என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாட்சிமை தரும் ரமலானே வருக
    X

    மாட்சிமை தரும் ரமலானே வருக

    அனைவரும் பசி உணர்வை அறிந்து அதன் அருமையால் நல்ல பலன்களை பெற்றிட ரமலான் நோன்பு உறுதுணை செய்கின்றது.
    பசியின் கொடுமையை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டும், அதன்மூலம் இருப்பவர் இல்லாதவருக்கு உதவ வழிகாட்டுகிறது ரமலான் நோன்பு. அனைவரும் பசி உணர்வை அறிந்து அதன் அருமையால் நல்ல பலன்களை பெற்றிட ரமலான் நோன்பு உறுதுணை செய்கின்றது.

    ‘நோன்பு’ இறைவனுக்காக என்ற தியாக உணர்வில் செயல்படுவதால், நோன்பு வைப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் சிரமங்கள் எதுவும் சிரமமாகவே தெரிவது இல்லை. சிரமத்தை தாங்கிக்கொள்ளும் பக்குவம் ஏற்படுகின்ற பொழுது சகிப்புத்தன்மையும் தானாகவே தோன்றி விடுகின்றது.

    சகிப்புத் தன்மையை அதிகரிக்கும்போது அது மனஉறுதியை ஏற்படுத்துகிறது. ‘மனோ இச்சைகளை தூண்டும் சைத்தான் நோன்பு காலங்களில் விலங்கிடப்படுகின்றான்’ என்று அண்ணல் நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

    அதிகமாக உண்பதும், குடிப்பதும் உடலையும், மனதையும் பாதிக்கிறது. அது சிற்றின்ப வேட்கையை அதிகப்படுத்தி மனதை கலங்கடிக்கச் செய்து விடும். இன்னும் தூக்கத்தை அதிகப்படுத்தி இறைதியானத்தையும், வணக்கத்தையும் விட்டும் நம்மை தூரமாக்கிட காரணமாகி விடும்.

    நோன்பு காலங்களில் பசியினால் அடையும் நன்மைகளை கவனத்தில் கொண்டு ரமலான் அல்லாத காலங்களிலும் அரை வயிற்று உணவுடன் வாழ பழக்கப்படுத்திக் கொள்ளும்போது அது மாபெரும் நன்மைகளை நமக்கு அடைய உதவுகிறது.

    அண்ணலார் கூறினார்கள், ‘நான் ஒரு நாள் பசித்திருக்க வேண்டும். மற்றொரு நாள் புசித்திருக்க வேண்டும். பட்டினியாக இருக்கும் போது நான் பொறுமையை கைக்கொள்வேன். உணவை சாப்பிட்ட அன்று திருப்தியுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தி மகிழ்வேன்’ என்றார்கள்.

    நபிகளாரின் இல்லத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் உணவு இல்லை என்ற நிலை காணப்படும். அவர்கள் எவ்வாறு சாப்பிடுவதை சுருக்கிக் கொண்டார்கள் என்பதை இதன்மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

    ‘நீங்கள் உணவை சுருக்குவது (குறைப்பதைக்) கொண்டு மனதை உயிருள்ளதாக ஆக்குங்கள். பசித்திருப்பதன் மூலம் மனதை பரிசுத்தப்படுத்துங்கள்’ என்று கூறிய நபிகளார், தனது வாழ்நாள் முழுவதும் இதனை கடைப்பிடித்தும், செயல்படுத்தியும் காட்டினார்கள்.

    ஒருமுறை அண்ணலாரின் அருமை மகள் பாத்திமா (ரலி) தனது இல்லத்தில் தயாரான ரொட்டிகளை கொண்டு வந்து தனது தந்தையான நபிகளாரிடம் தந்து விட்டு கூறினார்கள், ‘எனதருமை தந்தையே! தங்களுக்கு உண்ணத்தராமல் இந்த ரொட்டிகளை உண்பதற்கு எனக்கு மனம் வரவில்லை’ என்றார்கள்.

