search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    சுய ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமும்... பரிகாரமும்...
    X

    சுய ஜாதகமும் பிரம்மஹத்தி தோஷமும்... பரிகாரமும்...

    • பரிகார வழிபாட்டு தலங்களுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்து பயன் பெறலாம்.
    • 75 சதவீதம் ஜாதகத்தில் குரு, சனி ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தம் பெற்று இருக்கும்.

    ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் குருவும், சனியும் இணைந்தாலோ, இந்த இரு கிரகங்களுக்கும், சாரப்பரிவர்த்தனை பெற்றாலோ, சமசப்தம பார்வை பெற்றாலோ பிரம்மஹத்தி தோஷம் உள்ளது என்று கூறலாம். 75 சதவீதம் ஜாதகத்தில் குரு, சனி ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தம் பெற்று இருக்கும். இந்த கிரக இணைவு ஜாதகருக்கு யோகமா, சாபமா என்பதை சுய ஜாதகத்தில் 1,5,9 பாவகங்கள் பெற்ற வலிமை, குரு, சனிக்கு அஷ்டம, பாதக ஸ்தானங்களுடன் உள்ள சம்பந்தம், ராகு, கேதுவுடன் உள்ள சம்பந்தத்தை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

    மேலும் இந்த தோஷம் தசா புத்தி அந்தர நாதர்களுடனும், கோட்சாரத்துடனும் சம்பந்தம் பெறும் போதே வினைப்பயனை முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது. ஜோதிட உலகமே தோஷம் என்று கூறும் இந்த குரு, சனி சம்பந்தம் ஒரு சிலருக்கு பெரிய திருப்பு முனையை தந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்த கிரக சம்பந்தம் கூரை வீட்டில் வாழ்ந்தவரை கூட குபேரனாக மாற்றியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய பல்வேறு பரிகார தலங்களுக்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை என்று கூறுபவர்கள் தோஷத்தின் வலிமையை முடிவு செய்த பிறகு எந்த முறையில் தோஷத்தை சரி செய்வது என்பதை தீர்மானிக்க வேண்டும். முதலில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் கோட்சாரத்தில் பாக்கியஸ்தானம் வலுப்பெறும் காலத்தில் வழிபாடு, பரிகாரம் செய்தால் உடனே பலன் கிடைக்கும்.

    குரு, சனிக்கு செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் நீண்ட நாள் வழிபாடும் பெரிய அளவில் செலவில்லாத முறையான அமாவாசை, சிவ வழிபாடு, வயதான ஏழை தம்பதிகளுக்கு உணவு , உடை கொடுத்து ஆசி பெறுதல் போன்ற எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.

    குரு, சனிக்கு ராகு, கேது சம்பந்தம் அல்லது அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் ராமர் வணங்கிய தேவிபட்டிணம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர், கொடுமுடி, ஸ்ரீ வாஞ்சியம், திருபுல்லாணி போன்ற பரிகார வழிபாட்டு தலங்களுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்து பயன் பெறலாம்.

    Next Story
    ×