search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் வேதம்
    X

    மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் வேதம்

    நம் வசனங்களையும், அத்தாட்சிகளையும், மறுமையின் நம் சந்திப்பையும் பொய்யெனக் கூறுகின்றவர்களின் எல்லா நல்ல காரியங்களும் அழிந்துவிடும்.
    மூஸா (அலை) தூர் மலையில் தங்கி நாற்பது நாட்கள் நோன்பிருந்து, அல்லாஹ்வை மனம் உருகி வணங்கிக் கொண்டிருந்தார்கள். உள்ளத்தூய்மையுடனும் இறைநம்பிக்கையுடனும் மனம் முழுவதும் இறைவனை மட்டும் நினைத்து அல்லாஹ்விடம் வேண்டினார்கள், “யா அல்லாஹ்! நான் உன்னைப் பார்க்க வேண்டும். உன்னைக் கேட்க முடிந்த என்னால் உன்னைப் பார்க்க முடியவில்லையே, உன்னைக் காண்பிப்பாயாக!” என்று மிகவும் கெஞ்சினார்கள்.

    அதற்கு அல்லாஹ், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது. சாதாரண மனிதரின் கண்களுக்கு நான் அப்பாற்பட்டவன். உனக்கு என்னைப் பார்க்கும் சக்தி இல்லை. எனினும் நீர் அந்த மலையைப் பார்த்துக் கொண்டிருங்கள். அந்த மலையின் மீது என் ஒளியினை படச் செய்கிறேன். அதை உங்களால் பார்க்க முடிந்தால் என்னை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று கூறினான். அப்படியே அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அம்மலை நொறுங்கித் தூளாகிவிட்டது. மூஸா (அலை) அவர்களும் மூர்ச்சையாகி மயக்கம்போட்டுக் கீழே விழுந்துவிட்டார்கள்.

    சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் தெளிவடைந்து, அல்லாஹ் அருளிய பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளைக் கையில் எடுத்து, “அல்லாஹ்வே!! நீ மிகவும் பரிசுத்தமானவன். நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன். உன் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்கள்.

    அதற்கு இறைவன், “மூஸாவே! எனது தூது செய்திகள் மூலமும், நான் நேரடியாக உம்முடன் பேசியதின் மூலமும் மனிதர்களிலேயே உங்களை மேலானவராகத் தேர்ந்தெடுத்துவிட்டேன். ஆகவே, நான் உங்களுக்குக் கொடுத்த இந்த வேதக் கட்டளைகளை உறுதியாகப் பிடித்துக் கொண்டு எனக்கு நன்றி செலுத்துபவர்களில் ஒருவராக இருப்பீராக. உங்களுடைய சமூகத்தாரையும் இக்கட்டளைக்கு அடிபணியச் சொல்வீராக.

    ஆனால் பூமியில் பெருமையடித்து நடப்பவர்கள் என் கட்டளைகளை ஏற்கமாட்டார்கள். அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்டாலும் எதையும் நம்ப மாட்டார்கள். நேர் வழியைத் தங்களுக்குரிய வழியாக ஆக்கிக் கொள்ள மாட்டார்கள். மாறாகத் தவறான வழியை நேர்வழியென நம்புவார்கள். நம் வசனங்களையும், அத்தாட்சிகளையும், மறுமையின் நம் சந்திப்பையும் பொய்யெனக் கூறுகின்றவர்களின் எல்லா நல்ல காரியங்களும் அழிந்துவிடும். அவர்களின் நற்காரியங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது” என்று கூறினான்.

    மூஸா (அலை) இறைவன் அருளிய தவ்ராத் வேதத்தை எடுத்துக் கொண்டு, தம் மக்களுக்கு இறைவனின் கட்டளைகள் பற்றிச் சொல்ல விரைந்தார்.

    திருக்குர்ஆன் 7:142-147

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×