    அப்போது அண்ணலார் கூறினார்கள், ‘அருமை மகளே! மூன்று நாட்களுக்கு பின்னர் உன் தந்தையின் வாயினுள் செல்லவிருக்கும் உணவுகளில் (நீ தந்த) இந்த உணவே முதல் உணவாகும்’ என்றார்கள்.

    பசியின் உணர்வை எப்போதும் நபிகளார் புழக்கத்தில் வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்நிகழ்வு சான்று கூறுகின்றது.

    பசியின் நிமித்தமேயன்றி இறைவன் யாரிடமும் நட்பு பாராட்டுவதில்லை என்பதை தீர்க்கதரிசிகளின் வாழ்வும் ஞானியரின் வாழ்வும் நமக்கு தெளிவுபடுத்தும் உண்மையாகும்.

    40 நாட்கள் பசியுடன் நோன்பிருந்த பின்னரே மூஸா நபி (அலை) அவர்கள் தூர்சினா மலையில் இறைவனை தரிசிக்கவும், அவனோடு வசனிக்கவும், பாக்கியம் பெற்றார்கள்.

    பசியுடன் இருப்பதால் உடலுக்கும், மனதுக்கும் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றது. எனவே பசியின் பயனை எவர் உணர்ந்து கொண்டாரோ அவர் அதனை கடைப்பிடிப்பதில் எப்போதும் முனைப்புடன் செயல்படுவார் என்பது உறுதியாகும்.

    நோன்பில் பசியோடு இருக்கும்போது மனம் பக்குவப்பட்டு நமது கட்டுக்குள் வருகின்றது. சிந்தனையில் தூய்மை ஏற்பட்டு மனம் தெளிவு பெறுகின்றது. அறியும் திறன் அதிகமாகி, நினைவாற்றல் கூடுகின்றது.

    ஏழைகளின் பசியை நினைவுபடுத்திடும் ரமலான் நோன்பு, அவர்களுக்கு என்றும் உதவிடவும், ஏனைய நற்செயல்களை எப்பொழுது புரிந்திடவும் நம் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி தருகின்றது.

    ரமலான் மாதத்தில் ஒரு மாத காலம் தொடர்ந்து பகல் பொழுதில் உண்ணாமலும், பருகாமலும், இல்லற வாழ்வில் ஈடுபடாமலும், உடலையும் மனதையும் தகாத செயல்களில் ஈடுபடுத்தாமலும், பெருமை பேசாமலும், வீண் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமலும், முடிந்த மட்டும் மவுனமாக இருந்து இறை தியானத்தில் ஈடுபட ரமலான் நோன்பு சிறந்ததொரு பயிற்சிக்களமாக அமைந்து விடுகிறது.

    அந்த ரமலான் மாதத்தில் கிடைக்கும் நல்ல அனுபவங்களை மனதில் கொண்டு, அதனை ஆண்டு முழுவதும் செயல்படுத்திட உறுதி கொண்டிட வேண்டும். அதுவே ரமலான் நோன்பை நாம் கண்ணியப்படுத்துவதாக இருக்கும். அத்தகைய ரமலானை இதயப்பூர்வமாக வரவேற்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

    இறையச்சம் என்ற தக்வாவை பரிசாக தருகின்ற ரமலானே வருக!  
    இறைநெருக்கம் என்ற மாட்சிமையை நல்கிடும் ரமலானே வருக!
    இறைவனின் மகத்துவத்தை நமது மனதில் நன்றாக பதியச் செய்யும் ரமலானே வருக!

    இத்தகைய சங்கை மிகு ரமலானை தொடர்ந்து கடைப்பிடித்து இவ்வுலகிலும் மறுவுலகிலும் இறையருளைப் பெற்று நாம் அனைவரும் வாழ்வாங்கு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிவானாக! ஆமீன்.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.
    Next Story
    ×