்ஷீ ஓடிவந்து ஹம்ஸா(ரலி) இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்டு தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். தனது விடுதலைக்காக அந்தக் கொலையைச் செய்துவிட்டு வேறு யாரையும் கொல்ல வேண்டுமென்ற அவசியமும் எண்ணமும் இல்லாததால் மக்காவிற்குத் திரும்பிவிட்டான்.

    நபிகளாரால் சிங்கம் என்று போற்றப்பட்ட மாவீரர் ஹம்ஸா (ரலி) கொலை செய்யப்பட்டதால் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது இருப்பினும் முஸ்லிம்கள் நிலைமையைத் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர்.

    இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம், ஸஹீஹ் புகாரி 4:64:4072

    -ஜெஸிலா பானு, துபாய்
     
    Next Story
    ×