search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மூஸா (அலை) அவர்களின் பத்தாண்டு காலம்
    X

    மூஸா (அலை) அவர்களின் பத்தாண்டு காலம்

    இறைவனின் அத்தாட்சிகளைக் கண்ணுற்று, இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள் மூஸா (அலை).
    ஷுஐப் (அலை) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூஸா (அலை) மத்யன் நகரத்திலேயே தங்கினார்கள். ஷுஐப் (அலை) அவர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார்கள்.

    ஷுஐப் (அலை) அவர்களின் ஆடுகளை மேய்த்ததோடு, வீட்டில் தங்களால் முடிந்த எல்லா வேலைகளையும் செய்தார்கள் மூஸா (அலை).

    ஷுஐப் (அலை) அவர்கள் தன் வாக்குறுதியின்படி தமது இரண்டாவது மகளை மூஸா (அலை) அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்கள். மூஸா (அலை) வேலையாள் போல் இல்லாமல் ஒரு மகனைப் போல் மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார்கள்.

    மூஸா (அலை) தமது குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்ந்த அந்தப் பத்து ஆண்டு காலம் அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அந்தக் காலம் அவர் ஓர் இறைத்தூதராவதற்கான தயாரிப்புக் காலமாக அமைந்தது. சூரியன் உதிப்பதிலிருந்து சூரியன் மறைவது, நிலா நட்சத்திரங்களைக் கவனிப்பது, செடி, கொடிகள் வளர்வதை உற்று நோக்குவது என்று இறைவனின் எல்லாப் படைப்புகளைப் பற்றியும் ஆராய்வதும் சிந்திப்பதுமாக இருந்தார்கள். பூமியைப் பிளந்து கொண்டு துளிர்விடும் சின்னச் செடியையும், மடிந்த செடிகள் மீண்டும் விதையிலிருந்து உயிர்ப்புடன் எழுவதையெல்லாம் பார்த்து, அதில் இறைவனின் அத்தாட்சிகளைக் கண்ணுற்று, இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள் மூஸா (அலை).

    இறைவனின் மகத்துவத்தைப் பற்றி இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் பேசுவார்கள். இருவரும் சேர்ந்தே இறைவனைத் துதிப்பார்கள்.

    பத்தாவது ஆண்டின் முடிவில் மூஸா (அலை) அவர்களுக்குத் தமது குடும்பத்தினரிடம் திரும்ப வேண்டுமென்ற தமது விருப்பத்தை ஷுஐப் (அலை) அவர்களிடம் சொன்னார்கள். ஷுஐப் (அலை) சில ஆடுகள், கொஞ்சம் உணவு என்று பயணத்திற்குத் தேவையானவற்றைத் தயார் செய்து தந்தார்கள்.

    கர்ப்பிணியான தம் மனைவியை அழைத்துக் கொண்டு எகிப்திற்குப் புறப்பட்டார்கள் மூஸா (அலை).

    “இறைவன் பாதுகாப்பானாக” என்று அவர்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள் ஷுஐப் (அலை).

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×