search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    புத்திர பாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர்
    X

    நீடாமங்கலம் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர்.

    புத்திர பாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர்

    • திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சந்தானராமர் கோவில்.
    • சந்தானராமரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் அடையலாம் என்பது ஐதீகம்.

    குழந்தை இல்லா தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அருளும் வைணவ கோவில்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நீங்கா புகழுடன் விளங்குவது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சந்தானராமர் கோவில்.

    மழலை செல்வம் இன்றி தவிப்பர்கள் கட்டாயம் வந்து செல்ல வேண்டிய முக்கிய தலமாக கருதப்படும் நீடாமங்கலம் சந்தானராமரை மனமுருகி வேண்டினால் நிச்சயம் மழலை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    நீடாமங்கலம் நகரில் மையப்பகுதியில் உள்ள இந்த கோவில் இறைவன், மன்னர் தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் அருளினார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் பாடல் பெற்ற இக்கோவிலின் எதிரில் தெப்பக்குளம் ஒன்றும் உள்ளது.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கும் சிறப்பு வாய்ந்த திவ்யமூர்த்தி எழுந்தருளிய இந்த கோவில் பெருமையை மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை-பூவினுள் பதுமம் போலும், புருடருள் திருமால் போலும், காவினுள் கற்பம் போலும், கலைகளுள் ஞானம் போலும், ஆவினுள் சுரரான் போலும், அறத்துள் இல்லறம் போலும், நாவினுள் மெய்நா போலும், நாட்டினுள் சோழநாடு போலும் என்ற பெருமையுடைய வெண்ணாறு, கோரையாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையில் யமுனாம்பாள்புரம் என்கிற நீடாமங்கலத்தில் இக்கோவில் அமைந்துள்ளது என பாடியுள்ளாா்.

    மாதந்தோறும் ஆழ்வார் திருநட்சத்திரத்தில் சேவாகாலம் சாற்றுமுறை, தி்ருமஞ்சனம், புனர் பூச நட்சத்திரத்தில் திருமஞ்சனம், மூல நட்சத்திர வழிபாடு, சுவாதி நட்'சத்திர வழிபாடு, சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை, ஆயில்யம் வழிபாடுகள், ரோகிணியில் அந்தந்த சன்னதிகளில் திருமஞ்சனம், ரோகிணி நட்சத்திரத்தில் புத்ர சந்தானகோபால ஹோமம் நடைபெறுகிறது. வியாழக்கிழமைகளில் சந்தானகோபால ஜெபம் செய்து சந்தானராமரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் அடையலாம் என்பது ஐதீகம்.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்து அங்கிருந்து தஞ்சை செல்லும் பஸ்சில் நீடாமங்கலத்துக்கு வந்து சந்தானராமரை தரிசிக்கலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர் செல்லும் பஸ் அல்லது ரெயிலில் பயணித்து நீடாமங்கலத்தில் இறங்கி சந்தானராமரை தாிசிக்கலாம்.

    Next Story
    ×