என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுலைமான்(அலை) அவர்கள் வழங்கிய தீர்ப்பு
    X

    சுலைமான்(அலை) அவர்கள் வழங்கிய தீர்ப்பு

    திருக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு வசனத்தின் மூலமும் அல்லாஹ் நம்மை சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்
    திருக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு வசனத்தின் மூலமும் அல்லாஹ் நம்மை சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான், ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த இறைத்தூதர்களைப் பற்றியான விளக்கங்களும் சம்பவங்களையும் நாம் அந்தக் காலத்தில் உள்ளவர்களுக்கும் சரி, அதற்குப் பின் வந்தவர்களுக்கும், இனி வரக்கூடியவர்களுக்கும் கிடைத்த படிப்பினையாகவும், பயபக்தியுடையவர்களுக்கு நல் உபதேசமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனைத் திருக்குர்ஆனிலும் வலியுறுத்தியுள்ளான் இறைவன்.

    தாவூத் (அலை) அவர்கள் ஆட்சியாளராக இருந்தபோது, இரு பெண்கள் அவர்களிடம் ஒரு வழக்கிற்கான தீர்வு காண வந்திருந்தனர். அவ்விருவரில் ஒருவரின் மகனை ஓநாய் கொண்டு சென்றுவிட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம் “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது” என்று கூற, மற்றொருத்தியோ “இல்லை, உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது” என்று வாதிட்டார்.

    தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள, தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரின் வாதத்தையும் விசாரித்தார்கள் தாவூத் (அலை). அவ்விரு பெண்களில் மூத்தவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். இருப்பினும் அவர்களின் வாக்குவாதம் தீர்ந்தபாடில்லை. தீர்ப்பின் மீது கருத்து வேறுபட்ட அப்பெண்கள் இருவரும் தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களின் தீர்ப்பு வழங்கும் முறையை அறிந்து அவர்களிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர்.

    சுலைமான் (அலை) அவர்களிடம் இருவரும் வழக்கு பற்றிய விவரத்தைக் கூறினர். சிறிது யோசனைக்குப் பிறகு சுலைமான் (அலை) “என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப் பிளந்து பங்கிட்டுவிடுகிறேன்” என்று கூறினார்கள். உடனே பதறிய இளையவள், “அவ்வாறு செய்துவிடாதீர்கள், அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். இவன் என் மகன். ஆனால் அவன் உயிரோடு அவளிடமே இருந்துவிட்டுப் போகட்டும்” என்று அழுகையோடு கூறினார்.

    இதிலிருந்து மிகச் சாமர்த்தியமாக உண்மையான தாயின் கண்ணீரைப் புரிந்து கொண்ட சுலைமான் (அலை) “அந்தக் குழந்தை இளையவளுக்கே உரியது” என்று தீர்ப்பளித்தார்கள். குழந்தை மீதான பாசத்தால் மற்றவள் தாம் செய்த தவறை உணர்ந்தவளாகத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அமைதியாகவும் இருவரும் ஒற்றுமையாகவும் திரும்பிச் சென்றார்கள்.

    ஸஹிஹ் புகாரி 4:60:3427, 7:86:6769, திருக்குர்ஆன் 2:66, 2:221

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×