search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    கேட்ட வரங்களை அருளும் கோட்டை மாரியம்மன்
    X

    கேட்ட வரங்களை அருளும் கோட்டை மாரியம்மன்

    • மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இக்கோவில் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.
    • இந்த கோவிலின் தல வரலாறு என்பது வரலாற்று பின்னணி கொண்டது.

    திண்டுக்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தான். இதன் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது கோட்டை மாரியம்மன் கோவில். இந்த கோவிலின் தல வரலாறு என்பது வரலாற்று பின்னணி கொண்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த காலத்தில், மன்னர் திப்பு சுல்தான் ஆட்சியின் கீழ் திண்டுக்கல் மலைக்கோட்டை இருந்து வந்தது. திப்பு சுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த காலகட்டத்தில் வீரர்கள், தங்களின் காவல் தெய்வமாக மாரியம்மனை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் மாரியம்மன் கோவில் என்று அழைக்கப்பட்ட இந்த கோவில் காலப்போக்கில் மலைக்கோட்டையை பின்னணியாக கொண்டதால், கோட்டை மாரியம்மன் கோவில் என்று மக்கள் அழைக்க தொடங்கினர். கேட்ட வரங்களை, கோட்டை மாரியம்மன் அருளுவார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த கோவிலில், ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அம்மனுக்கு பூத்த மலர் பூ அலங்காரம், கொடியேற்றம், பூச்சொரிதல் விழா, பூக்குழி இறங்குதல், தேரோட்டம், தசாவதாரம், ஊஞ்சல் மற்றும் தெப்ப உற்சவம் என பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த ஆண்டு மாசித்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பூக்குழி இறங்குதல், தேரோட்டம், ஊஞ்சல், தெப்ப உற்சவம், மஞ்சள் நீராட்டு ஆகிய உற்சவங்கள் நடக்க உள்ளது.

    பொதுவாக கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் அந்த வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அக்கினி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், அங்கபிரதட்சணம் செய்தல், கரும்பு தொட்டில் கட்டுதல் உள்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி திண்டுக்கல் நகர மக்களின் காவல் தெய்வமாக இருந்து வரும் கோட்டை மாரியம்மன் கோவிலின் மாசி திருவிழா திண்டுக்கல் மாவட்டத்திலேயே சிறப்பு மிக்க மாசி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களில் தசாவதாரம் கொண்டாடப்படும் ஒரே கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் என மும்மதத்தவரும் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வருகை தருவது கூடுதல் சிறப்பு. இதனால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இக்கோவில் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.

    Next Story
    ×